தண்ணீரில் இருந்து தரிசனம் தரும் நரசிம்மரின் குகை கோயில் எங்குள்ளது தெரியுமா?

Do you know where is the cave temple of Narasimha which offers darshan from the water?
Do you know where is the cave temple of Narasimha which offers darshan from the water?https://epuja.co.in

ந்தியாவில் வித்தியாசமான கோயில்கள் பல இருப்பினும், கடவுளின் மேல் பக்தர்கள் கொண்டிருக்கும் அளவு கடந்த பக்திக்கும் குறைவில்லை என்பது அவர்கள் கடவுளை தரிசிக்கக் கடந்து செல்லும் இடர்களை பார்க்கும்போது புரியும். அந்த வகையில், இடுப்பளவு தண்ணீருக்குள் ஒரு குகைக்குள் சென்று தரிசிக்கும் விதமாக அருள்புரிகிறார் நரசிம்மர். கர்நாடக மாநிலம், பிடார் எனும் தலத்தில் அமைந்துள்ளது இந்த ஜர்னி நரசிம்மர் குகைக் கோயில்.

உலகிலேயே தண்ணீரில் சென்று கடவுளை தரிசனம் செய்து விட்டு வரக்கூடிய ஒரே குகை கோயில் இது மட்டுமே! இந்த பழைமையான கோயில் 300 மீட்டர் குகையில் தோண்டப்பட்ட சுரங்கப் பாதையாக மணிச்சோலா மலைத்தொடரில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது 108 அபிமான க்ஷேத்ரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த நரசிம்மரை தரிசிக்க வேண்டும் என்றால், பக்தர்கள் சிரமத்தை பொருட்படுத்தாது 4 முதல் 5 அடி தண்ணீரில் நடந்து சென்று தரிசித்து விட்டு வருகிறார்கள். குகை என்பதால் போகும் வழிகளில் வவ்வால்கள் தொங்கிக் கொண்டிருக்கும். இருப்பினும் இதுவரை அது யாரையும் தாக்கியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. குகையின் இறுதியில் கருவறையில் நரசிம்மரும், லிங்க வடிவில் சிவபெருமானும் காட்சி தருகிறார்கள். இந்த சிவலிங்கம் ஜராசுரன் வழிபட்ட சிவலிங்கமாகும்.

தண்ணீரில் குகை பயணம்
தண்ணீரில் குகை பயணம்https://www.quora.com

இந்த குகையில் தாராளமாக எட்டு நபர்களால் மட்டுமே நின்று தரினம் செய்ய முடியும். அதனால் மற்ற பக்தர்கள் தன்னுடைய முறை வரும் வரை தண்ணீரிலேயே காத்திருக்க வேண்டும். இங்கே குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டு பக்தர்கள் தண்ணீரிலே நடந்து வரும் காட்சியைக் காணலாம். அந்த குகை கோயிலில் இருக்கும் தண்ணீரில் சல்பர் இருப்பதால் அது பலதரப்பட்ட சரும நோய்களை குணப்படுத்தவல்லது என்று கூறப்படுகிறது. திருமணமான தம்பதிகள் பலர் குழந்தை பேறுக்காக இந்த நரசிம்மரை வேண்டுவது வழக்கமாகும்.

இதையும் படியுங்கள்:
மணத்தக்காளி கீரையில் இத்தனை மகத்துவமா?
Do you know where is the cave temple of Narasimha which offers darshan from the water?

பிரகலாதனின் தந்தை ஹிரண்யகசிபுவை வதம் செய்த பிறகு, இன்னொரு அரக்கனான ஜராசுரா அல்லது ஜலசுரா என்ற அரக்கனையும் வதம் செய்தார் நரசிம்மர். ஜாராசுரன் ஒரு தீவிர சிவபக்தன் ஆவான். அவன் சாகும் தருவாயில், நரசிம்மரை அந்த குகையிலே தங்கி பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கும்படி வேண்டினான். அதையேற்று நரசிம்மரும் அந்த குகையில் வாசம் செய்வதாக ஐதீகம். ஜாராசுரன் இறந்த பின்பு தண்ணீராக மாறி நரசிம்மரின் பாதங்களில் ஓடிக்கொண்டிருப்பதாக புராணம் கூறுகிறது. அதிலிருந்து அந்த நீரூற்று வற்றியதே கிடையாது. இன்றும் தண்ணீர் குறையாமல் அந்த குகை கோயிலில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் கூட்டம் இந்தக் கோயிலுக்கு அதிகம் வருவதற்கான காரணம், இங்கே இருக்கும் நரசிம்மர் சுயம்பு ரூபமாகும். அதனால் இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று மக்களால் நம்பப்படுகிறது. இந்தக் கோயிலுக்குச் செல்வதை பக்தியையும் தாண்டி, சாகசப் பயணமாகவும் செல்ல பலர் ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் தினம் தினம் இந்த நரசிம்மரை தரிசிக்க மக்கள் கூட்டம் வந்தபடியே உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com