நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

Kateel Durga Parameswari
Kateel Durga Parameswarihttps://thecanarapost.com

ர்நாடகா மாநிலம், மங்களூர் அருகிலுள்ள கட்டீல் துர்கா பரமேஸ்வரி கோயில் புகழ் மிக்கது. இந்த அம்மனை, ‘துர்காம்மா’ என்று பக்தியுடன் அழைக்கின்றனர். நினைத்தது அனைத்தும் நிறைவேற இங்கு, ‘யட்ச கானம்’ என்னும் வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.

ஒரு காலத்தில் இப்பகுதியில் பஞ்சம் ஏற்பட்டது. ஜாபாலி முனிவர் இப்பிரச்னை தீர தவத்தில் ஈடுபட்டார். காமதேனு பசுவின் மகளான நந்தினியை பூமிக்கு சென்று வளம் சேர்க்கும்படி இந்திரன் கட்டளை இட்டார்.  ஆனால், பாவிகள் நிறைந்த பூமிக்குச் செல்ல நந்தினி விரும்பவில்லை. அத்துடன், தன்னை பூலோகத்திற்கு அனுப்பக் கூடாது என பார்வதியை சரணடைந்தது. “நீ பசுவாக செல்ல வேண்டாம் புண்ணியமிக்க நதியாக மாறி மக்களுக்குப் பணியாற்று” என உத்தரவிட்டாள் பார்வதி.

‘நேத்ராவதி’ என்ற பெயரில் நந்தினியும் இங்கு ஓட ஆரம்பித்தாள். அந்த சமயத்தில் அருணாசுரன் என்பவன் பூவுலகில் பல தீமைகளை செய்து கொண்டிருந்தான். அவனிடமிருந்து உயிர்களைக் காக்கும்படி பார்வதியிடம் முனிவர்கள் வேண்டினர். அசுரனை வதம் செய்ய பார்வதி தேவி, மோகினியாகத் தோன்றினாள். அசுரனும் அந்த மோகினியை பின்தொடர்ந்தாள். நேத்ராவதி ஆற்றின் நடுவில் இருந்த பாறையின் பின் பார்வதி தேவி ஒளிவது போல பாவனை செய்ய, அசுரன் அவளை பிடிக்க முயன்றான். வண்டு வடிவெடுத்த பார்வதி தேவி, அவனை வதம் செய்தாள். உக்ரத்துடன் இருந்த பார்வதி தேவியை அமைதிப்படுத்த முனிவர்கள் இளநீரால் அபிஷேகம் செய்தனர்.

உக்கிரம்  தணிந்த பார்வதி தேவி, ஆற்றின் நடுவில் துர்கா பரமேஸ்வரி என்னும் பெயரில் கோயில் கொண்டாள். இக்கோயிலில் அம்மன் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறாள். அந்த சிவலிங்கத்தை அம்பிகையாக பாவித்து, அதற்கு பெண்ணாக அலங்கரிக்கின்றனர். நதியின் மடியில் தோன்றிய தலம் என்பதால் இது, ‘கடில்’ எனப்பட்டது. கடில் என்றால் மடி என்று பொருள். தற்போது இத்தலம், ‘கட்டீல்’ எனப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
உணவுக்கு சுவை மட்டுமல்ல; உடலுக்கு ஆரோக்கியமும் தரும் ஆலிவ் ஆயிலின் நன்மைகள்!
Kateel Durga Parameswari

கோயிலின் பின்பகுதியில் ஆறு இரண்டாகப் பிரிந்து கோயிலைச் சுற்றி ஓடுகிறது. நதியின் நடுவில் கோயில் இருப்பதால் கருவறை எப்போதும் ஈரமாகவே இருக்கிறது. இக்கோயிலில் பக்தர்களுக்கு தீர்த்தம், வளையல், மல்லிகை, மைசூர் மல்லிகை, பாக்குப்பூ ,சந்தனம் போன்றவை பிரசாதமாகத் தருகின்றனர்.

அம்மனுக்கு அணிவிக்கப்படும் மாலையில் உடுப்பி சங்கராபுரம் மல்லிகை முக்கிய இடம் பிடிக்கிறது. திருமண வரம், குழந்தை பேறு, இழந்த பொருள் கிடைக்க மல்லிகைப் பூவை வாழை நாரில் தொடுத்து அம்மனுக்க அணிவிக்கின்றனர். கோயிலில் மகாகணபதி, ரத்தேஸ்வரி, ஐயப்பன், நாக தேவதை, பிரம்மா ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com