ஹைலூரோனிக் அமிலம் (Hyaluronic Acid) என்பது சருமம், கண்கள் மற்றும் மூட்டுகளில் இயற்கையாக இருக்கும் ஒரு பொருள். இது மிக அதிகளவு தண்ணீரை உறிஞ்சி எடுக்கும் திறன் கொண்டது. அந்த நீரை திசு உயிரணுக்களுக்குள் சேமித்து வைத்து கண்கள் மற்றும் சருமத்தை ஈரப்பதமாக வைக்கவும், மூட்டுகளுக்கிடையே குஷன் போல் அமர்ந்து உராய்வு ஏற்படாமல் தடுக்கவும், செல்களின் வேலைகளில் பங்கேற்பதும் இதன் முக்கியமான செயல்பாடுகள் ஆகும். மேலும், இது வயதான தோற்றம் தரும் அறிகுறிகளைத் தடுக்கவும், காயங்களைக் குணப்படுத்தவும் உதவுகிறது. இந்த அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்க நாம் என்னென்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
அதிகளவு கொலாஜன் கொண்டுள்ள எலும்புச் சாறு (Bone Broth) ஹைலூரோனிக் அமிலத்தின் உற்பத்திக்கு உதவுகிறது. பசலை, காலே மற்றும் சுவிஸ் சார்டு போன்ற பச்சை இலைக் காய்கறிகளிலுள்ள ஊட்டச்சத்துக்கள் ஹைலூரோனிக் அமிலத்தின் அளவை உயர்த்த உதவுகின்றன.
வைட்டமின் C சத்து நிறைந்துள்ள ஆரஞ்சு, லெமன் மற்றும் கிரேப் போன்ற சிட்ரஸ் பழ வகைகள் ஹைலூரோனிக் அமிலத்தின் உற்பத்தியில் ஒரு சேர்க்கைப் பொருளாக இருந்து உதவி புரிகின்றன. சோயா மில்க் மற்றும் டோஃபு ஆகியவற்றில் உள்ள ஜெனிஸ்டீன் (Genistein) என்ற பொருள் ஹைலூரோனிக் அமிலத்தின் உற்பத்தியில் அதன் அளவை உயர்த்த உதவுகின்றன.
கேரட், பீட்ரூட் மற்றும் ஸ்வீட் பொட்டட்டோ ஆகிய வேர்க் காய்களில் உள்ள பீட்டா கரோட்டீன் என்ற பொருள் ஹைலூரோனிக் அமிலத்தின் உற்பத்தியில் ஒரு சேர்க்கைப் பொருளாக இருந்து உதவி புரிகிறது. லைக்கோபீன் என்ற சத்து அதிகளவில் கொண்டுள்ள தக்காளி கொலாஜன் உற்பத்திக்கு சிறந்த பக்கபலமாக உள்ளது. இதன் மூலம் மறைமுகமாக ஹைலூரோனிக் அமிலத்தின் அளவை உயர்த்த உதவுகிறது.
ஆல்மன்ட், வால்நட் மற்றும் சூரியகாந்தி விதைகள் ஆகியவை சருமத்தின் நீரேற்றத்திற்கு உதவக்கூடிய முக்கியமான சத்துக்களான கொழுப்பு அமிலங்கள் அதிகம் கொண்டவை. வைட்டமின் C சத்து நிறைந்துள்ள பெல் பெப்பர்ஸ் கொலாஜன் உற்பத்திக்கு உதவுவதோடு ஹைலூரோனிக் அமிலத்தின் உற்பத்தியில் ஒரு கூட்டுப் பொருளாகவும் இருந்து உதவுகிறது.
ஸ்ட்ராபெரி, ராஸ்பெரி, ப்ளூபெரி போன்ற பழங்கள் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை. இவை சருமத்தின் ஆரோக்கியத்தை உயர்த்தவும் காக்கவும் செய்கின்றன. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ள சால்மன் மற்றும் மாக்கரேல் போன்ற மீன் வகைகள் சருமத்தின் நீட்சித் தன்மையை அதிகரிக்கச் செய்கின்றன.
மேற்கூறிய உணவுகளை அடிக்கடி உட்கொண்டு நாமும் ஹைலூரோனிக் அமிலம் தரும் நற்பயன்களைப் பெறுவோம்.