Thirukkadkaraiappan temple
Thirukkadkaraiappan temple

ஓணம் பண்டிகை முதன் முதலில் கொண்டாடப்பட்ட கோயில் எது தெரியுமா?

Published on

ணம் பண்டிகை முதன் முதலில் கொண்டாடப்பட்ட கோயில் கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகில் உள்ள காக்கரையில் அருள்பாலிக்கும் திருகாக்கரையப்பன் கோயில்தான்.

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான வாமனர் இந்தக் கோயிலில் அருள்பாலிக்கிறார். அசுர குலத்தில் பிறந்த மகாபலி சக்கரவர்த்தி தனது பெரும் செல்வத்தை தர்மம் செய்தார். இதனால் தன்னை விட தர்மம் செய்பவர் யாருமில்லை என்று அகந்தை அவருக்கு ஏற்பட்டது. அந்த அகந்தையை அழிக்க முடிவெடுத்தார் மகாவிஷ்ணு. அதற்காக குள்ள வடிவில் வாமனர் என்ற பெயரில் பூலோகம் வந்தார். மகாபலியிடம் தானமாக மூன்றடி மண் கேட்டார். ‘மூன்றடி மட்டும் தானம் கேட்கிறீர்களே இன்னும் அதிகமாகக் கேட்கலாமே’ என்றார் மகாபலி.

வந்திருப்பவர் மகாவிஷ்ணு என்பதை அறிந்த அவரது குரு சுக்ராச்சாரியார், ‘தானம் அளிக்காதே’ எனத் தடுத்தார். அதை மகாபலி கேட்கவில்லை. அதைத் தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்த மகாவிஷ்ணு ஒரு அடியில் பூமியையும் இன்னொரு அடியில் ஆகாயத்தையும் (சத்திய லோகத்தையும்) அளந்தார். ‘மூன்றாவது அடிக்கு நிலம் எங்கே என மகாபலியிடம் கேட்டார். இதனால் அகந்தை அடங்கிய மகாபலி ‘பகவானே எனது தலையைத் தவிர வேறு இடமில்லை’ எனப் பணிந்தார். அவரை தனது காலால் பூமிக்குள் அழுத்தி மகாவிஷ்ணு ஏற்றுக்கொண்டார். அப்போது மகாபலி, ‘இறைவா, என் நாட்டின் மீதும் என் மக்களின் மீதும் நான் பேரன்பு கொண்டிருக்கிறேன். ஆண்டிற்கு ஒரு முறை எனது நாட்டு மக்களைக் காணும் வாய்ப்பை எனக்கு வரமாக தந்தருள வேண்டும்’ என்று வேண்டினார். வாமன அவதாரத்தில் இருந்த மகாவிஷ்ணு, மகாபலி கேட்ட வரத்தைத் தந்தருளினார். இந்த சம்பவம் நடந்த இடம் எர்ணாகுளம் அருகில் உள்ள காக்கரை.

மகாவிஷ்ணு வாமனர் அவதாரத்தில் நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை தாங்கியபடி நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். வாமனர் தோற்றத்தில் இருக்கும் இவரை திருக்காட்கரையப்பன் என்று பக்தர்கள் அழைக்கின்றனர். தாயாரின் பெயர் பெருஞ்செல்வ நாயகி தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். கோயிலுக்கு வெளியே பகவதி, சாஸ்தா, கிருஷ்ணர், நாகார்ஜுனர் சன்னிதிகள் உள்ளன. மகாபலி பூஜித்த சிவலிங்கம் இங்கு உள்ளது. மகாபலியின் சிம்மாசனம் வாசலில் உள்ளது. ஓடு வேய்ந்த வட்ட வடிவ கோயில் இது. முன் மண்டபத்தில் வாமனரின் மரச் சிற்பம் உள்ளது. இக்கோயிலில் தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. இந்தக் கோயிலில் ஒன்பது முதல் 12ம் நூற்றாண்டு வரை சேர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
சிவப்பு கொய்யா Vs வெள்ளை கொய்யா: எது சிறந்தது?
Thirukkadkaraiappan temple

இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எதிரில் உள்ள சிவபெருமானை முதலில் வழிபட்டுவிட்டு, அதன் பிறகு வாமனரை வழிபட்டுச் செல்கின்றனர். இந்தக் கோயிலில் வாமனருக்கு பால் பாயசம் படைத்தும் சிவபெருமானுக்கு நெய் பாயசம் படைத்தும் வழிபடுகிறார்கள். சிம்மம் மாதமான ஆவணி மாதம் பத்து நாட்கள் நடைபெறும் திருவோண திருவிழா இக்கோயிலின் சிறப்பாகும். இந்தத் திருவிழாவின்போது சாக்கியர் கூத்து, ஓட்டம், துள்ளல், கதகளி மற்றும் படகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இங்கே நடைபெறும்.

பகவானின் பத்து தோற்றங்களில் ஒன்றான வாமன தோற்றம் நிகழ்ந்த இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி மன நிறைவும் செல்வப் பெருக்கும் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

விவசாயி ஒருவர் தனது நிலத்தில் வாழை சரியாக விளையாததால் திருக்காட்கரையப்பன் கோயிலுக்கு வந்து மகாவிஷ்ணுவின் கடைக்கண் தனது நிலத்தில் பட வேண்டும் என்று வேண்டினார். மகாவிஷ்ணு தனது பக்தன் நிலத்தை அருள் நேத்திரம் கொண்டு நோக்க, புதியதோர் வாழை அங்கு தோன்றியதுடன், விளைச்சலும் அதிகமானது. அன்று முதல் அந்த வாழைக்கு நேந்திரம் வாழை மரம் என்று பெயரும் ஏற்பட்டது.

logo
Kalki Online
kalkionline.com