
மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் ஒவ்வொரு வருடம் நடைப்பெறும் போதும் கூடவே பிரியாவிடை என்ற அம்மனும் வலம் வருவதை கவனித்திருப்போம். யார் இந்த பிரியாவிடை அம்மன்? அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
சுந்தரேஸ்வரரை விட்டு ஒருநொடிக் கூட பிரியாததால் தான் இந்த அம்மனுக்கு பிரியாவிடை அம்மன் என்ற பெயர் வந்தது. பிரியாவிடை அம்மன் சுந்தரேஸ்வரருடன் மூலஸ்தானத்திலே இருந்தாலும் யார் கண்களிலும் படுவதில்லை என்பதே விஷேசமாகும்.
சிவபெருமான் தனக்குள் அம்பிகையை ஐக்கியப்படுத்தி சிவசக்தி சொரூபமாக அருளுகிறார். சிவன் வேறு சக்தி வேறு என்றில்லை. சிவலிங்கத்தின் மேற்ப்பகுதியில் இருக்கும் பானம் சிவவடிவம், ஆவுடை என்று சொல்லப்படும் பீடம் அம்பிகையின் அம்சமாகும். சிவசக்தி சொரூபத்தை வெளிப்படுத்துவதற்காகவே சிவலிங்கத்திற்கு இப்படியொறு வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு 'சிவனை பிரியாத ஆவுடை' என்பது மருவி காலப்போக்கில் பிரியாவிடை என்றானது. பிரியாவிடை அம்மன் சிவனுக்குள்ளேயே மறைந்திருக்கும் சக்தியாக இருக்கிறாள். அவள் தான் போகசக்தி எனப்படும் பிரியாவிடை அம்மன்.
பழங்கால சிவாலயங்களில் பார்த்தால் சிவலிங்கத்திற்கு இடதுப்புறம் அமர்ந்த நிலையில் அம்மன் சிலை இருக்கும். இந்த அம்பிகையே போகசக்திகள் நிறைந்த பிரியாவிடை அம்மன் ஆவார். இந்த அம்பாள் முழுக்க முழுக்க தன் கணவனான ஈசனுக்காகவே உள்ளவள்.
இதற்கு உதாரணமாக மதுரை கோவிலை எடுத்துக் கொண்டால், இத்தலத்திற்கு அம்பிகை மீனாட்சி, தல இறைவன் சுந்தரேஸ்வரர். பக்தர்களுக்காக அம்பிகை மீனாட்சியாக இருக்கிறாள். அதேசமயம் கருவறையில் சிவபெருமானுக்கு அருகில் அம்மன் பிரியாவிடை என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.
சிவபெருமானுக்கு பூஜை செய்யும் முன் இந்த பிரியாவிடை அம்மனுக்கு பூஜை செய்து அனுமதி பெற வேண்டும் என்ற பழக்கம் தொன்றுதொட்டு இருக்கிறது. சிவபூஜையில் ஏதேனும் குறைகளும், குற்றங்களும் நிகழ்ந்தாலும் இந்த அம்மனிடமே மன்னிப்பு கேட்க வேண்டும்.
இந்த அம்பிகை கருவறையில் இருக்கும் ஈசனின் சக்தியாக இருக்கிறாள். அம்பிகை உற்சவர் விக்ரகம் தனியாக பவனி வரும். இவளோ தன் கணவனுடன் இணைப்பிரியாமல் சேர்ந்து வருவாள். அதனால் தான் இந்த அம்மன் பிரியாவிடை என்று அழைக்கப்படுகிறார்.