சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று ஐயப்பனை தரிசித்த பிறகு பக்தர்கள் கட்டாயம் மாளிகைபுரத்தம்மனை தரிசிப்பார்கள். இந்த மாளிகைபுரத்தம்மன் யார் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
ஆதிபராசக்தி மகிஷாசுரனை வதம் செய்த பிறகு மகிஷாசுரனின் தங்கையான மகிஷி கடும் கோபம் கொண்டாள். பிரம்மாவை நோக்கி இரவு பகலாக கடும் தவமிருந்து, ‘பெண் வயிற்றில் பிறக்காத குழந்தையால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும்’ என்ற வரத்தை பெற்றுவிடுகிறாள்.
அந்த வரத்திற்குப் பிறகு தேவர்களை கடும் துன்பத்திற்கு உள்ளாக்குகிறாள். மகிஷியை அழிப்பதற்காக சிவபெருமானுக்கும், மோகினி அவதாரமான மகாவிஷ்ணுவுக்கும் பிறந்தவர்தான் சுவாமி ஐயப்பன்.
தனது தாயின் பிணி போக்க ஐயப்பன் புலிப்பால் எடுத்து வருவதற்காக காட்டுக்குள் வருகிறார். ஐயப்பனின் வருகைக்காக காத்திருந்த தேவர்கள் பகவானை பூஜை செய்து மகிஷியினால் ஏற்படும் துயரத்தைக் கூறி முறையிட்டனர்.
ஐயப்பன் தேவலோகம் சென்று மகிஷியை வென்று பூமிக்கு தள்ள, மிகிஷி அழுதா நதிக்கரையில் விழுந்தாள். மகிஷி மீண்டும் சாப விமோசனம் பெற்று, ஐயப்பனை தான் அடைய வேண்டும் என்கிற ஆவலை தெரிவிக்கிறாள். ஆனால், ஐயப்பன் தான் பிரம்மச்சரிய நிஷ்டையில் இருப்பதால் இது சாத்தியம் ஆகாது. தான் இருக்கும் இடத்தில் இடப்பக்கத்தில் மாளிகைபுரத்தம்மன் என்ற பெயரோடு அவர் விளங்கி வர ஐயப்பன் அருள் செய்தார்.
இப்போதும் சபரிமலைக்குச் சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யும் பக்தர்கள் பிறகு மாளிகைபுரத்தம்மனையும் சென்று வணங்குவார்கள். மாளிகைபுரத்தம்மனை 'மஞ்சள் மாதா' என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது மாளிகைபுரத்தம்மன் கோயில். இக்கோயிலில் மகிஷி ஐயப்பனுக்காக காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இக்கோயிலில் மாளிகைபுரத்தம்மன் சன்னிதி, நாகராஜா சன்னிதி, நாக யக்க்ஷி சன்னிதிகள் அமைந்துள்ளன. 'தேங்காய் உருட்டு' இக்கோயிலில் முக்கியமாக வழிபாடாகக் கருதப்படுகிறது. தேங்காயை தரையிலே உருட்டிய பிறகே படைக்கப்படும். மாளிகைபுரத்தம்மனுக்கு மஞ்சள், குங்குமம், சர்க்கரை, சிவப்புப் பட்டு, தேன், பழம் ஆகியவற்றை வைத்து தாம்பூலம் படைக்கப்படும். சபரிமலைக்கு செல்லும் போது இக்கோயிலையும் மறக்காமல் தரிசித்துவிட்டு வருவது சிறப்பாகும்.