தமிழ் கடவுளாகப் போற்றப்படும் முருகப்பெருமானின் அவதார நோக்கம் நிறைவேறிய தலமாகத் திகழ்வது திருச்செந்தூர். அறுபடை வீடுகளில் மற்ற படை வீடுகளில் மலைமேல் முருகன் கோயில் இருக்கும். ஆனால், திருச்செந்தூரில் மட்டுமே அழகிய கடற்கரையோரமம் முருகப்பெருமானின் கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள கடலில் 27 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளதாக நம்பிக்கை. முருகனின் அவதாரம் நிறைவேறிய தலம் என்பதால் இங்கு இத்தல வரலாற்றை உணர்த்தும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடைபெறுகிறது.
‘சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்’ என்று பலரும் பழமொழியாகக் கூறுவர். ‘முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி விரதம் இருந்தால் தானே குழந்தை பேறு கிடைக்கும்’ என்பதுதான் இந்த பழமொழியின் உண்மை பொருள். இத்தல கந்த சஷ்டி விழாவில் விரதம் மேற்கொண்டு திருமணம் முடிந்த தம்பதியர் அதிக அளவில் காணப்படுவர். இது போன்ற தம்பதிகள் தங்கள் இல்லங்களிலும் கோயில்களிலும் ஆறு நாட்கள் விரதம் இருந்து சூரசம்ஹார விழாவன்று விரதத்தை நிறைவு செய்வார்கள்.
இப்படி விரதம் இருக்கும் பக்தர்கள் கோயில் வளாகத்தில் வள்ளி குகைக்கோயில் பகுதியில் உள்ள குன்றில் முருகனை வேண்டி துணியில் தொட்டில் கட்டி தொங்க விடுவர். மேலும், குழந்தைப் பேறு கிடைக்கப்பெற்ற பிறகு கோயிலுக்கு வந்து முருகனை வழிபடுவதும் வழக்கமாக உள்ளது. பொதுவாக, முருகனின் இரண்டு சக்திகளாக விளங்கும் தெய்வானையிடம் திருமணம் நடைபெற வேண்டுதல் வைப்பர். அதேபோல், வள்ளியிடம் குழந்தை வரம் வேண்டி வேண்டுதல் வைப்பர். அந்த வகையில் பக்தர்கள் வள்ளியம்மனிடம் குழந்தை வரம் வேண்டி இங்கே தொட்டில் கட்டி வழிபடுகின்றனர்.
திருச்செந்தூர் கோயில் மூன்றாவது பிராகாரத்தின் வடபுறம் கடலை நோக்கி இறங்கினால் வள்ளி குகைக்குச் செல்லும் வழி உள்ளது. வள்ளியம்மன் குகை கோயில் வளாகம் சந்தன மலைகளின் குகைக்குள் உள்ளது. குகையின் உள்ளே முருகன் மற்றும் வள்ளி புராணத்தை விளக்கும் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் உள்ளன. குகையின் முன் 24.5 அடி நீளமும், 21.5 அடி அகலம் கொண்ட 16 தூண்களுடன் கூடிய மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. குகை வழியாக ஒரு குறுகிய பாதை மண்டபத்தையும் கருவறையையும் இணைக்கிறது.
புராணத்தின்படி, வள்ளி தனது தந்தையின் தினைப்புனத்துக்கு காவலாக இருந்ததை கண்டு முருகன் அவள் மீது காதல் கொண்டு, ஒரு முதியவர் போல் வேடமிட்டு அவருக்கு உணவு மற்றும் பானங்களை வழங்குமாறு வள்ளியிடம் கூறுகிறார். அது உடனடியாக வழங்கப்பட்டது. பின்னர் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வள்ளியிடம் கூறுகிறார் அந்த முதியவர். அதற்க வள்ளி அவருக்கு வயதாகி விட்டதாகக் கூறி மறுத்து விடுகிறாள்.
அதையடுத்து, முருகன் தனது சகோதரர் விநாயகரின் உதவியை நாடுகிறார். விநாயகர் யானை வடிவமெடுத்து வள்ளியை துரத்துகிறார். பயந்து ஓடிய வள்ளி, முருகனின் கைகளுக்குள் தஞ்சமடைந்து, ‘தன்னைக் காப்பாற்றினால் அவருக்கு மனைவியாக ஒப்புக் கொள்கிறாள். முருகன் யானையை விரட்டி, தனது உண்மையான வடிவத்தை அவளுக்கு வெளிப்படுத்தி, முருகப்பெருமான் வள்ளியை மணம் செய்து கொள்கிறார். வள்ளி யானையிடம் இருந்து குகையில் தஞ்சம் அடைந்த இடமே வள்ளி குகை எனப்படுகிறது. திருச்செந்தூர் சென்றால் அவசியம் வள்ளி குகைக்கு சென்று விட்டு வாருங்கள்.