Sri balamurugan temple
Sri balamurugan templeImage Credits: Daily Thanthi

பழநியிலிருந்து முருகன் தாண்டிக் குதித்த இடம் எங்குள்ளது தெரியுமா?

Published on

‘குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்’ என்பதற்கு சான்றாக முருகப்பெருமான் பழநி மலையின் மீதிருந்து தாண்டிக் குதித்து வந்த மலைதான் கொடைக்கானலில் உள்ள தாண்டிக்குடி தலமாகும். இத்தலத்தின் சிறப்பினைக் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

ஒரு சமயம் அகத்தியரின் சீடனான இடும்பன் கயிலாயத்திலிருந்து சிவகிரி, சக்திகிரி என்று இரு மலைகளை சுமந்து வந்தான். அந்த மலைகளில் ஒன்றுதான் பழனிமலை. மற்றொன்று கொடைக்கானலில் இருக்கும் தாண்டிக்குடி மலையாகும். முருகப்பெருமான் இடும்பனிடம், ‘பழநி மலையில் இருந்து இந்த மலைக்கு தான் எப்படி வருவது?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு இடும்பன், ‘தாண்டிக்குதி’ என்று கூறியிருக்கிறார் இடும்பன்.

முருகப்பெருமானும் அதைக்கேட்டு தாண்டிக் குதித்த தலம்தான் தாண்டிக்குதியாகும். அந்தப் பெயரே காலப்போக்கில் மருவி தாண்டிக்குடியானது. இங்கே பாலமுருகன் தாண்டிக்குதித்தபோது ஏற்பட்ட பாதச்சுவடுகளை இன்றும் காண முடியும்.

முருகன் வந்த பிறகு அவருடைய வாகனங்களும் வந்தாக வேண்டுமல்லவா? இங்கிருக்கும் பாறைகளில் வேல், மயில், சேவல், பாம்பு ஆகியவற்றின் படிமங்கள் இயற்கையாகவே உருவாகியிருப்பதைக் காண முடியும். இந்தக் கோயிலுடைய சிறப்பே மலை உச்சியில் 1400 அடி உயரத்தில் இருக்கும் எல்லாக் காலங்களிலும் சுரக்கும் சுனைதான். இந்த சுனை நீரை முருகன் பாதங்களில் வைத்து வணங்கி குடிப்பவர்களுக்கு கர்ப்பப்பை பிரச்னை நீங்கி குழந்தைப் பேறு வாய்க்கும் என்றும் இன்னும் தீராத பல நோய்கள் தீரும் என்பதும் இந்தக் கோயிலில் ஐதீகம்.

ஒவ்வொரு மாதமும் கிருத்திகையன்று இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அப்போது இத்தல முருகப்பெருமானை ராஜ அலங்காரத்தில் தரிசிக்கலாம். ஆடிக் கிருத்திகை இங்கே விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அச்சமயம் தேரில் வலம் வரும் முருகப்பெருமானை தரிசித்தால், பிள்ளை வரமும் மற்றும் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் தடைகளும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஆங்கிலேயர்கள் நம்மிடமிருந்து எடுத்துச் சென்ற 4 விலை மதிப்பில்லாத பொருட்கள்!
Sri balamurugan temple

இடும்பன், நவக்கிரகம், பைரவர், கணபதி ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் அமையப் பெற்றிருக்கிறது. இந்தக் கோயிலில் இருக்கும் விபூதிக்குழியில் இயற்கையாகவே தோன்றும் விபூதியை பிரசாதமாக மக்கள் எடுத்துச் செல்கிறார்கள். இதுவும் இக்கோயிலில் விசேஷமாகக் கருதப்படுகிறது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இக்கோயில் திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலாகும். எனவே, நீங்களும் ஒருமுறை இக்கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

logo
Kalki Online
kalkionline.com