நந்தியே மூலவராக வீற்றிருக்கும் கோயில் எது தெரியுமா?

Basavanakudi Nanthi Bhagavan
Basavanakudi Nanthi Bhagavanhttps://www.holidayszone.in

பெங்களூருவில் உள்ள பசவனக்குடி என்ற இடத்தில் நந்தியே மூலவராக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த நந்தி கோயில் பசவனக்குடியில் ஒரு குன்றின் மீது அமைந்திருக்கிறது. இந்தக் குன்றுக்கு, ‘ஊதுகுழல் குன்று’ என்ற பெயரும் வழங்கப்படுகிறது. இங்கு பித்தளையால் செய்யப்பட்ட எக்காளம் போன்ற ஊதுகுழல் இருக்கிறது. படைப் பிரிவின் அடையாள ஒலியாக அது ஒலிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அதனால்தான் அந்தக் குன்றுக்கு இப்பெயர் வந்தது என்றும் சிலர் கூறுகிறார்கள்.

பெங்களூருவில் உள்ள மிகவும் பழைமையான ஆலயங்களில் இதுவும் ஒன்று. மலையில் ஏறிச் செல்ல படிகள்  உள்ளன. படிகளை ஒட்டி சாலையும் உள்ளது. ஆலய கோபுரம் வரை வாகனங்கள் செல்ல முடியும். முன் காலத்தில் இந்த பகுதியில், ‘சுங்கனஹள்ளி’ என்று அழைக்கப்பட்டது.

விவசாய நிலமாக இருந்த இந்தப் பகுதியில் வேர்க்கடலை பயிரிடப்பட்டிருந்தது. ஒரு மாடு அந்தக் கடலை செடிகளை தின்று சேதப்படுத்தி வந்தது. அதனால் நஷ்டம் அடைந்த விவசாயிகள் ஒருமுறை தடியால் அந்த மாட்டை தாக்கினர். அங்கேயே காலை மடக்கி அமர்ந்த அந்த மாடு அப்படியே கல்லாக மாறிவிட்டது. அத்துடன் இல்லாமல் அந்த கல் சிலை வளரவும் தொடங்கியது.

இதைக்கண்டு மக்கள் அனைவரும் அஞ்சி நடுங்கி சிவபெருமானை வேண்டி நின்றனர். அப்போது ஒலித்த அசரீரியின் வாக்குப்படி நந்தியின் காலடியில் கிடந்த திரிசூலத்தை எடுத்து நந்தியின் நெற்றியில் வைத்தனர். உடனடியாக நந்தி சிலை வளர்வது நின்றது. பின்னர் நந்தியை சாந்தப்படுத்துவதற்காக அந்தப் பகுதி மக்கள் நந்திக்கு சிறிய கோயிலை அமைத்து வழிபடத் தொடங்கினர் என்கிறது இந்தக் கோயிலின் தல வரலாறு.

இதையும் படியுங்கள்:
வெப்ப அலையிலிருந்து கண்களைப் பாதுகாக்க 7 டிப்ஸ்!
Basavanakudi Nanthi Bhagavan

திராவிடக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் கருவறையில் பிரம்மாண்ட நந்தி சிலை உள்ளது. 4.5 மீட்டர் உயரமும் 6.5 மீட்டர் நீளமும் கொண்ட ஒரே கல்லில் இந்த சிலை காணப்படுகிறது. நந்தியின் பின்புறம் வாலின் அருகில் சிறிய அளவிலான கணபதியின் சிற்பம் இருக்கிறது. நந்தியின் பின்புறம் அமைக்கப்பட்ட சிறிய கருவறைக்குள் சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார்.

அனைத்து சிவன் கோயில்களிலும் சிவபெருமான் முகத்தை தரிசித்துக்கொண்டிருக்கும் நந்தி, இந்த ஆலயத்தில் மட்டும் ஈசனுக்கு தன்னுடைய முதுகைக் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் நடைபெறும் வேர்க்கடலைச் சந்தை மிகப் பிரபலமானது. தங்களுடைய நன்றிக்கடனாக விவசாயிகள் பலரும் நந்தியம்பெருமானுக்கு வேர்கடலையை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com