ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ள திவ்யதேசம் எது தெரியுமா?

Tirupati Perumal Temple
Tirupati Perumal Temple
Published on

ந்திர மாநிலம், திருமலை திருப்பதியில் உள்ள வேங்கடேஸ்வர பெருமாள் எனும் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதே நம் மனதில் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது என்றால் அங்குள்ள ஒவ்வொரு விஷயங்களும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஏழுமலையான் திருவுருவச் சிலைக்கு பச்சைக் கற்பூரம் சாத்துகிறார்கள். இந்த பச்சைக் கற்பூரம் ஒரு ரசாயனம். அரிக்கும் வகை அமிலம். இந்த ரசாயனத்தை சாதாரணக் கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு 365 நாட்களும் பச்சைக் கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும், எந்தவித டாதிப்பும் ஏற்படுவதில்லை.

ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். காரணம் சிலா தோரணம் என்ற அபூர்வ கல்லால் ஆனது பெருமாள் சிலை. இந்தப் பாறைகளின் வயது 250 கோடி வருடம் என்கிறார்கள்.

எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஓர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும். உலோகச் சிலையானாலும் உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சொரசொரப்பாக இருக்கும். ஆனால், ஏழுமலையான் திருமேனியில் வழுவழுப்பாக மெருகு போடப்பட்டது போல் இருக்கிறது. கருவறையில் இருக்கும் ஏழுமலையான் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இவர் இருப்பது கருவறையின் மையப்பகுதி கிடையாதாம். கருவறையின் வலது புறம் உள்ள ஓரத்தில்தான் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாராம்.

பெருமாளுக்கு முன் மண் விளக்கு எப்போதும் எரிந்துகொண்டே இருக்கும். இது யார், எப்போது ஏற்றி வைத்தார்கள் என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. ஆனால், பல காலமாக இது அணையால் எரிந்துகொண்டே இருக்கிறது. இனியும் எரியும் என்றே சொல்கிறார்கள்.

பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, லட்டு, சித்ரான்னம் என பல தினமும் இங்கு பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன. ஆனாலும், லட்டுவே பிரதானமாக பேசப்படுகிறது. ஏழுமலையானுக்கு நைவேத்யம் செய்வதற்காக தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயாராகும் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோயில் கருவறையான குலசேகரப் படியைத் தாண்டாது. ஏழுமலையானின் நைவேத்திய பிரசாதத்தில் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. ஏழுமலையான் பத்மாவதி திருமண சாதத்தில் கறிவேப்பிலை இடம் பெறவில்லை என்ற காரணத்தினால் இன்று வரை ஏழுமலையான் நைவேத்திய பிரசாதத்தில் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்வதில்லை.

ஏழுமலையானின் தல விருட்சம் புளிய மரம். எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச் சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால், ஏழுமலையான் திருவுருவச் சிலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், ‘வெறுங்கை வேடன்’ என்று அவர் அழைக்கப்பட்டார்.

திருமலை திருக்கோயிலில் 1180 கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுகள் சாளுவ வம்ச மன்னர்கள் கல்வெட்டுகள். கல்வெட்டுகளுள் 50 கல்வெட்டுகள்தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுகள் தமிழில்தான் உள்ளன.

இதையும் படியுங்கள்:
புகழ் பெற்ற 5 கோயில்களின் பிரபலமான பிரசாதங்கள்!
Tirupati Perumal Temple

திருப்பதி ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படும் மலர்கள், வெண்ணெய், பால், தயிர், துளசி உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் இருந்து மட்டுமே வருகின்றன. திருப்பதி அருகில் உள்ள இந்த கிராமம் மிகவும் பாதுகாக்கப்பட்டதாகும். இந்த கிராமம் பற்றிய விபரம் கூட யாருக்கும் சரியாகத் தெரியாதாம்.

மார்கழியில் இங்கு வில்வ அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. வில்வ இலை சிவ அர்ச்சனைக்குரியது. வில்வம் அர்ச்சனைக்குப் பயன்படுத்தப்படும், ஒரே வைணவ ஆலயம் ஏழுமலையான் கோயில் மட்டுமே. ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு வைபவம் கிடையாது; கொண்டாட்டம் மட்டுமே உண்டு. தோமாலை சேவை என்றழைக்கப்படும் நறுமண மலர்களால் தினமும் இரண்டு முறை அலங்காரம் செய்யப்படுகிறது. சாதாரண நாட்களில் மாலைகள் தயாரிக்க 250 முதல் 300 கிலோ பூக்கள் பயன்படுத்தப்படும் நிலையில் பிரம்மோத்ஸவத்தின்போது கூடுதலாக 150 கிலோ பூக்கள் பயன்படுத்தப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com