பாண்டிய மன்னனிடம் அமைச்சராக பணியாற்றியவர் மாணிக்கவாசகர். மன்னன் ஒரு சமயம் போருக்குத் தேவையான குதிரைகளை வாங்கி வரும்படி பெரும் தொகை ஒன்றை மாணிக்கவாசகரிடம் கொடுத்து அனுப்பி வைத்தார். குதிரை (பரி) வாங்க சென்ற மாணிக்கவாசகர் நாட்டைத்தாண்டி சில மைல் தொலைவு சென்றபோது ஒரு குருக்கத்தி மரத்தடியில் வயதான முனிவர் ஒருவர் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார்.
இதனைப் பார்த்தவுடன் மாணிக்கவாசகருக்கு அதற்கு மேல் அடியெடுத்து வைக்க மனமின்றி, அந்த முனிவரிடம் சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். முனிவரின் அரிய கருத்துக்களைக் கேட்ட அமைச்சர் மாணிக்கவாசகருக்கு அரச பதவியிலிருந்து சிவனடியாராக மாறிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
இப்படி ஒரு எண்ணம் தோன்றுவதற்குக் காரணம் என்ன? என்று அவர் யோசித்துக் கொண்டிருக்கும்போது. இவர் யார்? இவர் எங்கிருந்து வந்தார்? என்று பல கேள்விகள் மாணிக்கவாசகர்க்குத் தோன்றியது. அமைச்சரின் குழப்பத்தைப் போக்க முனிவர் தனது உண்மையான ரூபத்தை அவருக்குக் காட்டினார்.
அவர் வேறு யாருமில்லை, சாட்சாத் சிவபெருமானே என்று மாணிக்கவாசகர் உணர்ந்தார். சிவபெருமான் தனக்குக் காட்சியளித்ததால் அதற்கு மேல் அவரால் வேறு எதிலும் மனதைத் செலுத்த முடியாமல், அதே இடத்திலேயே சிறிது காலம் தங்கி விட்டார். அது மட்டுமின்றி தான் குதிரை வாங்க கையில் வைத்திருந்த பணத்தில் அந்த இடத்திலேயே சிவபெருமானுக்கு ஒரு கோயிலையும் கட்டி முடித்தார்.
சில காலம் கடந்ததும் பாண்டிய மன்னனுக்கு, ‘குதிரை வாங்கச் சென்ற அமைச்சர் இன்னும் வரவில்லையே’ என்று தோன்றியது. இதனால் தனது பணியாட்களை விட்டு மாணிக்கவாசகரைப் பார்த்து விட்டு வரும்படி அனுப்பி வைத்தார்.
அமைச்சரைத் தேடிச் சென்ற அரண்மனை பணியாட்கள் மாணிக்கவாசகரைக் கண்டதோடு அல்லாமல் அவர் குதிரை வாங்க கொண்டு சென்ற பணத்தில் கோயில் கட்டிக் கொண்டிருக்கிறார் என்பதையும் அறிந்தனர். அதை மன்னனிடமும் தெரிவித்தனர்.
மன்னன், ‘மாணிக்கவாசகர் வந்தால் குதிரையோடு வரவேண்டும், இல்லை என்றால் அவர் உயிரை விட வேண்டும்’ என்று கட்டளை பிறப்பித்து பணியாட்களை மீண்டும் அனுப்பினார். இதனைக் கேட்ட மாணிக்கவாசகருக்கு என்ன செய்வது என்று புரியாமல், "சிவபெருமானே நீ இருக்கையில் எனக்கு இந்த கதி நேரலாமா?” என்று சிவனிடமே முறையிட்டார்.
மாணிக்கவாசகரின் வேண்டுதலைக் கேட்ட சிவபெருமான் "நீ ஒன்றும் கவலை கொள்ளாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறி அந்த இடத்தில் சுற்றிக் கொண்டிருந்த நரிகளை எல்லாம் குதிரைகளாக (பரிகளாக) மாற்றினார்.
அந்தக் குதிரைகளுடன் மாணிக்கவாசகர் மன்னனை சந்திக்கச் சென்றார். மன்னனும் அந்த குதிரைகளைப் பார்த்ததும் மிகுந்த ஆனந்தம் அடைந்ததோடு, குதிரைகளைக் கொண்டுபோய் கட்டுத்தரையில் அடைக்க உத்தரவிட்டான்.
கட்டுத்தரையில் அடைக்கப்பட்ட குதிரைகள் எல்லாம் இரவு நேரத்தில் மீண்டும் நரியாக மாறி ஊளையிடத் தொடங்கியது. இதனைப் பார்த்த மன்னர் இந்த மாணிக்கவாசகர் நம்மிடமே நாடகம் ஆடுகிறார் என்று நினைத்து அவரை சிறையில் அடைத்தான். இதனால் கோபமுற்ற சிவபெருமான் மதுரையில் வெள்ளத்தை ஏற்படுத்தி மாணிக்கவாசகரின் சிவ பக்தியை எல்லோருக்கும் அறிய வைத்து அவரை சிவ வழியில் செல்ல அருளினார் என்பது புராணம்.