சுவாமி ஐயப்பன், மஹிஷியை வதம் செய்வதற்காக சென்று தங்கிய ஆயிரம் ஆண்டுகள் பழைமையான 'புத்தன் வீடு' இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும், மஹிஷியை வதம் செய்ததாகச் சொல்லப்படும் வாளையும் இங்கே ஒரு சின்ன பூஜையறையில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். இதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
தனது தாய் பிணி தீர்க்க புலிப்பால் தேடி எருமேலிக்கு வந்தார் ஐயப்பன். அந்த அடர்ந்த காட்டில் ஒரு சிறிய மண் வீட்டில் விளக்கு ஒன்று எரிவதைக் காண்கிறார் ஐயப்பன். அந்த வீட்டில் ஒரு பாட்டி இருக்கிறார். “இந்த இரவு நான் இங்கே தங்கிக்கொள்ளவா?” என்று அந்தப் பாட்டியிடம் கேட்கிறார் ஐயப்பன். அந்தப் பாட்டிக்கு வந்திருப்பது அவதார புருஷன் ஐயப்பன் என்று தெரியாது. “சரிப்பா! இரவு இங்கே தங்கிக்கொள்’ என்று சொல்லிவிட்டு உண்ண உணவும், இருக்க இடமும் கொடுக்கிறார்.
அது மட்டுமில்லாமல், “இந்த ஊரில் உள்ள நிறைய ஆண்கள் ஊரை காலி செய்து விட்டு போய்விட்டார்கள். அதற்குக் காரணம் மகிஷி என்னும் அரக்கி இருப்பதுதான். எனவே, இரவு இங்கே பார்த்து பத்திரமாக தங்கிக்கொள்” என்று அறிவுரை சொல்லிவிட்டுச் செல்கிறார்.
அந்த இரவு ஐயப்பன் வீட்டை விட்டுச் சென்று மகிஷியை வதம் செய்கிறார். அவளை வதம் செய்த வாளைக் கொண்டு வந்து அந்த வீட்டின் பின்புறம் இருந்த குளத்தில் கழுவுகிறார். அந்தக் குளம் முழுவதும் சிவப்பு நிறமாக மாறிவிடுகிறது. அந்தக் குளத்தின் பெயர்தான், ‘ருத்ர குளம்.' அந்த வாளை எடுத்து வந்து பாட்டியின் வீட்டிற்குள் வைத்து விட்டு ஐயப்பன் மீண்டும் காட்டிற்குள் சென்று விடுகிறார்.
மறுநாள்தான் பாட்டிக்கு இந்த விவரம் அனைத்தும் தெரிய வருகிறது. அன்றிலிருந்து இன்றுவரை ஐயப்பன் தங்கியிருந்த புத்தன் வீட்டில் வாளை வைத்து பூஜை செய்து வருகிறார்கள். மகிஷியை ஐயப்பன் வதம் செய்யப் பயன்படுத்திய வாள் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. அந்த புத்தன் வீடு எருமேலியில் இன்றும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ‘அய்யோ, அப்பா’ என்று அழைக்காமல் ‘ஐயப்பா’ என்று அவனை அழைத்துப் பாருங்கள், நொடியில் உங்கள் துன்பங்கள் எல்லாம் பனிப்போல விலகிவிடும்.