இதுவரை எத்தனையோ அதிசயமான சிவலிங்கங்களப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்த சிவலிங்கம் சற்று வித்தியாசமானதாகும். இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் குடுமியுடன் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? அதுமட்டுமில்லை. இந்த கோவில் காதலர்களுக்கான கோவிலும் கூட. இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடுமியான் மலையில் உள்ள குடுமிநாதன் கோவில்தான் இந்த பெருமைகளை கொண்ட கோவிலாகும். இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானதாகும். பாண்டியர்கள், பல்லவர்கள், சோழர்கள் என்று பல மன்னர்கள் இந்த கோவிலுக்கு திருப்பணி செய்துள்ளனர்.
இக்கோவிலின் புராணப்படி, ஒருமுறை இந்த கோவிலை பராமரிக்கும் அர்ச்சகர் ஒரு பெண்ணை காதல் செய்துக் கொண்டிருக்கிறார். இதனால் சிவபெருமானுக்கு அன்று மாலைப்போட்டு அலங்கரிக்காமல் இருக்க, அந்த நேரம் பார்த்து சரியாக அரசன் அக்கோவிலுக்கு வந்துவிடுகிறார். என்ன செய்வதென்று புரியாமல் காதலியிடம் இருக்கும் மாலையை சிவலிங்கத்தில் போட்டு அதை எடுத்து அரசனிடம் கொடுக்கிறார் அர்ச்சகர். அந்த மாலையை வாங்கிய அரசன் அதில் நீளமான முடி இருப்பதை கவனித்து விடுகிறார்.
உடனேயே அர்ச்சகரிடம், 'என்ன இந்த மாலையில் முடியிருக்கிறது' என்று கேட்கிறார். இதனால் பதறிப்போன அர்ச்சகர் சிவபெருமானின் மீது பாரத்தை போட்டுவிட்டு ஒரு பொய் கூறுகிறார். அதாவது, 'அந்த முடி சிவபெருமானின் குடுமியிலிருந்து வந்தது' என்று அரசனிடம் கூறுகிறார். இதைக்கேட்ட அரசன் கோபம் கொண்டு சிவலிங்கத்தில் இருக்கும் குடுமியைக்காட்ட சொல்கிறார். பக்தனைக் காப்பாத்தும் பொருட்டு சிவபெருமான் சிவலிங்கத்தின் மீது குடுமியை வரவழைத்துக் கொள்கிறார். சிவலிங்கத்தில் இருக்கும் குடுமியை பார்த்த அர்ச்சகரும், அரசனும் இருவருமே ஆச்சர்யமடைகின்றனர்.
அதிலிருந்து இக்கோவிலுக்கு குடுமியான்மலை குடுமிநாதர் திருக்கோவில் என்ற பெயர் வந்தது. இக்கோவிலில் உள்ள சிவபெருமானை சிகாபுரீஸ்வரர், குடுமிநாதர் என்ற பெயர்களில் அழைக்கிறார்கள். இக்கோவிலுக்கு வரும் காதலர்களுக்கு அவர்கள் காதலை சிவபெருமான் சேர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையும் உண்டு.
இங்கு அமைந்துள்ள குகைக்கோவிலில் கர்நாடக சங்கீதத்திற்கான இலக்கணம் சொல்லும் இசைக்கல்வெட்டு அமைந்துள்ளது. மேலும் இங்கு எண்ணற்ற கல்வெட்டுக்களும், கலைநயமிக்க சிற்பங்களும் காண்போரை மெய்மறக்க செய்யக்கூடிய அழகைக்கொண்டதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.