
தன்னுடைய பக்தனை காக்க ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்து வாதத்தில் வென்ற திருச்செங்கோடு செங்கோட்டு வேலவரை பற்றி தெரியுமா? அந்த சுவாரஸ்யமான கதையைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
திருச்செங்கோடு வேலவரின் மீது தீராத பக்திக் கொண்டவர் தான் குணசீலர் என்ற புலவர். ஒருமுறை திருச்செங்கோட்டிற்கு பாண்டிப்புலவரேறு என்ற புலவர் வருகிறார். இவரை வாதத்தில் வெல்வது என்பது கடினமான காரியம். இதுவரை இவர் நிறைய புலவர்களை வாதத்தில் தோற்கடித்துள்ளார். ‘தன்னை வெல்ல யாரும் இல்லை’ என்ற எண்ணத்தில் திருச்செங்கோடு முருகனை பார்க்க வருகிறார்.
அங்கே குணசீலர் புலவரை சந்திக்கிறார். இரண்டு பேருக்கும் வாதம் ஏற்பட்டு அது இறுதியில் சவாலில் சென்று முடிகிறது. ‘நாளை என்னுடன் போட்டிக்கு வா!' என்று பாண்டிப்புலவரேறு குணசீலரை போட்டிக்கு அழைக்கிறார். ‘இது என்ன சோதனை?' என்று எண்ணிய குணசீலர் முருகரிடம் முறையிடுகிறார். ‘செங்கோட்டு வேலவா! என்னை எப்படியாவது காப்பாற்று’ என்று முருகப்பெருமானிடம் வேண்டினார்.
அடுத்த நாள் காலையில் பாண்டிப்புலவரேறு திருச்செங்கோடு மலை மீது போட்டிக்காக பாட்டுப் பாடிக்கொண்டே ஏறுகிறார். திருச்செங்கோடு மலைக்கு ‘நாகமலை’ என்ற பெயரும் இருக்கிறது. ‘இது நாகமலை என்றால் ஏன் படமெடுத்து ஆட வில்லை?’ என்ற பொருள் வரும்படி ஒரு பாடலை பாடுகிறார்.
சமரமுகத் திருச்செங்கோடு சர்ப்பசயிலமெனில் அமரிற்படம் விரித்து ஆடாததென்னே!
என்று பாடி முடித்ததும் அந்த பாடலை முடிக்க முடியாமல் தடுமாறுகிறார். எத்தனை முறை யோசித்தும் அடுத்த வரி வரவேயில்லை. அப்போது அங்கே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன் சொல்கிறான்,
அது குமரன் திருமருகன் முருகன் மயில் வாகனம் கொத்துமென்றே!
இதைக் கேட்டதும் அந்த புலவர் ஆடிப் போய்விடுகிறார். அந்த வரிகளுக்கான அர்த்தம் என்னவென்றால், ஏன் இந்த நாகமலை படமெடுத்து ஆடவில்லை என்றால், முருகப்பெருமானின் மயில்வாகனம் கொத்தும் அப்படிங்குற பயத்தால் தான் படமெடுத்து ஆடவில்லை என்கிற பொருள் வரும்படி பாடுகிறான்.
இதைக் கேட்டதும் பாண்டிப்புலவரேறு வியந்து விடுகிறார். அந்த சிறுவனை அழைத்து, ‘யாரப்பா நீ?’ என்று கேட்கிறார். ‘நான் குணசீலர் புலவருடைய மாணவன்’ என்று அந்த சிறுவன் கூறுகிறான். அப்போது தான் பாண்டிப்புலவரேறுவிற்கு அவருடைய தலைக்கனம் குறைகிறது.
அவர் வந்திருப்பது முருகப்பெருமான் என்றும் முருகப்பெருமானின் அருளைப்பெற்ற குணசீலரை எதிர்ப்பது தவறு என்றும் உணர்ந்துக் கொள்கிறார். இதற்கு பிறகு குணசீலர் புலவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு செங்கோட்டு வேலவனை வணங்கிவிட்டு விடைப்பெற்று செல்கிறார் பாண்டிப்புலவரேறு.
இது திருச்செங்கோடு பெருமையை உலகறிய செய்ய முருகப்பெருமான் நிகழ்த்திய திருவிளையாடல் ஆகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருச்செங்கோடு செங்கோட்டு வேலவனை நேரில் சென்று தரிசித்து அவன் அருளைப் பெறுங்கள்.