அபிஷேக நெய் உருகாத அதிசய சிவன் கோயில் எங்குள்ளது தெரியுமா?

Do you know where is the miraculous Shiva temple where anointed ghee does not melt?
Do you know where is the miraculous Shiva temple where anointed ghee does not melt?https://www.keralatourism.

கேரள மாநிலம், திருச்சூரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் தேக்கின் காடு எனப்படும் சிறிய குன்றில் அமைந்திருக்கிறது திருச்சூர் வடக்கு நாதர் கோயில். இக்கோயில் மூலவர் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்யப்படும் நெய் உருகாமல் அப்படியே நிலைத்திருக்கிறது. கடும் வெயில் காலமானாலும் இந்த நெய் உருகுவதில்லை என்பது ஆச்சரியம்.

ஜமதக்னி முனிவர், ரேணுகா தேவி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் பரசுராமர். இவர் மகாவிஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுபவர். ஜமதக்னி முனிவரிடம் இருந்து காமதேனு பசுவின் சிறப்புகளை அறிந்த கர்த்தவீரியன் என்ற மன்னன், காமதேனு பசுவை திருடி சென்று விட்டான். கர்த்தவீரியனை அழித்து பசுவை மீட்டு வந்தார் பரசுராமர். அதனால் கர்த்தவீரியன்  மகன்களுக்கும் பரசுராமருக்கும் பகை ஏற்பட்டது. இதனால் அவர்கள் பரசுராமனின் தந்தை ஜமதக்னியை கொன்றனர். இதையடுத்து அரச குலத்தவர் மீது கோபம் கொண்ட பரசுராமர், கர்த்தவீரியன்  மகன்களை அழித்ததுடன் நிற்காமல் அரச குலத்தவர்கள் பலரையும் அழித்தார்.

அதனால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க நினைத்த பரசுராமர் சிவபெருமானுக்கு பல கோயில்களை நிறுவ விரும்பினார். அதற்காக கடல் அரசனிடம் சென்றவர், சிவபெருமான் கோயில்களுக்காக புதிய இடத்தை உருவாக்க உதவும்படி வேண்டினர். கடலரசனும் அவரது வேண்டுகோளை ஏற்று பரசுராமரின் கையில் இருந்து வீசி எறிந்து வேள்விக்கான அகப்பை விழுந்த இடம் வரை பின்வாங்கி புதிய நிலப்பரப்பை உருவாக்கிக் கொடுத்தான். புதிய நிலப்பரப்பில் ஒரு மேடான இடத்தில் சிவபெருமானுக்கு முதல் கோயில் அமைக்க விரும்பினர் பரசுராமர். அதன்படி வடக்கு பகுதியில் இருந்த நிலத்தை சிறிய குன்று போல் உயர்த்தி கோயில் அமைத்தார்.

கோயில் தயார் ஆவதற்குள் பரமேஸ்வரன் பார்வதி தேவியுடன் வந்து நின்று விட்டார். பிறகு உள்ளே வேலை நடப்பதைக் கண்டு வெளியிலேயே ஒரு ஆல மரத்தின் கீழ் நின்றார். தனது பரிவார கணங்களில் ஒருவனான சிம்மோதரனை அழைத்து உள்ளே வேலை முடிந்து விட்டதா என்று பார்த்து வருமாறு பணித்தார். அவனும் சென்று அந்த இடத்தை பார்த்துவிட்டு அங்கேயே அமர்ந்து விட்டான். காத்து நின்ற சிவபெருமான் கோபத்துடன் உள்ளே சென்று அவனை காலால் எட்டி உதைத்தார். அந்த இடத்தில் சிம்மோதரனுக்கு ஒரு கோயில் இருக்கிறது. பின்னர் பரமேஸ்வரன் அங்கிருந்த ஸ்தம்பத்தில் ஜோதி வடிவமாக ஐக்கியமாகிவிட்டார். இந்த இடமே பரமேஸ்வரனின் மூலஸ்தானம் ஆயிற்று. இங்கு அவரது கோபத்தை தணிக்க நெய்யினாலேயே அபிஷேகம் செய்கின்றனர். 12 அடி உயரம் 25 அடி அகலம் என்னும் அளவில் அமைந்த இந்த லிங்கம் முழுவதும் நெய்யாலானது.

