திருடர்களால் பிரபலமடைந்த கோயில் எங்கிருக்கிறது தெரியுமா?

மிருதங்க ஷைலேஸ்வரி
மிருதங்க ஷைலேஸ்வரிhttps://mridangasaileswaritemple.org

ந்தியாவில் அதிசயங்கள் நிறைந்த பல கோயில்கள் உண்டு. அதன் அதிசயம் ஏதேனும் சில நிகழ்வுகள் மூலம் மக்களுக்கு தெரியவரும்போது அக்கோயிலின் மகிமையையும், தெய்வத்தின் சக்தியையும் பற்றி மக்கள் புரிந்து கொள்வார்கள். திருடர்கள் பலமுறை திருடிச்செல்ல முயற்சித்தும் திரும்பவும் தன்னுடைய கோயிலுக்கே வந்து சேர்ந்த ஒரு தெய்வச் சிலையை பற்றி தெரியுமா? அப்படிப்பட்ட ஒரு அதிசயக் கோயிலை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவின் கேரள மாநிலம், கன்னூர் மாவட்டத்தில் உள்ள முழங்குன்னு என்னும் இடத்தில் இருக்கும் பழைமையான கோயில்தான் மிருதங்க ஷைலேஸ்வரி திருக்கோயிலாகும். பரசுராமர் உருவாக்கிய 108 கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயிலுக்கு மிருதங்க ஷைலேஸ்வரி என்று பெயர் வரக் காரணம், மிருதங்கம் இந்தியாவின் பழைமையான ஒரு இசைக் கருவியாகும். விநாயகப் பெருமான், நந்திகேஸ்வரர் ஆகியோரிடம் இந்த மிருதங்கம் இருப்பதை பார்த்திருப்போம். மிருதங்கத்தை கடவுளின் தேவ வாத்தியம் என்று கூறுவார்கள். வானிலிருந்து மிருதங்க வடிவிலான எரிகல் ஒன்று இந்த இடத்தில் வந்து விழுந்ததாகவும், அந்தக் கல்லில் அம்பிகையின் சக்தியை பரசுராமர் உணர்ந்ததால் இங்கேயே அந்த அம்பிகைக்கென்று ஒரு கோயிலை எழுப்பினார் என்பது புராணக்கதை.

மிருதங்க ஷைலேஸ்வரி கோயிலில்தான் கதகளி நடனம் உருவானதாக நம்பப்படுகிறது. இக்கோயிலில் சக்தி தேவி காளியாகவும், சரஸ்வதியாகவும், மகாலட்சுமியாகவும் மூன்று வடிவில் காட்சி தருகிறார். இக்கோயிலில் இருக்கும் தேவி சிலையின் மதிப்பு 1.5 கோடியாகும். இக்கோயிலுக்கு எந்தக் காவலும் கிடையாது என்பதால் திருடர்களுக்கு இச்சிலையை திருடிச்செல்வது என்பது எளிதானது. 1979ம் ஆண்டு முதல் முதலில் இந்த தேவி சிலையானது திருடுபோனது. எனினும், திருடர்கள் சிறிது தூரத்திலேயே இச்சிலையை போட்டுவிட்டு சென்று விட்டனர். அதற்கான காரணம் தெரியவில்லை. சிலையும் கோயிலுக்குத் திரும்ப எடுத்துச் செல்லப்பட்டது.

சில வருடங்கள் கழித்து இரண்டாவது முறையாக இந்தச் சிலை திருடப்பட்டது. இந்த முறை போலீசால் எதையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. எனினும், கோயில் தேவஸ்தானத்திலிருந்து சிலை வெகுதொலைவு சென்றுவிட்டதாகவும் நிச்சயமாக 42 நாட்களுக்குள் கிடைத்துவிடும் என்று கூறினார்கள். அவர்கள் கூறியது போலவே சிலை 42வது நாள் பாலகாட்டின் அருகில் உள்ள நெடுஞ்சாலை தமிழ்நாட்டிற்கு பக்கத்தில் கிடைத்தது. இந்த முறை ஒரு கடிதம் அதனுடன் இருந்தது. இந்த சிலை மிருதங்க ஷைலேஸ்வரி கோயிலை சேர்ந்தது. இதற்கு மேல் எங்களால் இந்தச் சிலையை எடுத்து செல்ல முடியவில்லை என்று எழுதியிருந்தது.

இதையும் படியுங்கள்:
ஆனியன் வாட்டர் அருந்துவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
மிருதங்க ஷைலேஸ்வரி

மூன்றாவது முறையாக கர்நாடகாவை சேர்ந்த திருடர்கள் இந்தச் சிலையை வயநாடு வழியாக கடத்திச்செல்லும்போது ஒரு லாட்ஜில் இச்சிலையை வைத்து அதற்கு பூ சாத்தி, தீபம் ஏற்றி பூஜை செய்துள்ளனர். பிறகு அவர்களே போலீசாருக்கு போன் செய்து சிலை இருக்கும் லாட்ஜ் பற்றி தகவல் சொல்லி, வந்து சிலையை எடுத்துச் செல்ல சொல்லிவிட்டு சென்று விட்டனராம்.

சில காலம் கழித்து வேறு ஒரு திருட்டில் இரண்டாவது மற்றும் மூன்றாவதாக தேவியின் சிலையை திருடிய திருடர்கள் போலீசிடம் மாட்டிக்கொள்ள அவர்களிடம், ‘எதற்காக பாதியிலேயே மிருதங்க ஷைலேஸ்வரி சிலையை விட்டுவிட்டு சென்றீர்கள்’ என்று போலீஸ் கேட்டதற்கு இருவருமே ஒரே மாதிரியான பதிலையே கூறினார்கள். அதாவது அந்தச் சிலையை கடத்தி சென்றுக்கொண்டிருக்கும்போது அந்தத் திருடர்களுக்கு, ‘தாங்கள் யார்? எதற்காக இந்தச் சிலையை கடத்திச் செல்கிறோம்? எங்கே எடுத்துச் செல்ல வேண்டும்?’ என்பது போன்ற நினைவுகள் அனைத்தும் மறந்து போய்விட்டதாம்.

இதனால் பயந்துபோன அந்தத் திருடர்கள் இந்தச் சிலையை பாதியிலேயே போட்டுவிட்டு ஓடிவிட்டார்களாம். இன்னாள் வரை இக்கோயிலுக்கு எந்தப் பாதுகாப்பும் கிடையாது. எனினும் இத்தகைய மதிப்புமிக்க சிலையை யார் திருடி சென்றாலுமே தேவியின் சிலையானது தன்னுடைய கோயிலுக்கே திரும்ப வந்து சேர்ந்துவிடுவது ஆச்சர்யமான விஷயம். இது தேவியின் மகிமைதான் என்று அங்கிருக்கும் மக்கள் உறுதியாக நம்புகின்றனர். இத்தகைய செய்திகளை கேட்கும்போது அதிசயம் மிக்க இந்தக் கோயிலை ஒருமுறையாவது சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் தோன்றுகிறது அல்லவா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com