
கடலூர் என்று இன்று நாம் அழைக்கும் ஊரின் அன்றைய பெயர் திருப்பாதிரிப்புலியூர். இன்றைக்கும் கடலூர் ரயில் நிலையத்தின் பெயர் திருப்பாதிரிப்புலியூர் என்று தான் இருக்கும். திருப்பாதிரிப்புலியூர் பல சிறப்பு வாய்ந்த ஆன்மீக இடங்களும் சுற்றுலா தலங்களும் நிறைந்த ஒரு ஊர் என்று கூறலாம். அம்மன் அரூபமாக இருந்து தவம் செய்த இடம் .
திருப்பாதிரிபுலியூரில் இருக்கும் சிவாலயம் மிகவும் பழமை வாய்ந்தது. பாடல் பெற்ற ஸ்தலம். இறைவனின் திருநாமம் பாடலேஸ்வரர், அம்மன் பெயர் பெரியநாயகி மற்றும் அருந்தவ நாயகி. தல விருட்சம்- பாதிரி மரம்.
திருநாவுக்கரசரரும், திருஞானசம்பந்தரும் இக்கோவில் குறித்து பதிகங்கள் பாடியுள்ளார்கள். மன்னர் மகேந்திரவர்மன் திருநாவுக்கரசரை கல்லுடன் சேர்த்து கட்டி கடலில் வீசியபோது அப்பரடிகள்,
"சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சிவாயமே "
என பாடி கரைசேர்ந்த அதிசயம் நிகழ்ந்த ஊர்.
ஞானசம்பந்தர், திருநாவுக்கரசரை முதல் முதலில், 'அப்பர்' என அழைத்த தலமும் இதுவே.
இங்கு இருக்கும் சிவ பெருமான் ஒரு சுயம்பு மூர்த்தி.
ஒரு முறை கைலாயத்தில் சிவபெருமானும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினார்கள். பலமுறை நடந்த ஆட்டத்திலும் சிவ பெருமான் தோல்வியுற்றார். ஆனால் வெற்றி தனக்கே என கூறினார். உடனே பார்வதி தேவி இறைவனின் முகத்தை தன் கைகளால் மூட, உடனே உலகம் முழுதும் இருண்டு விடுகிறது. இறைவனின் அருள் வேண்டி அம்மன் அரூபமாக இருந்து தவம் செய்கிறாள்.
இப்படி தேவி அரூபமாக இருந்து தவம் செய்த இடம் தான் இந்த கோவில். சுவாமி சன்னதியில் அம்மன் உருவமில்லாமல் இருந்து ஸ்வாமியை வழிபட்ட இடம் இன்றும் அருந்தவநாயகி சன்னதியாக உள்ளது. உருவமில்லாமல் இருப்பதால் அங்கு வெறும் பீடம் மட்டுமே உள்ளது. பொதுவாக சிவன் கோவில்களில் பள்ளியறை அம்மன் சன்னிதியிலயே இருக்கும். இங்கு மட்டும் பள்ளியறை ஸ்வாமி சன்னதியில் உள்ளது. அம்மன் இங்கு தினமும் பள்ளியறைக்கு எழுந்தருளுவதாக ஐதீகம்.
இத்தல முருகனை குறித்து அருணகிரிநாதர் பாடல்கள் இயற்றியுள்ளார். புலிக்கால் முனிவர் என்பவர் தவம் செய்த இடம் இந்த ஊர். அதனாலயே இந்த ஊர் பாதிரிபுலியூர் என அறியப்படுகிறது.
இப்படி ஆன்மீக சிறப்புகள் இந்த ஊரில் அடுக்கிக் கொண்டே போகலாம். உங்களுக்கு கடலூர் வரும் வாய்ப்பு கிடைக்குமாயின் இப்படிப்பட்ட வரலாற்று புராண சிறப்புமிக்க இடங்களை கண்டு ரசித்து வணங்கி செல்லுங்கள்.