சமீப காலமாக நகரம், கிராமம் என்ற பாகுபாடின்றி, பலரையும் தன் பக்கம் இழுத்து உடலுக்கு பெரும் ஆரோக்கியத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது சிறுதானிய (Millet) உணவு வகைகள். ‘சமையல் போட்டியா? சிறுதானிய சிற்றுண்டி; ஆரோக்கியக் குறைபாடா? அரிசியை நீக்கி சிறுதானிய வகைகளை சேர்த்துக்கோ’ என்று அனைத்து இடங்களிளிலும் பேசுபொருளாக மாறியுள்ளது இந்த உணவு வகைகள். குளிர் காலங்களில் நம் ஆரோக்கியத்திற்கு சிறந்த முறையில் உதவக்கூடிய 9 வகை சிறுதானிய வகைகளையும் அவற்றிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பது பற்றியும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. கம்பு (Pearl Millet): இதில் புரோட்டீன், இரும்புச் சத்து, மக்னீசியம் ஆகிய ஊட்டச் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு தொடர்ந்து சக்தியளிக்கவும் குளிர்காலத்தில் உடலுக்கு உஷ்ணம் தரவும் உதவுகிறது.
2. சோளம் (Jower): குளூட்டன் ஃபிரீயான சிறுதானியம் இது. புரோட்டீன், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் இதில் அதிகம் உள்ளன. சிறப்பான செரிமானத்துக்கும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது பெரிதும் உதவும்.
3. ராகி (Finger Millet): இதில் கால்சியம் மற்றும் அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளன. இது எலும்புகள் முழு ஆரோக்கியத்துடன் இயங்க உதவும். குளிர்காலத்தில் உடலை கதகதப்புடன் வைத்துக்கொள்ளவும் உதவும்.
4. தினை (Fox tail Millet): காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் அதிகம் நிறைந்துள்ள தானியம் இது. இதை உட்கொண்டால் நாள் முழுவதும் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும் இது உதவும்.
5. வரகு (Kodo Millet): அதிகளவு நார்ச்சத்துக்கள் அடங்கிய சிறுதானியம் இது. சிறப்பான செரிமானத்துக்கும், குளிர்காலத்தில் உடல் உஷ்ணம் குறையாமல் பாதுகாக்கவும் உதவும்.
6. குதிரைவாலி (Barnyard Millet): இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவு நிறைந்த இலகுவான தானியம் இது. உடலிலுள்ள நச்சுக்களை நீக்க உதவும். குளிர் காலத்தில் உடலை ஆரோக்கியம் நிறைந்ததாக வைக்க உதவும்.
7. சாமை (Little Millet): மக்னீசியம், சிங்க் போன்ற ஊட்டச் சத்துக்கள் இதில் மிக அதிகம். உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து உடலுக்குள் குளிர் கால நோய்க் கிருமிகள் பரவுவதைத் தடுக்க உதவும்.
8. பனி வரகு (Proso Millet): குறைந்த கலோரி அளவு கொண்ட உணவு இது. புரோட்டீன் சத்து நிறைந்தது. குளிர் காலங்களில் மெட்டபாலிச ரேட் குறையாமல் உடலைப் பாதுகாக்கக்கூடிய மிகச் சிறந்த உணவுப் பொருள்.
9. பாலா புல் (Brown Top Millet): குளூட்டன் ஃபிரீயான கிடைத்தற்கரிய சிறுதானியம் இது. கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் இதில் அதிகம் உள்ளன. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த முழு தானிய உணவிது.
மேற்கூறிய அனைத்து சிறுதானிய வகைகளுமே சுவையான முறையில் ரொட்டி, உப்புமா, பாயசம், கிச்சடி, தோசை உணவுகள் ஆகியவை செய்து உட்கொள்ள உகந்தவையாகும்.