
இறைவனின் வசம் உள்ள தெய்வீகப் பட்டங்களைப் குறிப்பதுதான் இறைவனிடம் இருக்கும் அனைத்து அலங்காரம் மற்றும் பல்வேறு வகையான படைக்கலங்களாகும். இவை யாவும் யோக சாதனையில் மேலேறி வருபவர்களுக்கு சூட்டப்பட வேண்டிய தெய்வீகப் பட்டங்களையே குறிக்கும். இக்கருத்தையே நம் முன்னோர்கள் திருக்கோயில்களில் உறையும் இறைவனின் திருமேனியில் விதவிதமான அலங்காரங்களினால் மிகவும் சூட்சுமமான முறையில் நமக்கு விளக்கி கூறியுள்ளார்கள். அபிஷேக ஆராதனை சமயங்களில் விதவிதமான படைக்கலன்களை இறைவன் முன் சமர்ப்பணம் செய்வதை நாம் காணலாம். அதற்கும் தெய்வீகப் பட்டங்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
தெய்வீகப் பட்டங்களை அலங்கரிப்பவர்கள்: கிரீடம், பட்டு, பீதாம்பரம், வஸ்திரங்கள், குண்டலம், சங்க நிதி, பதும நிதி, சங்கு, கதை, சக்கரம், ஸ்ரீ வத்சம், ஹௌஸ்துபம் போன்றவையே தெய்வீக அனுக்கிரகத்தின் பேற்றினால் அருளப்படும் மகாபட்டங்கள் (Celestial awards) ஆகும். காலத்தையே உருவாக்கியவனால் சூடப்படும் இந்த தெய்வீகப் பரிசுகளே காலத்தால் அழியாதவை. சாஸ்வதமானவை, நித்தியமானவையாகப் போற்றப்படுகின்றன. சித்தர்கள், முனிவர்கள், மகரிஷிகள், தபோ நிஷ்டையில் மகத்தான யோக சாதனைகள் புரிந்து இத்தகைய தெய்வீகப் பட்டங்களை அலங்கரிக்கிறார்கள்.
கிரீடம்: கிரீடம் என்பது விதியின் போராட்டங்கள் அனைத்தும் நீங்கிய தேவ வாழ்க்கையின் பாதுகாக்கப்பட்ட நீண்ட ஆயுளைக் குறிப்பதாகும். 'கார்ப்போன் மகுடம்' என்பது இதனையே குறிக்கும்.
பட்டு, பீதாம்பரம்: பட்டு, பீதாம்பரம் போன்ற திவ்ய வஸ்திரங்கள் சூட்சும சரீரத்தின் பிராண சக்தியை விரயமாகாமல் பாதுகாப்பதைக் குறிக்கும்.
மகர குண்டலம்: மகர குண்டலம் என்பது தெய்வீகக் குரலை தம்முள் தரித்துக்கொண்ட ஞானிகளைக் குறிப்பதாகும். மெய்யோன் அருள்மொழியை தரித்துக்கொள்ளும், 'காதின் உண்மை அணிகலன்' என்பது மகர குண்டலமே ஆகும். மகர குண்டலம் என்பது திருஉள்ளம் படைக்கலாகும். சிரஞ்சீவி என்பது அதன் அர்த்தம். மார்க்கண்டேயர் போல், மாருதி போல் என்றும் அழியாநிலை, தெய்வலோகப் பிராப்தி பெறும் நிலை.
கதை: கதை தரித்துக் கொள்வது என்பது எந்தப் பட்டத்தை குறிக்கும் என்றால் இறைவனின் பரம பக்தன் அல்லது பரபக்தியில் சிறந்தவன் என்ற பட்டத்தை தாங்கியவனே 'கதை'யை தரித்துக் கொள்ள முடியும்.
சங்கு: பாஞ்சஜன்யம் என்ற சங்கநாதம் பிரணவ ஒளியை தபோ நிஷ்டையில் தரித்துக்கொண்ட மகரிஷிகள், பிரம்ம ரிஷிகள் பெற்ற சாதனையைக் குறிக்கும்.
பரமன் கை சக்கரம்: காலம் என்பது அனாதி. இடைவிடாமல் சக்கரம் போல் யுகந்தோறும் சுழன்று வருகிறது. ஜீவன்கள் அனைவரும் கால தேவனின் அடிமைகள். அவன் சொல்லை தட்ட முடியாது. மனித வாழ்க்கையில் சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென ஒரு முட்டுக்கட்டையை போட்டு தூக்கிக் கொண்டு போவான். காலனை காலால் உதைத்த சிரஞ்ஜீவியாய் வாழும் மார்க்கண்டே மகரிஷி, சிறிய திருவடி ஸ்ரீ ஆஞ்சனேயர், பெரிய திருவடி கருடாழ்வார், தும்புரு, நாரதர், பிருகு, அத்திரி, வசிஷ்டர் போன்ற பிரம்மஞானிகள் அலங்கரிக்கும் தெய்வீகப் பட்டமே சக்கரமாகும்.
சங்க நிதி: சித்த விருத்தியை சிதறிச் செல்லாமல் தடுத்து அதனை ஒருங்கிணைத்து ஒன்று குவிக்கும்போது தெய்வத்தின் அதி சூட்சும 'குரலின்' மெல்லிய ஒலியை தரித்துக்கொள்ளும் மகரிஷிகளுக்கு யோகத்தில் சூட்டப்படும் தெய்வீகப் பட்டமே சங்க நிதி என்பதைக் குறிப்பதாகும். சோடசக்கலை சித்தியின் பரிசே சங்க நிதியாகும்.
பதும நிதி: 'பதும நிதி' என்பது 'அஷ்ட ஐஸ்வர்யங்களின்' மூலமாகக் கிடைக்கும் தெய்வீகப் பேறு. இந்த தெய்வீகப் பட்டத்தை தாங்கிய மகான்கள் ஞானிகளின் தேகத்தில் அஷ்ட லட்சுமிகளின் பேரருள் தாண்டவம் ஆடும். பதும நிதியின் மூலமே ஞானிகள் அருள்புரிகின்றனர்.
ஹௌஸ்துபம்: ஹௌஸ்துபம் என்பது சிந்தாமணியை( சிந்தை+மணி) குறிப்பதாகும். தத்துவம் 21ம் கடந்த நிலையில் அடைந்தவர்கள் சூட்டிக்கொள்ளும் தெய்வீகப் பட்டமே ஹௌஸ்துபமாகும்.
ஸ்ரீ வத்சம்: ஸ்ரீ வத்சம் என்பது ஸ்ரீ சக்கர உபாசனையில் பிந்து மத்தியஸ்தம் என்கிற சித்தியை சாதகன் தொடும்போது தேவ காற்று அதில் வீசத் தொடங்கும். ஸ்ரீ வத்சம் சித்தியின் பயனே நாளடைவில் 'ஸ்ரீம்' பீஜம் மந்திர சக்தியை பெற உதவும் தெய்வீகப் பட்டமாகும்.
ஆன்மிக உணர்வு: பஞ்ச ஆகாசங்கள் நம்முடைய சூட்சும சரீரத்தின் இயக்கத்தில் அடங்கியுள்ளது. பஞ்ச ஆகாசங்களுக்குள் அடங்கி இருக்கும் ஒவ்வொரு ஆகாசங்களின் செயல்களை அல்லது மேனியில் உள்ள ஒவ்வொரு அடுக்குகளின் செயல்முறைகளைப் பற்றி அறிந்து கொள்வதுதான் ஆன்மிக உணர்வு என்பதாக கூறப்பட்டுள்ளது.