அர்த்தநாரீஸ்வரராக அருளும் தட்சிணாமூர்த்தி எங்கு காட்சி தருகிறார் தெரியுமா?

Ardhanareeswara Dakshinamurthy
Ardhanareeswara Dakshinamurthyhttps://tsaravanan.com

புதுக்கோட்டை - கீரனூர் சாலையில் அமைந்துள்ளது திருவேங்கைவாசல் திருத்தலம். இறைவன் புலியாக வந்து காமதேனுவின் சாபம் நீங்கப் பெற்றதால் இத்தலத்து இறைவனின் திருநாமம் வியாக்ரபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் பிரகதாம்பாள். இத்தலத்து  தட்சிணாமூர்த்தி ஒரு பாதி ஆண் தன்மையும் மறு பாதி பெண் தன்மையும் கொண்டு சிவசக்தியாக, அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தில் சதுர பீடத்தில் அமர்ந்து காட்சி தருவது தனி சிறப்பு.

இந்த அர்த்தநாரீஸ்வரர் தட்சிணாமூர்த்தி அபய வரத ஹஸ்தங்களுடன் ஒரு கரத்தில் ருத்ராட்சமும் மற்றொரு கரத்தில் சர்ப்பமும் ஏந்தி காட்சி தருகிறார். இத்தலம் வந்து அர்த்தநாரீஸ்வரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் குழந்தைகளின் ஞாபக சக்தி பெருகும், தொழில் விருத்தி ஆகும் என்பது நம்பிக்கை. இத்தல மூலவர் வியாக்ரபுரீஸ்வரர் மேற்கு நோக்கிக் காட்சி தருகிறார். எண்ணூறு ஆண்டுகள் பழைமையான வன்னி மரம் இத்தலத்தில் தல விருட்சமாக உள்ளது.

ஒரு சமயம் காமதேனு இந்திர சபைக்கு தாமதமாக வந்ததால் கோபமடைந்த இந்திரன், ‘பூலோகத்தில் பசுவாகப் பிறப்பாய்’ என சாபமிட்டதாக தல வரலாறு கூறுகிறது. அதன்படி பூலோகத்தில் கபிலவரத்தை அடைந்த காமதேனுவும் தவத்திலிருந்த கபில முனிவரிடம் சாப விமோசனத்திற்கு வழி கேட்டதாகவும், அவரது வழிகாட்டுதலின்படி தனது இரு காதுகளில் கங்கை நீரை நிரப்பி கொண்டு வந்த பசு சுயம்பு மூர்த்தியான சிவபெருமானுக்கு நாள்தோறும் அபிஷேகம் செய்து வந்தது.

பசுவின் பக்தியை சோதிக்க விரும்பிய ஈசன், புலி வடிவம்  எடுத்து பசுவை கொன்று பசியாற முற்பட்டார். தான்  சிவ பூஜையை முடித்துவிட்டு வரும்போது தன்னை உண்டு பசியாறுமாறு அந்தப் பசு கேட்டுக் கொண்டது. அதன்படி தனது கடமைகளை முடித்து திரும்பிய பசு மீது புலி வடிவத்தில் இருந்த சிவன் பாய்வது போல் சென்று ரிஷப வாகனத்தில் பார்வதி தேவியுடன் காட்சியளித்து காமதேனுவுக்கு மோட்சமளித்தார். புலியின் உருவத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்ததால் அந்த இடம் திருவேங்கைவாசல் என்று போற்றப்படுகிறது. உயிரே போவதானாலும்  கொடுத்த வாக்கை காப்பாற்ற முற்பட்டால் இறைவன் மனம் மகிழ்வார் என்பதை உணர்த்தும் விதமாக இந்தத் தல வரலாறு உள்ளது.

கோயில் சுற்றுப்பிராகாரத்தில் எண்கோண வடிவில் தவக்கோல சன்னிதி உள்ளது. முருகப்பெருமான் தாமரை மீது ஒரு காலை மடித்து மறுகாலை நீட்டி அமர்ந்து தவம் புரியும் கோலத்தை தரிசிக்கலாம். இவரிடம் வேல் இல்லை, மயிலும் இல்லை. ஆண்டி கோலத்திலும், ராஜ அலங்காரத்திலும் முருகனை வழிபட்டு வந்த நமக்கு இப்படி தவக்கோலத்தில் முருகனை தரிசிப்பது வித்தியாசமான அனுபவமாகும்.

இதையும் படியுங்கள்:
ஹைலூரோனிக் அமிலம் என்றால் என்னவென்று தெரியுமா?
Ardhanareeswara Dakshinamurthy

இங்குள்ள நவக்கிரக சன்னிதியில் நவக்கிரகங்கள் அமையவில்லை. அதற்கு பதிலாக ஒன்பது விநாயகர்கள் அமர்ந்துள்ளனர். எல்லா கோயில்களிலும் கருவறையின் முன்னால் இருபுறமும் துவார பாலகர்கள்  இருப்பார்கள். இத்தலத்தில் ஒருபக்கம் துவாரபாலகராக முருகப்பெருமானும் மறுபக்கம் விநாயகரும் இருக்கிறார்கள்.

இக்கோயிலின் எந்த ஒரு சன்னிதியில் இருந்து பார்த்தாலும் மற்றொரு சன்னிதியை பார்க்கும் வகையில் அமைந்துள்ளது சிறப்பு. சிவன் சன்னிதியில் இருந்து பார்த்தால் விநாயகர் சன்னிதி, முருகன் சன்னிதியிலிருந்து பார்த்தால் காலபைரவர் சன்னிதியும் மகாவிஷ்ணுவின் சன்னிதியில் இருந்து பார்த்தால் மகாலட்சுமி சன்னிதியும் தெரியுமாறு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு நோக்கி அமைந்த மூலவரின் மீது மாலை வேளையில் சூரியனின் கதிர்கள் தினசரி பட்டு சூரிய பூஜை நடப்பதை காணக் கண்கோடி வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com