
சிவபெருமானை இதுவரை லிங்க வடிவில் மட்டுமே தரிசித்திருப்போம். ஆனால், சிவபெருமானை இந்த கோவிலில் மனித வடிவில் தரிசிக்க முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? சிவபெருமான் மனித உருவில் அருள்பாலிக்கும் ஒரே ஸ்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் திருவெண்காட்டில் இருக்கும் சுவேதாரண்யேசுவரர் திருக்கோவில்.
காசியில் விஷ்ணு பாதம் உள்ளதுப்போல இக்கோவிலில் ருத்ர பாதம் இருக்கிறது. இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் 274 தேவார பாடல் பெற்ற தலங்களில் இது 11 ஆவது தேவாரத்தலமாகும்.
சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து தோன்றிய அகோரமூர்த்தி தான் இக்கோவிலில் மனித உருவில் அருள்பாலிக்கிறார். சிவபெருமான் அகோரமூர்த்தியாக காட்சித் தருவதற்கு பின் ஒரு வரலாறு இருக்கிறது.
ஜலந்திரன் மகனான மருத்துவன் ஒரு அசுரன் ஆவான். இவன் சிவபெருமானை நோக்கி தவம் புரிந்து அவரிடம் இருந்து சூலாயுதத்தை பெற்றான். ஆனால், அந்த சூலாயுதத்தைக் கொண்டு தேவர்களை துன்புறுத்த தொடங்கினான்.
இதை அறிந்த சிவபெருமான் கோவம் கொண்டு நந்தியை அனுப்பி வைத்தார். ஆனால், மருத்துவாசுரன் நந்தி மீது சூலாயுதத்தை ஏவ அது நந்தியின் உடலில் ஒன்பது இடங்களில் துளையிட்டது. இதை பார்த்த சிவபெருமான் பயங்கர கோவம் கொண்டு அகோரமூர்த்தி வடிவம் எடுத்து அந்த அசுரனை அழித்தார் என்பது வரலாறு.
இன்றைக்கும் இந்த கோவிலில் இருக்கும் நந்தியின் உடலில் ஒன்பது இடங்களில் துளையிருப்பதை காண முடியும். இக்கோவில் பல யுகங்களை கடந்து நீடித்து நிலைத்திருக்கும் பழமையான கோவிலாகும். இக்கோவிலை பற்றிய குறிப்புகள் ராமாயணத்திலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில் நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவானுக்கு உரிய ஸ்தலமாகும். இக்கோவிலில் வழிப்படுவதன் மூலம் பூர்வஜென்ம பாவம் நீங்கும், குழந்தைப்பேறு, வேலைவாய்ப்பு, தொழில் விருத்திக் கிட்டும். எனவே, இக்கோவிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது சென்று வழிப்பட்டுவிட்டு வருவது நன்மைத் தரும்.