நேபாள மக்கள் மிகவும் புனிதமாகக் கருதும், புத்த நீலகண்ட் கோயில் இந்துக்களுக்கான வழிபாட்டுத் தலமாகும். நேபாளத்தின் காட்மண்டு பள்ளத்தாக்கு வடக்கு முனையில் உள்ள சிவப்புரி மலைக்கு கீழே இக்கோயில் அமைந்திருக்கிறது. பாற்கடலில் அனந்த சயனத்திலிருக்கும் பெருமாளை தத்ரூபமாகக் காண்பது போன்ற அதிசய சிலை ஒன்று இங்குள்ள குளத்திற்கு நடுவே மிதந்து கொண்டிருக்கிறது. வானத்தை பார்த்தபடி படுத்திருக்கும் அழகிய மகாவிஷ்ணு சிலை 12 நாகங்களுடன் ஒரு சிறிய குளத்தில் காட்சி தருகிறார்.
இக்கோயிலை 7ம் நூற்றாண்டில், நேபாளத்தை முதலில் ஆண்ட வம்சமான லிச்சாவி வம்ச அரசனான விஷ்ணு குப்தா அவரது ஆட்சிக்காலத்தில் கட்டினார் என்று நம்பப்படுகிறது.
புத்தநீலகண்ட் என்றால், பழைமையான நீலநிற தொண்டையை உடையவர் என்று பொருள். சிலர் புத்தநீலகண்ட் என்ற பெயரை கேட்டதும் இதை புத்தருடன் தொடர்பு படுத்துகிறார்கள். எனினும், புத்தநீலகண்ட் என்பதற்கு சமஸ்கிருதத்தில் நீலநிற தொண்டையை உடையவன் என்று பொருள். பாகவத புராணம், விஷ்ணு புராணம், ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் சொல்லப்படும் சமுத்திர மந்தன் கோசைக்குண்டத்துடன் (Gosaikunda) தொடர்புடையதாக உள்ளது.
புத்தநீலகண்டாவில் இருக்கும் குளத்திற்கு வரும் நீரானது கோசைக்குண்டத்து நீரூற்றிலிருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. அதனாலேயே இக்கோயில் மகாவிஷ்ணுவுக்காக கட்டப்பட்டிருந்தாலும் இக்கோயிலின் பெயர் சிவபெருமானை குறிக்கிறது. சிவபெருமான் விஷத்தை அருந்தியதும், அதை பார்வதி தேவி தடுப்பார். அதனால் அந்த விஷமானது சிவபெருமானின் தொண்டையிலேயே தங்கியதால், அவரின் தொண்டை நீலநிறமாக மாறிவிடும். எனவே, அவருக்கு நீலகண்டர் என்ற பெயரும் உண்டு. இக்கோயிலை புத்தர்களும் வழிபடுகிறார்கள். மகாவிஷ்ணுவின் சிலையை புத்தராக நினைத்து வழிபடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கோயிலில் உள்ள மகாவிஷ்ணு சிலையானது கருங்கல் பாறையால் ஆனதாகும். இந்தச் சிலை 16.4 அடி உயரத்தை கொண்டதாகும். குளத்திற்கு நடுவிலே அமைந்திருக்கும் இந்த பெருமாள் சிலை, சுதர்சன சக்கரம், சங்கு போன்றவற்றை கைகளில் வைத்திருக்கிறார். இச்சிலை 1400 வருடம் பழைமையானது என்று நம்பப்படுகிறது. இக்கோயிலில் உள்ள மகாவிஷ்ணு சிலைதான் நேயாளத்தில் கற்களால் வடிக்கப்பட்ட மிகப்பெரிய சிலையாகும்.
புத்தநீலகண்ட் கோயிலுக்கு வருடா வருடம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். முக்கியமாக, அக்டோபர் - நவம்பர் மாதத்தில், கார்த்திகை 11வது நாளில் நடக்கும் ஏகாதசி மேளாவிற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜா பிரதாப் மல்லாவிற்கு வந்த கனவின்படி ராஜாக்கள் இந்தக் கோயிலுக்கு வந்தால், அவர்கள் இறந்து விடுவார்கள் என்ற சாபம் உள்ளது. அதனால் நேபாளத்தை ஆளும் ராஜாக்கள் யாரும் இந்தக் கோயிலுக்கு வருவதில்லை.
இந்தச் சிலை பல காலங்களாக தண்ணீரிலே மிதந்து கொண்டிருப்பதன் காரணத்தை விஞ்ஞானிகளால் சரியாகச் சொல்ல முடியவில்லை. எனினும் எரிமலையின் கற்களை விட மிகவும் குறைந்த அடர்த்தியை உடைய கற்களால் ஆனது இச்சிலை என்று கூறுகிறார்கள்.
ஒரு சமயம் விவசாயி ஒருவரும் அவருடைய மனைவியும் நிலத்தை உழுதுக்கொண்டிருந்தபோது இச்சிலையின் விரலில் இடித்து இரத்தம் வர ஆரம்பித்துவிட்டதாகவும், அதன் பிறகே இச்சிலையை கண்டுபிடித்து தற்போது இருக்கும் இடத்தில் வைத்ததாகவும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் சிவபெருமானுக்கான திருவிழாவின்போது இச்சிலையின் அருகிலேயே இந்தச் சிலையை போலவே கண்ணாடி பிம்பமாக சிவபெருமானின் உருவம் தண்ணீரிலே தெரியுமாம். இச்சிலை வானை பார்த்தவாறு இருப்பினும் இந்த அதிசயம் நிகழும் என்று அங்கிருக்கும் மக்கள் கூறுகிறார்கள்.
எனவே, இந்த அதிசயக் கோயிலை வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசித்துவிட்டு வருவது சிறப்பாகும்.