தாயாருக்காக ஆதிசங்கரர் கட்டிய திருக்கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி
காலடி ஸ்ரீ கிருஷ்ணர் கோயில்
காலடி ஸ்ரீ கிருஷ்ணர் கோயில்https://www.top-rated.online

மூன்று வயதிலேயே தந்தையை இழந்த சங்கரர், தாய் ஆரியாம்பாள் அன்பிலேயே வளர்ந்து வந்தார். தாயிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்த அவர், சிறு வயதிலேயே வேதங்களைக் கற்றுத் தேர்ச்சி அடைந்தார். அவரது தாய் அவருக்குத் திருமணம் செய்துவைக்க விரும்பியபோது, திருமணம் செய்ய மறுத்து துறவு மேற்கொள்ளப் போவதாக சொன்னார். ஆனால், அவரது தாய் அதற்கு அனுமதிக்கவில்லை. இந்நிலையில், ஒரு நாள் ஆதிசங்கரர் தனது தாயுடன் ஆற்றில் குளிக்கச் சென்றிருந்தார். அப்போது ஆற்றில் இருந்த முதலை அவரது காலை கவ்வி  இழுத்தது. மகனின் நிலையைக் கண்ட தாய் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்தும் சங்கரரை காப்பாற்ற முடியவில்லை.

உடனே சங்கரர் தனது தாயிடம், “அம்மா என்னை துறவு செல்ல தாங்கள் அனுமதித்தால் இந்த முதலை என்னை விட்டு விடும். இல்லையேல் இது என்னை விழுங்கிவிடும்” என்றார். அதைக் கேட்டு பயந்துபோன அவரது தாய், தனது மகன் உயிர் பிழைத்தால் போதும் என்று நினைத்து துறவு செல்ல அனுமதித்தார். என்ன ஆச்சரியம், முதலை சங்கரரின் காலை விட்டுவிட்டது. அதன் பிறகு துறவு மேற்கொண்ட சங்கரர் தாயின் மேல் கொண்ட அன்பால் அடிக்கடி அவரை வந்து சந்தித்துக் கொண்டிருந்தார்.

சங்கரரின் தாய் சற்றுத் தொலைவில் இருக்கும் பெரியாறு ஆற்றில் தினமும் குளித்து அங்கிருக்கும் கண்ணனை வழிபட்டு வரும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். வயதான காரணத்தால் அந்த வழக்கத்தைக் கடைபிடிப்பதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டது. இதனை ஒருமுறை சங்கரரிடம் சொல்லி வருந்தினார். அதைக் கேட்டு சங்கரர் கண்ணனை நினைத்து வணங்கினார். அப்பொழுது, ‘குழந்தையே நீ காலடி எடுத்து வைக்கும் இடத்திற்கு பெரியாறு தேடி வரும்’ என்று அசரீரி கேட்டது. அதனைக் கேட்ட சங்கரரும் தனது காலடியை எடுத்து வைக்க பெரியாறு சங்கரரின் தாய் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது. அதுவரை, ‘சசலம்’ என்று அழைக்கப்பட்ட அந்த கிராமம் அதன் பிறகு, ‘காலடி’ என்று பெயர் மாற்றம் பெற்றது.

ஸ்ரீ ஆதிசங்கரர்
ஸ்ரீ ஆதிசங்கரர்https://www.linkedin.com

பெரியாற்றில் இருந்து பிரிந்து வந்த அந்த ஆறு பூர்ணா ஆறு என்று அழைக்கப்படுகிறது. சங்கரர், தனது தாயின் விருப்பத்திற்கு ஏற்ப அவர் வழிபடுவதற்காக அங்கு கண்ணனுக்கு ஒரு கோயிலைக் கட்டி அதில் கண்ணன் சிலையையும் நிறுவினார். ஆதிசங்கரர் நிறுவிய இந்தக் கோயில் தற்போது திருக்காலடியப்பன் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஊருக்குப் போகப் போகிறீர்களா? இதைப் படிச்சிட்டு நிம்மதியாப் போங்க!
காலடி ஸ்ரீ கிருஷ்ணர் கோயில்

இந்தக் கோயிலில் ஆதிசங்கரரின் சன்னிதியும் அவரது தாய் ஆரியாம்பாளின் சமாதியும் இருக்கின்றன. ஆதிசங்கரரின் ஜயந்தி  திருநாளான இன்று, ஆதிசங்கரர் தனது தாயாருக்காகக் கட்டிய திருக்கோயிலை தரிசித்து அவரது அருளைப் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com