நாம் நம் அன்றாட உணவில் உபயோகித்து வரும் ஆனியனில் உடலுக்குத் தேவையான வைட்டமின் C, வைட்டமின் B6, பொட்டாசியம், ஃபொலேட் போன்ற ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. வெங்காயத்தை நறுக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி அந்தத் தண்ணீரை நாம் குடிக்கும்போது, மேலே கூறிய அனைத்து ஊட்டச் சத்துக்களாலும் செறிவூட்டப்பட்ட ஒரு நல்ல ஆரோக்கிய பானம் அருந்திய திருப்தி நமக்குக் கிடைக்கிறது. இந்த பானத்தை அருந்துவதால் உடலுக்குக் கிடைக்கும் மேலும் பல நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
ஆனியனில் குர்செடின் (Quercetin) போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை உடம்பிலுள்ள ஃபிரிரேடிகல்களின் அளவை சமநிலைப்படுத்தி ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்க உதவுகின்றன. இதிலுள்ள வைட்டமின் C சத்தானது உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் உடல் தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராட முடிகிறது. உடலிலுள்ள நோய்களையும் விரைவில் குணமடையச் செய்ய முடிகிறது.
இதிலுள்ள குர்செடின் மற்றும் சல்ஃபர் போன்ற கூட்டுப் பொருட்கள் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்டு, உடலில் உண்டாகும் வீக்கங்களைக் குறைக்க உதவுகின்றன.
ஆனியனை சமைக்காமல் உட்கொண்டால் அது உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும், கொழுப்பின் அளவை சமநிலைப்படுத்தவும் உதவும். இதன் மூலம் இதய ஆரோக்கியம் வலுப்பெறும்.
ஆனியனில் பிரிபயோட்டிக் ஃபைபர் சத்து உள்ளது. இது ஜீரண மண்டல உறுப்புகளில் வாழும் நன்மை தரும் பாக்டீரியாக்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவி புரிந்து செரிமானம் சிறப்பாக நடைபெற உதவுகிறது.
ஆனியன் வாட்டர் அருந்துவது தினசரி குடிக்க வேண்டிய நீரின் அளவு சமநிலைப்படவும், உடலை நீரேற்றத்துடன் வைக்கவும் உதவும். ஆனியன் குறைந்த அளவு கலோரி கொண்டது. இதை உணவில் சேர்ப்பதால் கலோரி அளவு அதிகரிக்காமல் உணவுக்கு சுவை கூட்ட முடியும். சர்க்கரை சேர்த்த பானங்களுக்குப் பதிலாக ஆனியன் வாட்டர் குடித்தால் உடல் எடை அதிகரிக்காமல் பராமரிக்க முடியும்.
ஆனியன் வாட்டர் சரும ஆரோக்கியம் காக்கவும் உதவுகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமம் வயதான தோற்றம் தருவதைத் தடுக்கவும், அப்பழுக்கற்ற சுத்தமான மேனி வண்ணம் பெறவும் உதவி செய்கின்றன.
ஆனியன் வாட்டர் சளி, இருமல் போன்ற நோய்களை குணப்படுத்தவும் செய்யும். இதை உணவுக்கு மணமூட்டவும், சூப், சாலட், ஸ்டூ மற்றும் மரினேட் செய்வதற்கும் உபயோகிக்கலாம்.