சென்னை மயிலாப்பூர் ஒரு காலத்தில் கிராமமாக இருந்தது. இந்த கிராமத்தின் எல்லைக்காளி மற்றும் கிராம தேவதை அருள்மிகு கோலவிழி அம்மன் என்கிற பத்ரகாளி அம்மன் ஆகும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்த கோயில் இது. ஸ்ரீ கபாலீஸ்வரர் ஆலயத்தில் எந்த ஒரு விழாவானாலும் இங்கு வந்து அன்னையிடம் உத்தரவு பெற்றே அதனை நடத்துகின்றனர். இந்தக் கோயிலில் ஆடிப்பூர விழா, தீச்சட்டி ஏந்கும் விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
அருள் சுரக்கும் கோலவிழி அம்மன் மயிலையின் கிராம தேவதையாகவும், எல்லைக் காளியாகவும் இருப்பதால் மயிலையில் உள்ள எந்த ஆலயத்தில் விழா நடைபெற்றாலும் முதல் மரியாதை ஸ்ரீ கோலவிழி அம்மனுக்குத்தான் கொடுக்கப்படும். ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்கள் விழா நடைபெறும்போது, கிராம தேவதையான கோலவிழி அம்மனிடம்தான் முதலில் உத்தரவு பெறுவார்கள்.
பத்ரகாளியான இவள், ஆதியில் மிகவும் உக்கிரமாக இருந்ததாகவும் ஆதிசங்கரர் இந்த அம்பிகையின் முன்பு ஸ்ரீ சக்கரம் ஸ்தாபிதம் செய்து சாந்த ஸ்வரூபிணியாக ஆக்கினார் எனவும் கூறப்படுகிறது. இக்கோயிலில் வாராகி அம்மனும் அவளின் வாகனமான ஆமையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆமைக்கு இளநீர் அபிஷேகம் செய்து வழிபட, தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.
ஆடி, தை மாதங்களில் இங்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்நாட்களில் பால், இளநீர், தேன் என 11 பொருட்களால் அம்பிகைக்கு அபிஷேகம் நடைபெறும். இக்கோயில் தீச்சட்டி ஊர்வலம் மிகவும் விசேஷமானது. முண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்தில் இருந்து தீச்சட்டி ஊர்வலம் தொடங்கி, கோலவிழி அம்மன் ஆலயம் வந்தடையும். மேலும், ஆடி மாத விளக்கு பூஜையும், கூழ் வார்த்தலும் மிகச் சிறப்பாகக் கடைபிடிக்கப்படும். அச்சமயம் அம்மனுக்கு அசைவ படையலுடன் கூழ் வார்த்தல் நடைபெறும். பிறகு அந்த அசைவ உணவு பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படும்.
அருள்தரும் கோலவிழி அம்மனை தரிசிக்க, ராகு, கேது தோஷம் விலகுவதுடன், அம்பிகையின் திருக்கண்களை தரிசிக்க அனைத்து தோஷங்களும் விலகி ஓடும் என்பது நம்பிக்கை. இக்கோயில் காலை 6 மணியிலிருந்து பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 9 மணி வரையும் பக்தர்களின் தரிசனத்துக்காகத் திறந்திருக்கும்.