ஆன்மிகம் மற்றும் அறிவியலின் ஒற்றுமையை பற்றி பேசும் நாம், ஆன்மிகம், அறிவியல் மற்றும் கலை (கட்டக்கலை)யின் ஒற்றுமையை மட்டும் பேசவே மறந்துவிடுகிறோம். இந்த மூன்றின் ஒற்றுமையை விளக்கும் ஒரு கோவிலை பற்றித்தான் இந்தத் தொகுப்பில் பார்க்கவுள்ளோம்.
ஆன்மிகத்திற்கு பின்னால் அறிவியல் இருக்கிறது. ஒரு கோவில் கும்பத்திலிருந்து, மாதவிடாய் காலங்களில் பெண்கள் கோவிலுக்கு போகக்கூடாது என்பது வரையில் ஆன்மிகம் மற்றும் அறிவியல் இருக்கிறது. ஆனால், ஒரு கோவில் படிகட்டுகளில் ஒவ்வொரு இசையின் சத்தம் கேட்பது, லிங்கம் பாதாளத்தில் இருப்பது, எந்தப் பிடிமானமும் இல்லாமல் காற்றில் இருப்பது போன்ற பல விஷயங்களை நாம் மர்மம் என்றும் சொல்வோம்.
ஆனால், இவை அறிவியலின் உதவி மற்றும் கலையின் உதவியால்தான் கட்டப்பட்டது.
சரி சுற்றி வளைத்துப் போக வேண்டாம். ஆந்திராவில் உள்ள அனந்தபூரில் உள்ள வீரபத்ர கோவிலின் அதிசயம் பற்றி பார்ப்போம். இந்த கோவிலே சிறப்பாக கட்டடக்கலையின் எடுத்துக்காட்டாகும். கோயிலின் பெரும்பகுதி குர்மசைலம் (தெலுங்கில் "ஆமை மலை") என்று அழைக்கப்படும் தாழ்வான பாறை மலையில் கட்டப்பட்டுள்ளது. வீரபத்ரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சன்னதி, அழகிய ஓவியங்கள் மற்றும் சுவரோவியங்களை உள்ளடக்கிய காலத்தால் அழியாத கலைகளின் கண்காட்சியாகும்.
புராணங்கள்படி வீரபத்ரா கோவில் அகஸ்திய முனிவரால் கட்டப்பட்டது. மாதா சீதையை மீட்பதற்காக ராவணனுடனான போருக்குப் பிறகு பக்ஷி ஜடாயு இந்த இடத்தில் விழுந்தார் என்றும் நம்பப்படுகிறது. இந்த கோவிலில் சீதை மாதாவின் காலடித் தடமும் உள்ளது.
இந்த கோவிலின் கற்களிலும் பாறைகளிலும் விஜயநகர பேரரசின் புகழ் தீட்டப்பட்டிருக்கும். இந்த கோவிலை சுற்றி நடந்தால், விஜயநகர சாம்ராஜ்யத்தின் பெருமையை நீங்கள் பார்க்கலாம். அதன் சுவர்களில் இசைக்கலைஞர்கள் மற்றும் புனிதர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோவிலில் ஒரு தூண் மட்டும் தொங்கும்படி உள்ளது. தூணின் அடிப்பகுதிக்கும் அதன் அடியில் உள்ள பாறைக் கல் தரைக்கும் இடையே மெல்லிய இடைவெளியைக் கொண்டுள்ளது. இதற்கு என்ன கருவிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது இதுவரை தெரியவரவில்லை. எத்தனையோ ஆராய்ச்சிகள் செய்தும் தூண் தொங்குவது எப்படி என்பதன் விடை மட்டும் கண்டறிய முடியவில்லை. இங்கு 70 தூண்கள் இருந்தும், இந்த தூண் மட்டுமே இப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டடக்கலையின் அற்புதத்திற்கு கலை மற்றும் அறிவியலே காரணம். இப்போது தெரிகிறதா அறிவியல், ஆன்மிகம், கலை மூன்றின் ஒற்றுமை.