
பூரி ஜெகந்நாதர் ஆலயம் உலகப் புகழ் பெற்றது. ஒவ்வொரு வருடமும் பூரியில் நடைபெறும் ஜெகந்நாதர் தேர் திருவிழா உலகில் அதிக அளவில் மக்கள் கூடும் திருவிழாக்களில் ஒன்றாக உள்ளது. ஏராளமான மர்மங்கள் நிறைந்த இந்தக் கோயிலின் மூலவர் ஜெகந்நாதர் சிலை கூட பல்வேறு அதிசயங்கள் நிறைந்தது. பெரிய கண்கள், மூக்குத்தி மற்றும் முழுமையற்ற பெரிய உடல் கூட மர்மமாக உள்ளது. பூரியின் ஜெகந்நாதர் கோயில் பல மர்மங்களைக் கொண்டிருந்தாலும், இதுவரை யாராலும் அதைத் தீர்க்க முடியவில்லை.
ஜெகந்நாதர் சிலையின் மர்மம்:
பெரிய கண்கள்: ஜெகந்நாதர் சிலையின் முக்கிய ஈர்ப்பு, அவரது மிகப் பெரிய கண்கள் ஆகும். பரந்தாமனின் பெரிய கண்கள் பக்தர்கள் மீது அவர் அருள்புரிய விசாலமான பார்வை இருப்பதைக் காட்டுகிறது. அவரிடம் எந்த ஒளிவு மறைவையும் வைத்திருக்க முடியாது. அவர் அனைத்தும் அறிவார் என்பதே பெரிய கண்களின் தத்துவமாக உள்ளது.
முழு வடிவமின்மை: ஜெகந்நாதரின் உருவம் ஒரு முழுமை பெறாத வடிவத்தில் இருக்கும். இது இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பதை மட்டுமல்ல, எந்த ஒரு உருவிலும் இருப்பான் என்பதைக் காட்டுகிறது. இறைவன் நினைத்தால் எந்த ஒரு வடிவத்தையும் எடுக்க முடியும். அதற்கான சக்தி அவரிடம் உண்டு என்பதைக் காட்டுகிறது. மேலும், இறைவனை ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் அடைக்க முடியாது என்பதையும் இது உணர்த்துகிறது.
புராணக் கதை: ஜெகந்நாதர் சிலை முழுமை அடையாமல் இருப்பதற்கு பின்னால் ஒரு புராணக் கதை உண்டு. இந்திரத்யும்னன் என்கிற அரசர் ஜெகந்நாதருக்கு ஒரு அற்புதமான கோயிலைக் கட்ட விரும்பினார். பூமியில் உள்ள சிற்பிகளை விட, இந்த வேலையை தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவிடம் ஒப்படைப்பதுதான் சிறப்பாக இருக்கும் என்று கருதினார். அதன்படி ஜெகந்நாதருக்கு கோயில் கட்டும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு விஸ்வகர்மாவிடம் வேண்டினார். இந்திரத்யும்னன் வேண்டுதலுக்கு செவிசாய்த்த விஸ்வகர்மா ஒரு நிபந்தனையை விதித்தார்.
அவர், ‘சுவாமியின் சிலையைச் செதுக்கி முடிக்கும் வரை, யாரும் பட்டறைக்குள் வரக் கூடாது’ அதை மீறி யாரேனும் பட்டறைக்குள் நுழைந்தால் தான் உடனே வெளியேறி விடுவேன்’ என்று கூறினார். அவரது நிபந்தனைக்கு அரசர் ஒப்புக் கொண்டார். சிலைகளை செதுக்கும் பணி தொடங்கியது. தினமும் சிலை செதுக்கும் பட்டறைக்கு வெளியே நின்று உளியின் ஓசையை கேட்டு அரசர் மகிழ்ச்சி அடைவார். நாட்கள் செல்லச் செல்ல அரசருக்கு ஜெகந்நாதரின் சிலையை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துக் கொண்டு இருந்தது. ஆயினும், விஸ்வகர்மாவின் கோபத்திற்கு ஆளாகக் கூடாது என்பதால் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டார்.
ஒரு நாள் பட்டறையில் இருந்து எந்த ஒரு ஓசையும் கேட்கவில்லை. ‘ஒருவேளை சிலைகள் செதுக்கி முடிக்கப்பட்டு இருக்குமோ? அல்லது விஸ்வகர்மா வேலை செய்யாமல் போய் விட்டாரோ?’ என்று நினைத்து அரசர் இந்திரத்யும்னன் பட்டறைக் கதவை திறந்து உள்ளே நுழைந்து விட்டான்.
உள்ளே இருந்த விஸ்வகர்மா கோபமாக அந்த இடத்தை விட்டு சென்று விட்டார். அன்றிலிருந்து ஜெகந்நாதர், அவரது சகோதரர் பலராமர் மற்றும் சுபத்திரை ஆகியோரின் சிலை முழுமையடையாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பூரி கோயிலில் அருளும் ஜெகந்நாதர், பாலபத்ரர் மற்றும் சுபத்திரை ஆகியோரின் சிலைகள் தாரு பிரம்மா என்ற வேப்ப மரத்தில் இருந்து செய்யப்படுபவை. ஜெகந்நாதரின் சிலை ஒவ்வொரு 12 வருடங்களுக்கும் ஒரு முறை மாற்றப்படுகிறது. இவ்வாறு சிலை மாற்றும் சடங்கு சிறப்பாக நடைபெறுகிறது. இதற்கு 'நவகலேபரா' என்று பெயர்.