கோடைக்கால நீர்ச்சுருக்கை குணமாக்க சில எளிய ஆலோசனைகள்!

Some simple tips to cure summer Urinary Problems
Some simple tips to cure summer Urinary Problemshttps://tamil.webdunia.com
Published on

கோடைக்காலம் வந்து விட்டாலே பலருக்கும் நீர்ச்சுருக்கு, நீர் கடுப்பு போன்ற நோய்களும் அதிக வெப்பத்தால் வரும். அவற்றைப் போக்குவதற்கு எளிய குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டால் நாமாகவே அதை சமாளித்து விடலாம். அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

கோடையில் ஏற்படும் நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, எரிச்சல் போன்றவற்றை போக்குவதற்கு கீழாநெல்லி ஒரு சிறந்த மருந்தாகும். கீழாநெல்லி இலையையும், ஒரு அரை தேக்கரண்டி சீரகத்தையும் அரைத்து எடுத்து இந்த விழுதை எருமைத் தயிரில் கலந்து மூன்று அல்லது நான்கு நாட்கள் பருகினால் சரியாகிவிடும்.

நன்னாரி வேரைச் சுட்டு கரியாக்கி பொடித்து ஒரு ஸ்பூன் பொடியுடன் அதே அளவு சீரகம் கலந்து சிறிது சர்க்கரை சேர்த்து நெய்யில் குழைத்து இருவேளை வீதம் 15 நாட்கள் சாப்பிட, சிறுநீர் எரிச்சல், கடுப்பு, சூடு ஆகியவை குணமாகும்.

கரிசலாங்கண்ணி இலையினை இடித்துச் சாறு பிழிந்து காலை வேளையில் மட்டும் ஒரு அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

கல்யாண முருங்கை இலைகளை அரிந்து சிறுபயறுடன் வேக வைத்து  உண்டால் பிரசவ காலங்களில் ஏற்படும் சிறுநீர் எரிச்சலை போக்கி தாராளமாக நீர் இறங்கச் செய்யும்.

வெள்ளை கல்யாண  முருங்கை இலையை இடித்து சாறு பிழிந்து அதனுடன் வெள்ளை வெங்காய சாற்றை சம அளவு எடுத்து சிறிது புழுங்கல் அரிசியை வேகவைத்து, வேகும்போதே சாற்று கலவையை இதில் சேர்த்து இளஞ்சூடாக்கி காலையில், மாலையில் சிறிதளவு குடித்து வர நீண்ட கால நீர்ச்சுருக்கு, நீர் எரிச்சல் போன்ற வியாதிகள் நீங்கிவிடும். மேலும், இவ்வாறு அருந்துவது பெண் மலட்டுத்தன்மையையும் மாற்றும். இலைச் சாற்றை சர்பத்தாக காய்ச்சியும் உபயோகிக்கலாம்.

மூங்கிலில் இருந்து எடுக்கப்படுவது மூங்கில் உப்பு. அது கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி அதனுடன் திப்பிலி, ஏலரிசி, இலவங்கப்பட்டை, கற்கண்டு ஆகியவற்றைச் சேர்த்துப் பொடித்து மாலை வேளையில் சிறிது பாலில் கலந்து சாப்பிட மேக அனல் தணியும்; இருமல் தீரும்.

அத்திப்பாலுடன் வெண்ணெய், சர்க்கரை கலந்து காலை, மாலை கொடுத்து வர குருதி கலந்த சிறுநீர், பித்தம் ஆகிய பிரச்னை தீரும்.

சந்தனக் கட்டையை பசும்பாலில் உரைத்து கலக்கி காலை மாலை குடித்து வர சிறுநீர்த் தாரை ரணம், அலர்ஜி ஆகியவை தீரும்.

தாழை ஓலைகளில் பாய் முடைந்து படுத்து பயன்படுத்து வர, அதிக சிறுநீர் பிரச்னை குணமாகும். தாழை மணப்பாகு எனப்படும் தாழம்பூவை அரிந்து நீரில் போட்டு ஊற வைத்து, கொதிக்க வைத்து வடிகட்டியதில் கற்கண்டு கலந்து சிறிது சிறிதாக நீர் கலந்து குடித்து வர உடல் வெப்பம் தணியும். இது அம்மை நோய்க்கு தடுப்பு மருந்தாகவும் பயன்படும். உடல் குளிர்ச்சி பெறும். நீர் எரிச்சல் சரியாகும்.

இதையும் படியுங்கள்:
கசகசாவில் உள்ள அளவற்ற ஆரோக்கியப் பயன்கள்!
Some simple tips to cure summer Urinary Problems

துளசி விதையை பசும்பாலில் ஊற வைத்து குடித்து வர நீர் சுருக்கு தீரும்.

புளியங்கொட்டை மேல் தோலை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வர நீர் கடுப்பு சரியாகும்.

நாவல் பழச்சாற்றில் சர்க்கரை சேர்த்து தேன் பதமாக காய்ச்சி வைத்துக்கொண்டு நீரில் கலந்து அதை சாப்பிட்டு வர அதிப சிறுநீர் பிரச்னை தீரும்.

கருங்காலி பட்டையை இடித்து நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர நீர்ச்சுருக்கு பிரச்னை தீரும்.

இதுபோல் கோடையில் வரும் நோய்களை குணமாக்க இதுபோன்ற மருத்துவ குறிப்புகளை பின்பற்றுபவர்கள், அருகில் இருக்கும் சித்த வைத்தியரிடம் கேட்டுக் கொண்டால், அதன் பத்திய முறைகளையும் கூறுவார்கள். அதன்படி நடந்தால் நோய் முற்றிலும் தீரும். நல்ல ஆரோக்கியமும் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com