முகம் வியர்க்கும் அதிசய அம்மன் கோயில் எங்கிருக்கிறது தெரியுமா?

Punnainallur mariamman temple
Punnainallur mariamman templeImage Credits: Maalaimalar

புன்னைநல்லூர் முத்துமாரியம்மனுக்கு முத்து முத்தாக வியர்க்கும் அதிசயம் இக்கோயிலில் நடைபெறுகிறது. அதனாலேயே இக்கோயில் அம்பாளுக்கு முத்து மாரியம்மன் என்று பெயர் வந்தது. அது மட்டுமில்லாமல் முத்து முத்தாக போட்ட அம்மைகளும் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் குணமாகும் என்று சொல்லப்படுகிறது.

இங்குள்ள அம்பாளுக்கு அபிஷேகம் கிடையாது. இக்கோயில் மூலவர் புற்று மண்ணால் ஆனதால் 5 வருடத்திற்கு ஒருமுறை 48 நாட்கள் தைலத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில் தஞ்சாவூர் - திருவாரூர் சாலையில், தஞ்சையிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் புன்னைநல்லூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. தஞ்சையிலிருந்து இங்கு செல்ல ஆட்டோ மற்றும் பேருந்து வசதிகள் உள்ளன.

இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால், ஐந்து வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் தைலக் காப்பின்போது, அம்பாளுக்கு வெப்பம் அதிகரிக்கும். அச்சமயம் தயிர்சாதம், இளநீர் போன்றவை நிவேதனமாகப் படைக்கப்பட்டு அம்பாளின் வெப்பத்தை தணிப்பார்கள். ஜவ்வாது, சாம்பிராணி, புனுகு ஆகியவை போட்டு அம்மனின் திருமேனியை மேலும் குளுமைப்படுத்துவார்கள்.

கண் பார்வை, மாங்கல்ய பாக்கியம், உடல் கோளாறுகள் போன்ற பிரச்னைகள் இருந்தால், இங்குள்ள வெல்லக்குளத்தில் வெல்லத்தைக் கொட்டுகிறார்கள். வெல்லம் நீரில் கரைவது போல உடல் பிரச்னைகள், நோய்கள் எல்லாம் கரைந்து போகிறது என்று நம்பப்படுகிறது. ஒரு காலத்தில் இவ்விடத்தில் புன்னை மரக்காடுகள் இருந்ததால், புன்னைநல்லூர் என்ற பெயர் வந்தது.

குழந்தைகளுக்கு நோய் வந்தால் இங்குள்ள பேச்சியம்மன் சன்னிதியில் வேண்டிக்கொண்டு படையல் போட்டால் நோய் நொடி அனைத்தும் பறந்துவிடுவதாகக் கூறுகிறார்கள்.

ஒரு சமயம் தஞ்சகன் என்னும் அசுரனை அழிக்க தஞ்சாவூரில் தோன்றிய சிவபெருமான் எட்டு திசைகளிலும் எட்டு சக்திகளை உருவாக்கி நடுவிலே வைத்து தஞ்சகனை அழிக்கிறார். சிவபெருமான் உருவாக்கிய எட்டு அம்மனையும் சோழர்கள் எல்லை சாமிகளாக கும்பிட்டு வந்துள்ளனர். பிறகு காடு மண்டி இவர்களுக்கு வழிபாடு இல்லாமல் போகும்போது, நாயக்கர்களை தோற்கடித்து மராட்டியர்கள் வருகிறார்கள். மராட்டியர்கள் வந்த பிறகே இங்கு கோயிலானது கட்டப்படுகிறது.

1680ல் தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர் சமயபுரத்திற்கு வந்து அம்மனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படி ஒருமுறை அம்மனை வழிபட்டு விட்டு கோயிலிலேயே தங்கி விடுகிறார். அப்போது அவர் கனவில் புன்னைநல்லூர் மாரியம்மன் தோன்றி, புன்னைநல்லூரில் இருக்கும் தனக்கு ஒரு கோயில் கட்டும்படி கேட்கிறாள். பிறகு அம்மன் சொன்ன இடத்தில் தேடிப்பார்க்கும்போது அங்கே புற்று மட்டுமே இருந்திருக்கிறது. அதைச் சுற்றி கோயில் கட்டி வழிபட்டு வந்தனர்.

இதையும் படியுங்கள்:
'கல்கி' அவதரிக்கப்போவது எப்போது தெரியுமா?
Punnainallur mariamman temple

ஒரு சமயம் அதே மராத்திய வம்சத்தில் வந்த துலஜா என்னும் மன்னனின் பிள்ளைக்கு அம்மை போட்டு கண் பார்வை பறிபோனது. அப்போது அவர் கனவில் தோன்றிய புன்னைநல்லூர் மாரியம்மன் தனது கோயிலுக்கு வந்து வேண்டிக்கொண்டால் பிள்ளையின் கண் பார்வையை மீட்டுக்கொடுப்பதாகக் கூறினாள். அதைப்போலவே துலஜா ராஜாவும் அம்மன் கோயிலுக்கு வந்து வேண்டிக்கொள்ள, குழந்தைக்கு கண் பார்வை திரும்பக் கிடைத்தது. அவரே இக்கோயிலை பிறகு எடுத்துக் கட்டினார் என்ற வரலாறும் உண்டு. இக்கோயிலை பார்க்கும்போது ஏதோ அரண்மனைக்குள் வந்தது போன்ற உணர்வைத் தரும். ஏனெனில், இக்கோயிலின் கட்டடக்கலை மராத்தியர்களுடையது. இத்தகைய சிறப்பு வாய்ந்த புன்னைநல்லூர் மாரியம்மனை ஒருமுறையாவது சென்று தரிசித்துவிட்டு வருவது நிச்சயமாக நன்மை பயக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com