
‘பொங்கல்’ என்பது உழவர்களை சிறப்பிப்பதற்காக கொண்டாடாப்படும் பழமையான பண்டிகையாகும். இதை தமிழ்நாட்டில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடைப்பெறும். போகி, சூரிய பொங்கல், மாட்டுப்பொங்கல், கானும்பொங்கல் என்று வரிசையாக கொண்டாடப்படுகிறது. மாட்டுப்பொங்கல் கொண்டாடுவதற்கு காரணமாக சிவபெருமானையும், நந்திதேவரையும் வைத்து புராணக்கதை சொல்லப்படுகிறது. அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
எத்தனையோ உயிரினங்கள் இருந்தும் உழவுத் தொழிலுக்கு மாடுகள்தான் உதவுகிறது. எனவே, மாடுகளின் உழைப்பை சிறப்பிப்பதற்காகவே தமிழர்களால் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. புராணக்கதைப்படி, சிவபெருமான் ஒருமுறை நந்திதேவரை அழைத்து பூமிக்கு சென்று அங்குள்ள மனிதர்களிடம், ‘தினமும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும், மாதம் ஒருமுறை சாப்பிட வேண்டும்’ என்று அறிவித்துவிட்டு வரும்படி கட்டளையிட்டார்.
சிவபெருமான் கூறியதை கவனக்குறைவாக கேட்ட நந்தி மக்களிடம் சென்று, ‘எல்லோரும் தினமும் சாப்பிட வேண்டும். மாதம் ஒருமுறை எண்ணெய் குளியல் செய்ய வேண்டும்’ என்று தவறாக அறிவித்தார். இந்த தவறினால் கோபம் கொண்ட சிவபெருமான் நந்தியைப் பார்த்து, ‘உணவை தயாரிக்க நீ என்றென்றும் பாடுபடுவாய்!’ என்று சாபமிட்டார். இந்த சாபத்தின் காரணமாக பூமிக்கு வந்த நந்தி மனிதர்களுடன் சேர்ந்து வயலை உழுது மனிதர்களுக்கு அதிக உணவு உற்பத்தி செய்ய உதவி செய்தது. அன்றிலிருந்து மனிதனுக்கு உதவியாக இருந்த மாடுகள் இன்றுவரை விவசாயத்திற்கு பெறும் பங்கு வகிக்கின்றன.
மாட்டுப்பொங்கல் அன்று வீட்டில் மாடுகள் வைத்திருப்பவர்கள் அதை நன்றாக குளிப்பாட்டி அதன் கொம்புகளுக்கு பெயின்ட் அடித்து பூக்கள், மணி போன்றவற்றை கட்டி மாடுகளை அழகாக அலகரிப்பார்கள். மாட்டுப்பொங்கல் அன்று பாசிப்பருப்பு, அரிசி, வெல்லம், நெய், முந்திரி சேர்க்கப்பட்டு சர்க்கரை பொங்கல் தயாரிக்கப்படுகிறது.
இது முதலில் மாடுகள் உண்பதற்கு வழங்கப்படுகிறது. ‘ஜல்லிக்கட்டு’ என்று சொல்லப்படும் மாடுகளை வைத்து விளையாடும் விளையாட்டை மாட்டுப்பொங்கல் அன்று வெகுவிமரிசையாக கொண்டாடுவார்கள். வீட்டில் மாடுகள் இல்லாதவர்கள் சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள நந்தி பகவானை வழிபடலாம். இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும். கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி சுபிக்ஷம் பெருக வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்யலாம்.