

ஒரு வீட்டில் தாயோ அல்லது தந்தையோ மறைந்துவிட்டால் அவர்களின் மகன்களுக்கு மொட்டையடிப்பது நம் இந்து மத வழக்கமாகும். இந்தியா முழுவதும் இந்தச் சடங்கை ஒரு பாரம்பரியமாகவே பின்பற்றுகிறார்கள் என்று சொல்லலாம். மொட்டையடிப்பது அல்லது சிரோமுண்டனம் என்பது வெவ்வேறு காலங்களில் பின்பற்றப்பட்டு வந்த ஒரு பழக்கம் ஆகும். இது எந்தக் காலத்தில் உருவானது என்று புராணங்களில் சரியாகக் குறிப்பிடப்படவில்லை. ஆனால், இது ஒரு மிகப் பழைமையான பாரம்பரியம் என்று கருதப்படுகிறது. இந்தச் சடங்கானது பல்வேறு சமுதாயங்களிலும், மதங்களிலும், வெவ்வேறு காரணங்களுக்காகப் பின்பற்றப்படுகிறது. இதற்கு ஆன்மிக ரீதியாகவும் சில விளக்கங்கள் உள்ளன. அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
தியாகத்தின் அடையாளம்: ஒருவருடைய தாயோ, தந்தையோ அல்லது மிகவும் நெருக்கமானவர்கள் மறைந்து விட்டால் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் மற்றும் அவர்கள் செய்த தியாகத்தின் அடையாளமாகவும் இந்த மொட்டையடிக்கும் சடங்கு கருதப்படுகிறது. இது மரபு மற்றும் பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு வழியாகும்.
சோகம் மற்றும் துக்கத்தின் வெளிப்பாடு: இறந்தவர்களை நினைத்து துக்கத்தின் வெளிப்பாடாகவோ அல்லது சோகத்தின் அடையாளமாகவோ இந்தச் சடங்கு செய்யப்படுகிறது. இதன் மூலமாக, பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் துக்கத்தை மற்றவர்களுக்கும் வெளிப்படுத்துகிறார்கள் என்று கருதப்படுகிறது. தவிர, மொட்டையடிப்பதால் வெளியாட்களும் அந்த நபரின் வீட்டில் துக்கம் ஏற்பட்டுள்ளது என தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். அவ்வாறு அறியும் பட்சத்தில், மற்றவர்கள் சூழ்நிலை அறிந்து அவரிடம் நல்லப்படியாக நடந்துக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
புனிதத்தின் அடையாளம்: இந்தச் சடங்கின் மற்றொரு விளக்கம் என்னவென்றால், புனிதத்தின் அடையாளமாக மொட்டையடித்துக் கொள்கிறார்கள் என்பதாகும். ஒருவரின் புனிதத்தை மற்றும் மனதின் துக்கத்தை வெளிப்படுத்தும் வழியாகவும் இது கருதப்படுகிறது.
உளவியல் ரீதியாக ஏற்படும் மாற்றம்: மொட்டையடிப்பதால் உளவியல் ரீதியாக அந்த நபரிடம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். உணர்வு ரீதியாக அவர் ஒருமுகப்படுத்தப்பட்டு குடும்பத்திற்கு தலைமை தாங்குவார். இது குடும்பத்துடனான இறுக்கத்தை அதிகரிக்கும், நல்ல மாற்றத்தை கொண்டுவரும் எனவும் கருதப்படுகிறது.
மேலும், குடும்பப் பொறுப்பை ஏற்கக்கூடிய வகையில் அந்த மகன் தன்னுடைய ஈகோ, சோம்பேறித்தனம் போன்றவற்றை எல்லாம் அறவே ஒழித்து விட்டு, தனது குடும்பத்திற்காக தன்னை அர்ப்பணிக்கும் விதமாகவும் இந்தச் சடங்கு கருதப்படுகிறது. இன்றளவும், இந்தச் சடங்கை எல்லோரும் பின்பற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்னதான் டிஜிட்டல் உலகில் முன்னேறிச் சென்றாலும், நம் இந்தியாவை பொறுத்தவரையில், ஒருசில சடங்குகளை நம் இந்து மதம் இன்றளவும் கடைப்பிடிக்கிறது என்றே சொல்லலாம்.