அமர்நாத் கோயில் லிங்கத்தை பனி லிங்கம் என்று அழைப்பது போல், இந்தக் கோயில் இறைவனை நெய் லிங்கம் என்ற  சிறப்புப் பெயரால் அழைக்கின்றனர். அவர் சலவைக்கல்லால் அமைந்தவர் போல் காணப்படுகிறார். இந்த சிவலிங்கம் எத்தனை டிகிரி வெப்பம் ஏறினாலும் அதன் மீது பூசப்படும் நெய் உருகுவதில்லை. பன்னீர், சந்தனம், அபிஷேகங்களும் செய்யப்படுவதுண்டு. கோடைக்காலத்தின் வெப்பமும், மூலவருக்குக் காட்டப்படும் தீபாராதனையில் இருந்து வரும் வெப்பமோ இந்த நெய்யை உருகச் செய்வதில்லை. இத்தலம் ஆதியில் வடக்குன்று நாதர் என்ற பெயரில் இருந்தது. பின்னர் அப்பெயர் மருவி, வடக்கு நாதர் என்று ஆகிவிட்டது.

எந்த கோயிலுக்குப் போனாலும் நாம் முதலில் காண்பது கணபதியைத்தான். ஆனால், இந்த கோயிலில் முதல் தரிசனம் நெய்யுடன் பளிங்கு போல் மின்னும் வடக்கு நாதரைத்தான். அவரையும் பிரதட்சணம் செய்யாமல் பிரதோஷ விரதம் போல் முக்கால் சுற்றுச் சென்று விட்டு பின்பு திரும்பி  வரவேண்டும். அதன் பின்புதான் கணபதியை தரிசனம் செய்ய வேண்டும். பிறகு பார்வதியை தரிசனம் செய்துவிட்டு வந்த வழியே திரும்பி கடைசியில் முதலில் பார்த்த வடக்குநாதரையே தரிசிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வாக்காளர் அடையாள அட்டை உருவானது எப்படி தெரியுமா?
Do you know where is the miraculous Shiva temple where anointed ghee does not melt?

மேற்கு திசையில் கோபுரத்திற்கு அருகில் ஒரு சதுரமான கல் இருக்கிறது. அதை நான்கு பக்கம் மேடை கட்டி காத்து வருகிறார்கள். கோயில் தரிசனம் முடிந்தபின் பிரசாதத்தில் கொஞ்சத்தை இதில் எறிய வேண்டும். இந்த கல்லின் பெயர், ‘கலிக்கல்.’ இது வளர்ந்துகொண்டே வருகிறது என்று நம்புகிறார்கள். அதனால் அதன் மீது பிரசாதம் எறிந்து வளர விடாமல் செய்கிறார்களாம். இதைத் தவிர ஆதிசங்கரர் சமாதி ஆன இடமும் அதற்கான ஆலயமும் இங்கு உள்ளது. இந்த இடத்தை சங்கு சக்கரம் என்பர்.

மூலவர் லிங்கத்தின் மேல் அபிஷேகம் செய்யப்பட்ட நெய்யை வாங்கி சாப்பிட்டால் நாள்பட்ட நோய்கள் தீரும். மூலவருக்கு இரவு எட்டு மணிக்கு மேல் நடைபெறும் ‘திருப்புகா’ வழிபாடு எனும் வழிபாட்டை தொடர்ந்து 41 நாட்கள் தரிசித்து வந்தால் வழிபடுபவர்கள் நினைக்கும் அனைத்தும் வெற்றி அடையும். இரவு பூஜையின்போது தேவர்கள் பலர் இந்தக் கோயிலுக்கு வருகை தருவதால், பக்தர்கள் நடுவில் வெளியேற அனுமதி இல்லை. எல்லாம் முடிந்த பின்னர்தான் வெளியில் வர முடியும். இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு அவர்களின் மகிழ்ச்சிக்கு தேவையான அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com