ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூர் அருகே உள்ள நத்வாரா (Nathdwara) நகரில் 369 அடி உயர சிவன் சிலை 16 ஏக்கர் பரப்பளவில் மிகவும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் உலகின் மிக உயரமான சிவன் சிலை என்று கூறப்படுகிறது.
மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள யோக நிலையில் இருக்கும் இந்த சிலையை 20 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து கூட நம்மால் பார்க்க முடியும். இந்த சிவன் சிலைக்கு உள்ளேயே மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால் இரவு நேரத்திலும் பார்க்கும் வகையில் மின்னலங்காரமும் செய்யப்பட்டுள்ளது.
பத்தாண்டுகளில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிலையின் உள்ளேயே லிப்ட்டுகள் அமைக்கப்பட்டு மேலே ஏறி பார்க்கும் வகையில் உள்ளது. இப்படி லிஃப்ட்டில் சென்று இந்த சிலையை கண்டு தரிசிக்க நபர் ஒருவருக்கு 400 ரூபாய் வீதம் வசூலிக்கப்படுகிறது. சிலைக்குள்ளேயே ஒரு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.
மூவாயிரம் டன் இரும்புப் பொருட்கள் மற்றும் ஸ்டீவ், 2.5 லட்சம் கன டன் கான்கிரீட் மற்றும் மணல் பயன்படுத்தி இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. 250 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்றைக் கூட தாங்ககூடிய அளவில் இந்தச் சிலை இருப்பதாகக் கூறப்படுகிறது.
‘விஸ்வஸ் ஸ்வரூபம்’ என்று அழைக்கப்படும் இந்த பிரம்மாண்ட சிவன் சிலை ஒரு குன்றின் மீது தியானம் செய்வது போல் அமைக்கப்பட்டுள்ளது. ‘தத் பதம் சன்ஸ்தான்’ என்ற அமைப்பு இந்த சிவன் சிலையை அமைத்திருக்கிறது.
நுழைவு வாயிலில் ஆஞ்சனேயர் சிலை மிக அழகாக பெரிய அளவில் உள்ளது. விநாயகர் சிலையும் மிகப் பெரியதாக உள்ளே அமைந்திருக்கிறது. 25 அடி உயரத்தில் மிகவும் பிரம்மாண்டமான நந்தி சிலையும் உள்ளது. 1500 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்து 351 அடி உயரத்தில் லிப்ட் மூலம் சென்று சிவபெருமானுக்கு ஜல அபிஷேகம் செய்யும் வசதியும் உள்ளது. குழந்தைகள் உள்ளேயே விளையாட விஸ்தாரமான இடங்களும் உள்ளன. மேலும், ஸ்னோ பார்க், வேக்ஸ் மியூசியம், மாலையில் லைட் & சவுண்ட் ஷோவும் நடைபெறுகிறது. இளைப்பாறவும், பசிக்கு உண்ண ஸ்டால்களும் கூட இங்கு உள்ளன.