தீய சக்திகளை அழித்து, அடியவர்களைக் காப்பதற்காக சிவபெருமானால் உருவாக்கப்பட்ட ரூபமே பைரவர். நாய் வாகனத்துடன் நிர்வாண திருமேனியுடன் இருக்கும் இவரே புண்ணியத் தலமான காசியின் எட்டு மூலைகளில் இருந்து காவல் காப்பதாகச் செல்லப்படுகிறது. பைரவரே மும்மூர்த்தியின் அம்சமாகத் திகழ்வதால் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களுக்கும் காரணமானவர் இவரே எனச் சொல்லப்படுகிறது. அஷ்டமி என்பது பைரவருக்கு உரிய நாளாகும்.
அஷ்டமி நாளில் சுப காரியங்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என காலங்காலமாக நமது முன்னோர்கள் சொல்லி வருகிறார்கள். அதேசமயம் அஷ்டமி திதி மிகவும் சக்தி வாய்ந்தது. இந்த நாளின் ராகு காலம் நேரத்தில் விளக்கேற்றி வழிபட்டால் எப்படிப்பட்ட துன்பமும் பறந்து போய்விடும் என்ற பரிகாரத்தையும் நாம் கடைபிடிக்கிறோம்.
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு, உடை போன்ற அனைத்துவிதமான செல்வங்களையும் அள்ளித் தரக்கூடியவர்கள் அஷ்ட லட்சுமிகள் ஆவர். அனைத்திற்கும் லட்சுமி கடாட்சம் வேண்டும் என்பார்கள். பொதுவாக, மகாலட்சுமி என்றதும் அனைவருக்கும் செல்வம்தான் நினைவுக்கு வரும். ஆனால், மகாலட்சுமியுடன் சேர்த்து எட்டு லட்சுமிகள் உள்ளனர். தைரியம், தானியம், சந்தானம் என மனித வாழ்க்கைக்குத் தேவையான பதினாறு விதமான செல்வங்களையும் அருளுபவர்கள் இவர்களே.
உணவு துவங்கி, காரிய வெற்றி வரை மகாலட்சுமியின் கடாட்சம் வேண்டும். தைரிய லட்சுமி மட்டும் உடன் இருந்துவிட்டால் மற்ற அனைத்து லட்சுமிகளும் தானாகத் தேடி வந்து விடுவார்கள். ஆனால், இந்த எட்டு விதமான லட்சுமிகளும் சிவ உருவமான சொர்ண பைரவரிடம் அருளை பெற்று அதன் மூலம் கிடைத்த அருள் சக்தியைக் கொண்டுதான் உலக உயிர்களைக் காத்து வருகின்றனர். அஷ்டமி திதியன்று பைரவரை வணங்கி பூஜை செய்து தங்களின் சக்திகளை இவர்கள் புதுப்பித்துக் கொள்வதாக ஐதீகம். அஷ்டமி நாளில் அஷ்ட லட்சுமிகளும் பைரவ வழிபாட்டில் ஈடுபடுவதால், இந்நாளில் நடத்தப்படும் யாகம், பூஜை, ஹோமம், திருமணம் என எந்த சுப காரியத்திற்கும் எட்டு லட்சுமிகளும் தங்களின் அருளை வழங்க மாட்டார்கள்.
மகாலட்சுமியின் பார்வை இல்லாத ஒரு விஷயம் எவ்வாறு மங்கலகரமாக அமையும்? அதனால்தான் அஷ்டமி திதியில் சுப காரியங்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்கின்றனர். அதோடு, அஷ்ட லட்சுமிகள் வழிபடும் பைரவரை இன்று நாமும் வழிபட்டு நலம் பெற வேண்டும் என்பதற்காகத்தான் அஷ்டமி நாளில் வேறு சுபகாரியங்கள் எதையும் நடத்தாமல் விலக்கி வைத்தனர்.
இன்று பைரவர் வழிபாட்டை மேற்கொண்டால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். துஷ்ட சக்திகள் விரட்டி அடிக்கப்படும் என்பது ஐதீகம். வளர்பிறையில் வரும் அஷ்டமி நாளில் பைரவரை வழிபட்டால் தீமைகள் அழிந்து நல்லன எல்லாம் பெருகும்.