
சைவம், வைணவம் என்ற இரண்டு பெரும் பிரிவுகளை உள்ளடக்கிய சமயம், பின்னர் இந்து மதமாக மாறியது. முற்காலங்களில் சைவ, வைணவ சமயங்களில் இருவரில் யார் உயர்ந்தவர் என்ற பிணக்குகள் இருந்தன. புகழ் பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலில் கூட சோழர் கால சைவ, வைணவ சித்தாந்த சண்டைகளைப் பற்றி கூறியிருப்பார்கள். சைவர்கள், வைணவக் கடவுள்களையும், வைணவர்கள் சைவ கடவுள்களை வழிபடாமல் இருந்தனர். அப்படிப்பட்ட காலத்திலும் இரு சமய மக்களும் சேர்ந்து ஒரு கடவுளை வணங்கினார்கள். அந்தக் கடவுள்தான் அஞ்சனை புத்திரன் அனுமன்.
அனுமன் சைவ சமயத்தில் சிவபெருமானின் மறு உருவமாகப் பார்க்கப்படுகிறார். ஒருசில புராணங்களின்படி அனுமன் ருத்ர அவதாரமாகப் போற்றப்படுகிறார். அஞ்சனை மற்றும் கேசரி ஆகியோர் சிவபெருமானை நோக்கித் தவமிருந்தனர். அப்போது தசரதன் அயோத்தியில் புத்திர பாக்கியம் வேண்டி யாகம் செய்து கொண்டிருந்தார். அந்த யாகத்தில் கிடைத்த பிரசாதத்தின் ஒரு பகுதியை வாயு பகவான் எடுத்துக் கொண்டு, அதை அஞ்சனை கைகளில் சமர்ப்பித்தார். அஞ்சனை அதை உண்ட பிறகு சிவபெருமானின் அவதாரமாக அனுமன் பிறந்தார். அவர் பிறக்க வாயு பகவான் உதவியதால், அனுமனின் ஆன்மிகத் தந்தையாக வாயு தேவன் இருக்கிறார்.
அனுமன் சிவபெருமானை போன்ற சக்தியைக் கொண்டவர். அவரின் சக்தியை அளவிட முடியாது. அவர் அதிவேகமாக பறக்கக் கூடியவர். அனைத்து கடவுள்களின் சக்தியையும் ஒருசேரப் பெற்றவர். எப்போதும் ஆழ்ந்த தவத்தில் இருப்பவர். பல சிவன் கோயில்களில் அனுமன் விக்ரகம் வழிபாட்டில் இருப்பதைப் பார்க்கலாம். சைவர்கள் அனுமனை சிவனின் ஒரு வடிவமாக நினைத்து வழிபாடு செய்கின்றனர்.
வைணவ சமயங்களில் அனுமன் பக்தி மற்றும் விசுவாசத்தின் முழு உருவகமாக இருக்கிறார். அவரது ஸ்ரீராம பக்தி, லட்சுமணன் தனது அண்ணன் மீது வைத்துள்ள அன்பிற்கு குறைவில்லாதது. அனுமன் எப்போதும் ஸ்ரீராமரை மட்டுமே சிந்தையில் வைத்திருந்தார். ஸ்ரீராம சேவையே தனது வாழ்நாள் குறிக்கோளாக நினைத்திருந்தார். வைணவத்தில் சேவை, பணிவு, முழுமையான சரணாகதி ஆகியவற்றின் அடையாளமாக அனுமன் இருக்கிறார். இவை அனுமனை வைணவ மரபுகளின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றியுள்ளது.
இந்து மதம் எப்போதும் சிவன் அல்லது விஷ்ணுவினை முதன்மையாகக் கொண்டு இயங்குகிறது. இந்தக் கடவுள்களை தனித்தனியாகப் பின்பற்றுபவர்களை அனுமன் ஒன்றாக சேர்க்கிறார். ராமாயணம், மகாபாரதம், சிவ புராணம், பாகவத புராணம் ஆகியவற்றில் அனுமன் குறிப்பிடப்படுகிறார். அனுமனின் பிறப்பு ஸ்ரீராம அவதாரத்தில் அவருக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது.
அஞ்சனேரி மலையில் பிறந்த அனுமன் அரசு இழந்த சுக்ரீவனின் உற்ற நண்பனாக இருந்தார். அவருக்கு பல தேவர்கள் வரங்களை வழங்கினார்கள். இந்திரன், ‘அனுமனின் உடல் வஜ்ரம் போன்று வலிமையாக இருக்கும். தனது வஜ்ராயுதம் கூட அனுமனை தாக்காது’ என்று வரம் கொடுத்தார். அக்னி தேவன் நெருப்பினால் அனுமனுக்கு துன்பம் வராது என்றும், வருணன் நீரினால் அனுமனுக்கு தீங்கு நேராது என்ற வரங்களையும் கொடுத்தனர். வாயு பகவான் காற்றை விட வேகமாக செல்லும் ஆற்றலை அனுமனுக்கு வழங்கினார். இவ்வாறு பல வரங்கள் பெற்ற தெய்வீக அவதாரமாக அனுமான் திகழ்ந்தார்.
ஸ்ரீராமரை விட அனுமன் பலசாலியாக இருந்தாலும், ராவணனை அழிக்கும் ஆற்றல் கொண்டிருந்தாலும் தலைவனின் முடிவுக்குக் கட்டுப்பாட்டு இருந்தார். ஸ்ரீராமரின் தூதுவனாகவும், வானர சேனைகளுக்கு ஆலோசனை வழங்கியும் படையினை வழிநடத்தினார். சஞ்சீவி மலையை பெயர்தெடுத்து வந்து ஸ்ரீராமனையும் லட்சுமணனையும் காப்பாற்றினார். மகாபாரதத்தில் அனுமன் கிருஷ்ணரின் வேண்டுகோளின்படி அர்ஜுனனின் கொடியில் அமர்ந்து பாதுகாத்தார். அனுமன் சைவம், வைணவம் தாண்டி, சீன மதங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த கடவுளாகக் குறிப்பிடப்படுகிறார்.