
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படுகிறது. சூரியன் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு சஞ்சரிப்பதை மாதப் பிறப்பு என்று சொல்கிறோம். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் சூரியன் சஞ்சரிப்பார். சூரியன் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ அந்த ராசியின் அதிதேவதையான தெய்வங்களை வழிப்படுவது நம்முடைய மரபு.
குறிப்பிட்ட அந்த தெய்வத்தை முறைப்படி வழிப்பாடு செய்தோமேயானால் நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து செல்வங்களும், செழிப்பும் பெற்று நன்றாக வாழலாம் என்பது நம்பிக்கை. அதன்படி பார்த்தால் சூரியன் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். அதனால் தான் புரட்டாசிக்கு 'கன்யா மாதம்' என்கிற பெயரும் இருக்கிறது.
புத்திக்கு அதிபதியான புதன் பகவானின் வீடு தான் கன்னி ராசி. புதன் கிரகத்தின் அதிதேவதையாக இருப்பவர் மகா விஷ்ணு. அதனால் தான் புரட்டாசி மாதத்தில் பெருமாளை முறையாக வழிப்பாடு செய்தோமேயானால் நம் வாழ்கைக்கு தேவையான அனைத்து வளங்களையும் கொடுப்பார். காக்கும் கடவுளான மகா விஷ்ணுவின் உன்னதமான மாதம் தான் புரட்டாசி மாதம்.
அதிலும் புரட்டாசியில் வரும் சனிக்கிழமை மிகவும் சக்தி வாய்ந்ததாகும். பெருமாள் சனிபகவானுக்கு ஒரு வரம் கொடுக்கிறார். 'யாரெல்லாம் சனிக்கிழமையில் என்னை வழிப்படுகிறார்களோ அவர்கள் எல்லாம் சனியால் ஏற்படும் கஷ்டங்களில் இருந்து விடுபடுவார்கள்' என்று புரட்டாசி மாதம் திருவோணம் நடசத்திரத்தில் தான் திருப்பதியில் வெங்கடாஜலபதி அவதரிக்கிறார். அதனால் தான் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
புராட்டாசி மாதத்தில் விரதம் இருந்து தான தர்மம் செய்யும் போது நம் கர்ம வினைகள் அனைத்தையும் போக்கி தூய்மையான நிலையை அடையலாம் என்று சொல்லப்படுகிறது.
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்து பெருமாளை வணங்கினால் எல்லா விதமான கஷ்டங்களும் நீங்கி செல்வமும், மகிழ்ச்சியும் பெருகும் என்பது ஐதீகம். புரட்டாசி சனிக்கிழமையில் தளிகைப்போட்டு மாவிளக்கு ஏற்றி பெருமாளை வழிப்படுவார்கள்.
புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருப்பதோடு பசியால் வாடும் மக்களுக்கு அன்னதானம் அளிப்பதால் கடவுளின் அருளைப் பெறலாம். பசிப்பிணியை அகற்றும் மகத்தான சேவையாக புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்து வருகிறது. புரட்டாசி மாதத்தின் கடைசி ஒன்பது நாள் நவராத்திரி வருகிறது இது பெண் தெய்வமான துர்கைக்கான பண்டிகையாகும்.