திருமால் குடியிருக்கும் ஸ்ரீவைகுண்டம் எங்கே இருக்கிறது? அது நம் பூமியில்தான் இருக்கிறதா? அல்லது விண்ணில் இருக்கிறதா? இதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
ஒரு சமயம் மன்னன் ஒருவனுக்கு மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது. அதாவது, ‘திருமால் குடியிருப்பதாகச் சொல்லப்படும் வைகுண்டம் நம் பூமியில் உள்ளதா அல்லது விண்ணுலகத்தில் உள்ளதா?’ என்ற சந்தேகம் ஏற்பட்டது.
அதையடுத்து, அரசவையைக் கூட்டி அனைவரிடமும் தனது சந்தேகத்தைக் கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொல்ல, அவற்றில் எதுவுமே அரசருக்கு திருப்தி அளிக்கவில்லை.
அப்போது மக்கள் கூட்டத்தில் அரசவை நிலவரத்தைப் பார்க்க வந்த இளைஞர் ஒருவன், ‘நான் பதில் சொல்கிறேன்’ என்று முன்வந்தான்.
மன்னனுக்கு ஆச்சர்யம். அவனிடம் கேட்டார், ‘வைகுண்டம் எவ்வளவு தொலைவில் இருக்கிறது சொல்’ என்றார். அதற்கு அந்த இளைஞன், ‘வைகுண்டம் கூப்பிடும் தூரத்தில்தான் இருக்கிறது மன்னா’ என்று கூறினான். இதைக்கேட்ட அரசனுக்கு மட்டுமில்லாமல், அவையில் இருந்த எல்லோருக்குமே ஆச்சர்யம்.
‘மகாவிஷ்ணு வசிக்கும் ஸ்ரீவைகுண்டம் கூப்பிடும் தூரத்தில்தான் இருக்கிறது என்று எப்படிச் சொல்கிறாய்? நீ சொல்வது உண்மை என்று எப்படி நம்புவது?’ என்று கேட்டார்.
அதற்கு அந்த இளைஞன், ‘மன்னா! குளத்தில் இருந்த முதலை யானையின் காலை கடித்தது.
அப்போது அந்த யானை, ‘ஆதிமூலமே’ என்று அழைத்ததும் அடுத்த நொடியே திருமால் அங்கே வந்து முதலையின் பிடியிலிருந்து யானையை விடுவித்ததோடு, அதற்கு மோட்சம் தந்த கதை நம் அனைவருக்கும் தெரியுமே! அப்படி யானை கூப்பிட்டதும் திருமாலால் அடுத்த நொடியே வர முடிகிறது என்றால், அவர் இருக்கும் வைகுண்டம் கூப்பிடும் தூரத்தில்தானே இருக்க வேண்டும்’ என்று கூறினான்.
இதைக் கேட்ட அரசனுக்கு மிகவும் மகிழ்ச்சி. தனது சந்தேகத்தை தீர்த்த இளைஞனுக்கு பரிசுகள் மட்டுமின்றி, அரச பதவியும் கொடுத்துப் பாராட்டினார் மன்னர். நம் மனதிலே தூய பக்தியுடனும், அன்புடனும் கூப்பிட்டால் கடவுள் அடுத்த நொடியே நம் முன் தோன்றுவார். ஏனெனில், அவர் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார், கூப்பிடும் தூரத்திலும் இருப்பார்.