திருக்கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெறும்போது அந்தக் குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் எங்கிருந்தாவது கருடன் வந்து விமானத்தையும் ராஜகோபுரத்தையும் திருக்கோயில் வளாகத்தையும் வட்டமிட்டு பறந்து சென்று விடுவது தவறாமல் நடைபெற்று வரும் அதிசய நிகழ்வாகும். அந்தத் தருணத்தில் பக்தர்கள் அனைவரும் பரவச நிலையை அடைவர். வைணவ திருக்கோயில்கள் ஆனாலும் சிவபெருமான் திருக்கோயில் ஆனாலும் முருகன், விநாயகர், அம்மன் திருக்கோயிலானாலும் குடமுழுக்கின்போது இவ்விதம் தவறாமல் கருடன் வந்து வட்டமடுகிறது. இது ஏன்? இதற்குக் காரணம் என்ன என்பது பற்றி இப்பதிவில் காண்போம்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் குருக்ஷேத்திர புண்ணிய பூமியில் ஸ்ரீமத் பகவத் கீதையில் ‘வைநதேயஸ்ச பக்ஷீணாம்’ என்று அருளியிருக்கிறார். அதாவது, ‘பறவைகளில் நான் வைநதேயனாக (கருடனாக) இருக்கிறேன்’ என்று பொருள். இதிலிருந்து பறவைகள் பட்சிகள் ஆகியவற்றில் கருடனே மிகச் சிறந்தவன் என்று தெரிகிறது அல்லவா? பறவைகளுக்கும் பட்சிகளுக்கும் சில விசேஷ தெய்வீக சக்தி உண்டு.
கருடனுக்கு மகாவிஷ்ணுவின் சக்தி உண்டு. காகத்திற்கு பித்ருக்களின் சக்தி உண்டு. ஆந்தைக்கு எமதர்மராஜனின் சக்தி உள்ளது. பச்சைக் கிளிக்கு மகாலட்சுமியின் சக்தி உண்டு. மயிலுக்கு முருகனின் சக்தி உண்டு. இதேபோன்று நாய்களுக்கும் பல்லி போன்றவற்றுக்கும் சில விசேஷ தெய்வீக சக்திகள் உள்ளன. விந்தையின் புதல்வனாகப் பிறந்ததால் கருடனுக்கு வைநதேயன் என்ற பெயரும் உண்டு. தேவர்களாலும் பூஜிக்கப்படும் பெருமை பெற்றவன் கருடன். அவனது மூத்த சகோதரரான மாதலி சூரிய பகவானின் தங்கமயமான ரதத்திற்கு சாரதியாகி சூரிய மண்டலத்தை வலம் வரும் பேறு பெற்றவன்.
அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், குடமுழுக்கு, மகா சம்ப்ரோஷணம் என்றெல்லாம் புராதன நூல்களில் கொண்டாடப்படும் பிராண பிரயோக முறை நிலைகளின்போது பறவைகள், பட்சிகள், மிருகங்கள், பிராணிகள், மனிதர்கள் ஆகியோரிடமும் நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அந்தக் குடமுழுக்கு புனித நீர் அத்தகைய மகத்தான வீரியம் செலுத்தப்பட்டதாகும். கிளி போன்ற சிறு சிறு பட்சிகள் கூட அந்தப் பிராண சக்தியின் வேகத்தினால் ஈர்க்கப்பட்டு குடமுழுக்கு நடக்கும் தருணத்தில் கோயில் விமானம், கோபுரம் ஆகியவற்றின் மீது பறப்பதைக் காணலாம்.
கருடன் விமான கலசத்தின் நேர் மேலே அங்கு தேங்கி உள்ள மந்திர சக்தியினால் வட்டமிடும். இதே காரணத்தினால்தான் கும்பாபிஷேக சமயத்தில் எங்கே இருந்தாவது ஒரு துறவி அல்லது சன்னியாசி அல்லது ஒரு சித்த புருஷர் அல்லது ஒரு மகா புருஷராவது எவ்விதமோ அங்கு வந்து விடுவார்கள்.
மனிதர்களின் உடல், உள்ளம் ஆகியவற்றில் உள்ள அனைத்து தோஷங்களையும் குடமுழுக்கு தரிசனம் போக்கிவிடும். ஆதலால் எந்தத் திருக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றாலும் அது சிறு கோயிலாக இருந்தாலும் சரி அல்லது மிகப்பெரிய கோயிலாக இருந்தாலும் சரி மக்கள் அனைவரும் தவறாமல் சென்று தரிசிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.