மகாளய பட்ச மஹாபரணி ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது தெரியுமா?

Mahalaya Patcha Maha Bharani Deepam
Mahalaya Patcha Maha Bharani Deepam
Published on

காளய பட்ச தர்ப்பணம் என்பது புரட்டாசி மாத கிருஷ்ணபட்ச பிரதமை (பௌர்ணமியை அடுத்த பிரதமை) துவங்கி மகாளய அமாவாசை வரை இருந்தாலும்  அந்த பட்சத்தில் வரும் பரணி நட்சத்திர தர்ப்பணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.  இதை ‘மஹாபரணி’ என்று சிறப்பித்துச் சொல்கிறார்கள். பரணி நட்சத்திரம் என்பது யமதர்ம ராஜனின் நட்சத்திரம் ஆகும்.

மகாளயம் என்றாலே கூட்டமாக வருதல் என்று பொருள். ஆகவே, யமதர்மராஜனுக்கு உகந்த மஹாபரணி நட்சத்திர நாளில் கூட்டமாக வரும் நம் முன்னோர்களுக்கு சிராத்தம், தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.  ஏனென்றால், யமதர்மராஜன்தான் நம் முன்னோர்களை மகாளய பட்சம் எனப்படும் 15 நாட்களும் பூலோகத்திற்கு அனுப்பி வைக்கிறார் என்பது ஐதீகம். அதனால் அவருக்கு உகந்த மஹாபரணி நட்சத்திர நாளில் தவறாமல் தர்ப்பணம் செய்வது யமதர்மராஜனை மிகவும் மகிழ்வித்து நரகத்திற்கு செல்ல வேண்டிய நம் முன்னோர்களின் வேதனைகளை குறைத்து அவர்களை சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார் என்று கூறப்படுகிறது.

தந்தை, தாய் இறந்த திதி தெரியாதவர்கள் கூட இந்த மஹாபரணி நாளில் அவர்களுக்கு செய்ய வேண்டிய சிராத்தங்களை செய்து பித்ருகடனை தீர்க்கலாம். தவிரவும், ஏதாவது காரணத்தினால் தந்தை, தாய்க்கு செய்ய வேண்டிய வருடாந்திர திவசம் விட்டுப்போனால், அதையும்  கூட இந்த மஹாபரணி நாளில் செய்யலாம்.

மேலும், 15 நாட்கள் தொடர்ந்து தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் கூட  மஹாபரணி அன்று மட்டுமாவது எள்ளும் தண்ணீரும் இறைத்து தரப்பணம் செய்தால் புண்ணிய பலன்கள் நிச்சயமாகக் கிட்டும். முக்கியமாக மஹாபரணி அன்று கொடுக்கும் தர்ப்பணத்தால் குடும்பத்தில் துர்மரணம் அடைந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைவதால், பித்ரு தோஷங்கள் நிவர்த்தி ஆகும்.

மஹாபரணி நாளில் வீட்டில் உயரமான பகுதியில் யமதீபம் ஏற்றி வழிபாடு செய்வதும் புண்ணிய பலன்களைக் கொடுக்கும்.  இது நம் முன்னோர்களின் ஆசியைப் பெற்றுத் தருவதோடு மட்டுமல்லாமல், நமக்கும் நம் அந்திம காலம் வரை மரண பயம் இல்லாமல் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
தஞ்சை கோயில் உருவானதில் கருவூர் சித்தரின் பங்கு என்ன தெரியுமா?
Mahalaya Patcha Maha Bharani Deepam

யம தீபத்தை நம் வீட்டு மாடியில் ஒரு அகல் விளக்கில் முடிந்தால் தாமரைத் தண்டால் ஆன திரியையிட்டு ஏற்றி வைக்கலாம்.  வசதியில்லாதவர்கள் அவர்கள் வீட்டு பூஜையறையிலேயே தனியாக ஒரு அகல் விளக்கை ஏற்றலாம். இதனால் யமதர்மராஜன் மிக்க மகிழ்ச்சியடைவார்.  குடும்பத்தில் துர்மரணம் சம்பவிக்காது. யாருக்கும் மரண பயம் ஏற்படாது. அனைவரும் நல்ல ஆயுள், ஆரோக்கியத்துடன் எல்லா நலன்களையும் பெற்று வாழ்வர்.  மஹாபரணி அன்று செய்யும் தானம் தர்மங்களும் மிகுந்த நற்பலனைக் கொடுக்கும்.

ஆகவே, இந்த வருட மகாளயபட்சத்தில் வரும் மஹாபரணி தினமான இன்று, தந்தையில்லாதவர்கள்  அனைவரும் கட்டாயம் தர்ப்பணம் செய்து, வீட்டு மாடியில் யம தீபம் ஏற்றி வழிபட்டு எல்லா நன்மைகளையும் அடையலாம்.

யம தீபம் ஏற்றும்போது கூற வேண்டிய ஸ்லோகம்:

‘ஸ்ரீ யமாய நம: யமாய தர்மராஜாய ம்ருத்யவே சாந்த காயச
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச
ஔதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:
சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:’

எனும் ஸ்லோகத்தை இந்த யம தீபம் ஏற்றும்போது சொல்லி வழிபடுவது சிறப்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com