உணவுகளைச் சமைப்பதற்கு நாம் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற பல வகை எண்ணெய்களை உபயோகித்து வருகிறோம். அவற்றுள் அதிகளவு ஆரோக்கியம் தரக்கூடிய எண்ணெய்களில் ஒன்றுதான் ஆலிவ் ஆயில். அதிலும், 'எக்ஸ்ட்ரா விர்ஜின்' (Extra Virjin) ஆலிவ் ஆயில் என்பது சுத்திகரிக்கப்படாத மிகச் சிறந்த எண்ணெயாகக் கருதப்படுகிறது. இதை மத்திய தரைக்கடல் பகுதிவாழ் மக்கள் சாலட்களிலும் தங்கள் சமையலிலும் சேர்த்து உண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆலிவ் ஆயில் தரும் சிறப்பான நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஹைட்ராக்ஸிடைரோசோல் (Hydroxytyrosol) மற்றும் ஓலியோகான்தல் (Oleocanthal) ஆகிய பாலிபினால்கள் எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயிலில் அதிகம் உள்ளன. இவை ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடி நாள்பட்ட வியாதிகளான இதய நோய் மற்றும் டிமென்ஷியா வருவதைத் தடுத்து நிறுத்த உதவுகின்றன.
ஆலிவ் ஆயிலிலிருக்கும் ஓலிக் (Oleic) ஆசிட் மற்றும் பாலிபினால்கள் இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்து இதய ஆரோக்கியம் காக்கவும், இதயத்துக்கு செல்லும் இரத்த நாளங்களைப் பாதுகாக்கவும் செய்கின்றன. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்களானவை கோலோரெக்டல் (Colorectal) மற்றும் மார்பகப் புற்றுநோய் வருவதைத் தடுத்து உடலைக் காக்க உதவுகின்றன.
ஆலிவ் ஆயிலிலுள்ள பாலிபினால்கள் அல்ஸிமர் மற்றும் மன அழுத்த நோய்களை குறைக்கவும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. இதிலுள்ள மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஓலியோகான்தல் போன்றவை வயதான காரணத்தால் மூட்டுகளில் உண்டாகும் வீக்கங்களைக் குறைக்க உதவுகின்றன. வீக்கம் சம்பந்தமான மற்ற நோய்கள் வருவதையும் தடுக்கின்றன. எலும்பு முறிவதையும் தடுக்க உதவி புரிந்து மொத்த ஸ்கெலெட்டல் ஆரோக்கியத்தைக் காக்க உதவுகின்றன.
மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் பாலிபினால்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து தொற்று நோய்க்கிருமிகள் உடலுக்குள் பரவுவதைத் தடுக்கின்றன. நோய்கள் விரைவில் குணமாகவும் உதவுகின்றன. மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஓலிக் ஆசிட், டைப் 2 டயாபெட் வரவழைக்கக்கூடிய இன்சுலின் ரெசிஸ்டன்ஸை குறைத்து இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவுகின்றன. மெட்டபாலிசம் சிறந்த முறையில் நடைபெறவும், உடல் எடையை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும், ஆஸ்துமா நோய் வரும் அறிகுறிகளைக் குறைக்கவும் ஆலிவ் ஆயில் உதவுகிறது.
ஆரோக்கிய மேன்மை பெற நாமும் நம் உணவில் ஆலிவ் ஆயில் சேர்த்து உண்பதை வழக்கமாக்கிக் கொள்வோமே!