
துளசி, ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானது என்பதால் அந்த மாலையை அணிபவர்கள் கிருஷ்ணருடன் நேரடி தொடர்பு கொள்கிறார் என்று நம்பப்படுகிறது. துளசி மாலை அதன் ஆன்மிக மற்றும் மருத்துவ நன்மைகளுக்காக போற்றப்படுகிறது. துளசி மாலையின் புனிதத்தை மதிக்கும் யார் வேண்டுமானாலும் இந்த மாலையை அணியலாம். பொதுவாக, பக்தர்கள், யோகிகள், ஆன்மிகவாதிகள் அணியும் துளசி மாலை அமைதி, ஆரோக்கியம் மற்றும் தெய்வீக உணர்வை அதிகரிக்கும்.
துளசி மாலையானது துளசி செடியின் வேர் பகுதியில் இருந்து சிறிய துண்டுகளை எடுத்து நூல் அல்லது கயிற்றில் கோர்த்து தயார் செய்யப்படுகிறது. பொதுவாக, துளசி மாலையில் 108 மணிகள் இருக்கும். சிலர் துளசி மாலையை கழுத்தில் அணிந்துகொள்வார்கள். சிலர் மந்திர ஜபம் செய்வதற்காக மட்டும் அதனை பயன்படுத்துவார்கள்.
துளசி மாலை அணிவதால் உடலுக்கு குளிர்ச்சியை அளித்து, நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது. உடலின் உஷ்ண நிலை சமநிலைப்படுத்தப்படும். இது மன அழுத்தத்தை குறைக்கவும், உறக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் உதவும் என்றும் நம்பப்படுகிறது.
புனிதமான பொருளாகக் கருதப்படும் துளசி மாலையை அணிபவர்கள் மனதளவிலும் உடலளவிலும் சுத்தமாக இருக்க வேண்டும்.
புனிதமான பொருளாகக் கருதப்படும் துளசி மாலை ஆன்மிகப் பயிற்சிக்கானவை. இவை நம் ஆன்மிக ஆற்றலை அதிகரிக்க உதவும். துளசி மாலையுடன் ஜபம் செய்வது எண்ணற்ற ஆன்மிகப் பலன்களைத் தரும். இவற்றை அழுக்கு மற்றும் வியர்வை போன்றவையின்றி சுத்தமாக வைத்திருக்க அவ்வப்பொழுது சுத்தமான நீரில் கழுவலாம்.
புனிதமான துளசி மாலை காலில் படுவதையோ, கீழே விழுவதையோ தவிர்த்து விடுவது அவசியம். அவை பயன்பாட்டில் இல்லாத பொழுது சுத்தமான ஒரு பை அல்லது சிறு பெட்டியில் வைத்திருப்பது நல்லது.
சாத்வீக உணவு: துளசி மாலையை அணிகின்றபொழுது சாத்வீகமான உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். துளசி மாலை அணிபவர்கள் அசைவ உணவுகள் மற்றும் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. அதேபோல், போதை தரும் வஸ்துக்களையும் பயன்படுத்தக் கூடாது.
புனிதத் தன்மை கெடாமல் இருக்க: கழிப்பறைக்கு செல்வதற்கு முன்பும், படுக்கைக்கு செல்வதற்கு முன்பும் அவற்றை கழற்றி வைப்பது அதன் புனிதத் தன்மையை காக்க உதவும்.
மாதவிடாய் காலம், இறப்பு நிகழ்ந்த நேரங்களில் துளசி மாலை அணிவதைத் தவிர்ப்பது நல்லது. மாதவிடாய் காலங்களில் பெண்கள் துளசி மாலையை அணியாமல் இருப்பது நல்லது.
துளசி மாலையை அணிந்திருக்கும்பொழுது இறைச்சி போன்ற அசைவ உணவு மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
உடைந்த மாலையை என்ன செய்வது?
புனிதமான ஜப மாலையாகக் கருதப்படும் இதை பக்தியுடனும், மரியாதையுடனும் கையாள வேண்டும். உபயோகித்து உடைந்த பழைய துளசி மாலையை யார் காலிலும் படாமல் ஆற்றில் அல்லது புனித நதியில் விடலாம் அல்லது புனிதமான மரத்தின் கீழ் வைத்து விடலாம்.