தேன் உறிஞ்சும் விநாயகர் பற்றி தெரியுமா? வாங்க பாக்கலாம்!

Honey absorbing vinayagar
Honey absorbing vinayagar

திருபுரம்பியம் கோவில் மிகவும் பிரபலமான சிவன் கோவிலாகும். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திரும்புரம்பியம். இக்கோவிலை 9ஆம் நூற்றாண்டில் சோழர்கள் கட்டினார்கள். இக்கோவில் பாடல் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்றாக இருக்கிறது.

ஒருமுறை தனகுப்தன் என்னும் வணிகன் மதுரையிலிருந்து உடல்நல சரியில்லாத தன்னுடைய மாமாவை பார்க்க வந்திருக்கிறான். தனகுப்தனின் மாமாவோ தன்னுடைய பெண்ணை அவன் கையில் ஒப்படைத்துவிட்டு இறந்துவிடுகிறார். திரும்பி மதுரைக்கு போகும் வழியிலே இக்கோவிலில் தங்குகிறார்கள். அப்போது பாம்பு கடித்து தனகுப்தன் இறந்துவிட ஞானசம்பந்தர் திரும்பவும் அவனை உயிர்ப்பித்து அவர்களுக்கு சிவபெருமானையும், வன்னிமரத்தையும் சாட்சியாக வைத்து திருமணமும் செய்து வைக்கிறார். மதுரைக்கு சென்றதும் தனகுப்தனின் முதல் மனைவி இவர்கள் திருமணத்தை ஏற்க மறுக்க சிவபெருமான் வன்னிமரத்துடன் சாட்சி சொல்ல வருகிறார். அதனால் இந்த சிவபெருமானை சாட்சிநாதேஸ்வரர் என்று அழைப்பார்கள். இக்கதை திருவிளையாடல் புராணம் மற்றும் சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

இங்கிருக்கும் விநாயகரை பிரளயம் காத்த விநாயகர் என்றும் அழைப்பார்கள். திரேதா யுகத்தில் உலகத்தை 7 கடல்களும் அழிக்கும் சமயம் சிவபெருமான் திருப்பிரம்பியத்தை காக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால் இக்கோவிலை காக்க சொல்லி அந்த வேலையை விநாயகருக்கு கொடுக்கிறார். விநாயகர் பிரணவ மந்திரமான 'ஓம்'மை பயன்படுத்தி ஏழுகடலையும் ஒரு கிணற்றுக்குள் அடக்கினார். இன்றும் அக்கிணற்றை ஏழுகடல் கிணறு என்றே அழைப்பார்கள். இங்கிருக்கும் விநாயகர் சிலையை மழை கடவுளான வருணபகவானே நிறுவினார். கடலிலேயிருந்து எடுக்கப்பட்ட பொருளான கடல்நுரை, சிப்பி, நத்தை ஆகியவற்றை  வைத்து உருவாக்கினார்கள். அதனால் இவரை பிரளயம் காத்த விநாயகர் என்று அழைப்பார்கள்.

இந்த விநாயகரிடம் இன்னொரு அதிசயம் இருக்கிறது. விநாயகர் சதூர்த்தி முந்தைய நாள், விஷேசமான அபிஷேகம் பிள்ளையாருக்கு நடைப்பெறும். தேனாபிஷேகம் விநாயகருக்கு நடக்கும். தேன் என்றால் கொஞ்சம் அல்ல 100 கிலோ தேனை வைத்து அபிஷேகம் செய்வார்கள். அதிசயம் என்னவென்றால், அத்தனையையும் விநாயகர் சிலை உறிஞ்சி விடும். அபிஷேக முடிவில் விநாயகர் தங்க நிறத்தில் காட்சியளிப்பார். இந்த தேனாபிஷேகத்தை தவிர விநாயகருக்கு வேறு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை.

இதையும் படியுங்கள்:
அறுபடை வீடு கொண்ட விநாயகர்... எங்கிருக்கு தெரியுமா?
Honey absorbing vinayagar

முனிவர்களும் சித்தர்களும் இந்த தேன் உறுஞ்சுவதற்கு பின் பெரிய தத்துவமே இருக்கிறது என்று கூறுகிறார்கள். விநாயகர் மக்கள் மனதில் இருக்கும் அத்தனை அழுக்கு, பொய் போன்றவற்றை உறுஞ்சி எரித்துவிடுவார் என்று கூறுகிறார்கள். அபிஷேகம் முடிந்த பிறகு விநாயகர் சிவந்த தங்க நிறத்தில் காட்சியளிப்பார்.

தக்ஷிணாமூர்த்திக்கான 24 புனிதஸ்தலங்களில் இதுவும் ஒன்றாகும். மரம் வெட்டும் பரம ஏழையான ஒருவர் கோவிலுக்கு தினமும் எரிப்பொருளை வழங்கி வந்துள்ளார். இதனால் அவருக்கு தக்ஷிணாமூர்த்தி வடிவத்தில் சிவபெருமான் காட்சியளித்துள்ளார். இக்கோவில் குழந்தையின்மை, திருமணத்தடை, கல்வி ஆகியவற்றிற்கான பரிகார ஸ்தலமாகும். கோர்ட் வழக்குகள் நடத்திக்கொண்டிருப்போர் இக்கோவிலுக்கு வந்து செவ்வாய்கிழமை சாட்சிநாதேஸ்வரருக்கு தேனாபிஷேகம் செய்வதனால் பிரச்சனை தீரும் என்று நம்பப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com