முருகக் கடவுளையும் பாம்பையும் தொடர்புப்படுத்தி இருக்கும் கோயில்கள் இந்தியாவில் அரிதாகவே உள்ளது. அதில் ஒன்று தமிழ்நாட்டில் உள்ள மருதமலை கோயில், இன்னொன்று கர்நாடகாவில் உள்ள குக்கி சுப்ரமணியம் முருகன் கோயிலாகும். கர்நாடக மாநிலத்தில் அதிகமாக சுற்றுலா பயணிகளையும், பக்தர்களையும் இக்கோயில் கவர்ந்திழுக்கிறது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்று சொல்லலாம்.
முருகனுக்காக அமைந்துள்ள இக்கோயில் நாகசர்ப்ப தோஷ நிவர்த்திக்கு பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோயில் மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை சூழலுக்கு நடுவே அழகாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இக்கோயில் 5000 வருடம் பழைமையானதாகும். இக்கோயிலைக் கட்டுவதற்கு ஹெய்சாலா மற்றும் திராவிட கட்டடக்கலையை பயன்படுத்தியுள்ளனர். காசி கந்தம், கந்தபுராணம் போன்ற நூல்களிலும் இக்கோயில் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயிலில் உள்ள புனிதமான நதியான குமரதாராவில் மூழ்கி எழுந்தால், எப்பேர்ப்பட்ட பிணியும் நீங்கும் என்பது நம்பிக்கை.
இங்கே முருகனை சுப்ரமணியராகவும், நாகங்களின் கடவுளாகவும் வழிபடுகிறார்கள். ஒருமுறை வாசுகி பாம்பை கருடன் துரத்தி வர, சுப்ரமணியரிடம் வந்தே வாசுகிப் பாம்பு அடைக்கலம் அடைந்ததாக கதையுண்டு. இக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் குமரதாரா நதியை கடந்தே செல்ல வேண்டும். இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த நதியிலே மூழ்கிய எழுந்தே கோயிலுக்கு சென்று முருகனை வழிபடுகின்றனர்.
கோயிலின் நுழைவாயிலில் கருடன் இருக்கும் தூண் வெள்ளியால் மூடப்பட்டு இருக்கிறது. பக்தர்கள் இந்தத் தூணை சுற்றி வந்து வழிபடுகிறார்கள். இந்தத் தூணுக்கு வாசுகியின் விஷமுள்ள மூச்சுக்காற்றிலிருந்து பக்தர்களை காப்பாற்றும் சக்தி உள்ளதாக நம்புகிறார்கள். முருகப்பெருமான், வாசுகி, சேஷநாகம் ஆகியோருக்கு தினமும் பூஜை நடைபெறுகிறது.
புராணக் கதைப்படி, சூரபத்மாசுரனை கொன்ற பிறகு முருகரும், பிள்ளையாரும் குமரபர்வதத்தை அடைகிறார்கள். இங்கேதான் முருகனும் இந்திரனின் மகளான தெய்வாணையும் திருமணம் செய்து கொள்கின்றனர். அவர்கள் திருமணத்திற்கு பிரம்மன், விஷ்ணு, சிவன் என்று அனைவருமே வந்திருந்தனர். முருகரின் முடிசூடும் விழாவிற்கு எல்லா புனித நதிகளிலிருந்தும் தண்ணீர் எடுத்துவரப்பட்டு நிகழ்த்தப்படுகிறது. இந்தப் புனித நீரே குமரதாரா ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. வாசுகி நாகம் இங்கேயுள்ள பிலாத்வாரா குகையில் கருடனின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக ஒளிந்து கொண்டபோது அங்கிருந்தே சிவபெருமானை நோக்கித் தவமிருந்தது. எனவே, சிவபெருமானும் வாசுகிக்கு அபயம் அளித்தார். மேலும், முருகப்பெருமான் இங்கே வந்து வாசுகிக்கு அருள்பாளிப்பார் என்றும் உறுதி கூறினார்.
எனவே, இன்றளவும் வாசுகி மற்றும் நாகராஜனுக்கு இங்கு நடைபெறும் பூஜைகளும் முருகப்பெருமானுக்கே சென்று சேருகிறது என்று நம்பப்படுகிறது. ஆஸ்லேசபாலி மற்றும் சர்ப சம்ஸ்காரா ஆகிய இரண்டு பூஜைகளும் சர்ப்ப தோஷத்திற்காக இங்கே நடத்தப்படுகிறது. ஆஸ்லேசபாலி காலசர்ப்ப தோஷத்திற்காக நடத்தப்படும் பூஜையாகும். இதை ஒவ்வொரு மாதமும் வரும் ஆயில்ய நட்சத்திரத்தில் செய்கிறார்கள்.
சர்ப்ப சம்ஸ்காரா இங்கே வரும் பக்தர்கள் தங்கள் முன் ஜன்மத்தில் செய்த தவறுதலாக பாம்புக்கு தீங்கிழைத்திருந்தால், அதைப் போக்க இந்த பூஜையை செய்வதுண்டு. இதனால் அவர்கள் வாழ்வில் உள்ள தடைகள் நீங்கும் என்று நம்பப்படுகிறது.
எனவே, காலசர்ப்ப தோஷங்கள் உங்கள் வாழ்வில் நீங்க வேண்டும் என்றால், கட்டாயம் குக்கி சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்லுங்கள்.