கார்த்திகை அமாவாசைக்கு கங்கையில் புனித நீராட வேண்டுமா?

Do you want to take a holy dip in the Ganges for Karthik Amavasi?
Do you want to take a holy dip in the Ganges for Karthik Amavasi?https://ta.quora.com
Published on

கார்த்திகை மாத அமாவாசை புண்ய தினத்தன்று கங்கையில் புனித நீராட வேண்டுமா? அப்பொழுது நீங்கள் காசிக்கு செல்ல வேண்டாம். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? கார்த்திகை மாத அமாவாசை தினத்தன்று கும்பகோணம் சென்றாலே போதும். அங்கே திருவிசநல்லூர் கிராமத்தில் ஸ்ரீதர அய்யாவாள் வீட்டுக் கிணற்றில் கங்கை பொங்கி பிரவகிப்பாள்.

கும்பகோணம் அருகே ஒரு சின்ன கிராமத்தின் பெயர் திருவிசநல்லூர். கும்பகோணத்திலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கே ஒரு வீட்டின் கிணற்றில் கங்கை நதியே பிரவகித்து வந்ததால் இந்த கிராமம் பிரசித்தி பெற்று விளங்குகிறது. 300 ஆண்டுகளுக்கு முன் ஒரு கார்த்திகை மாத அமாவாசையன்று நடந்த சம்பவம் இது.

ஸ்ரீ வெங்கடேச ஸ்ரீதர அய்யாவாள் மைசூரில் ஸ்ரீதர லிங்கராயரின் மகனாகப் பிறந்தார். அய்யாவாளின் தந்தை மைசூர் சமஸ்தானத்தின் திவானாக பணியாற்றி வந்தார். தந்தையின் மரணத்திற்குப் பிறகு திவான் பதவி ஸ்ரீதர அய்யாவாளுக்கு வழங்கப்பட்டபோது அந்த வாய்ப்பை அவர் நிராகரித்தார். அவர் மிகச்சிறந்த சிவபக்தர் ஆதலால், ஊர் ஊராகச் சென்று எல்லா சிவாலயங்களையும் தரிசித்து வந்தார். தமிழகத்தில் காவிரியின் வடக்கு, தெற்குக் கரைகளில் அமைந்திருக்கும் சிவாலயங்களைத் தரிசித்து வணங்கியபின் திருவிடைமருதூர் என்னும் திருத்தலத்திற்கு வந்தார். அங்கிருந்த ஸ்ரீ மகாலிங்க சுவாமியின் திவ்ய தரிசனம் கண்டு பரவசமானார். தினமும் ஸ்ரீ மகாலிங்க சுவாமியை தரிசிக்க வேண்டும் என்னும் விருப்பத்தில் அருகிலுள்ள திருவிசநல்லூருக்குக் குடி வந்து விட்டார்.  தினந்தோறும் திருவிசநல்லூரிலிருந்து திருவிடைமருதூர் சென்று ஸ்ரீ மகாலிங்க சுவாமியை தரிசிக்காமல் உணவு உட்கொள்ள மாட்டார்.  இப்படியே அமைதியாகவும் சீராகவும் சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் ஒரு திருப்பம் வந்தது.

https://www.facebook.com/

அன்று கார்த்திகை அமாவாசை தினம். ஸ்ரீதர அய்யாவாளின் தகப்பனார் திவசம். அந்தணர்களை அழைத்து முறைப்படி திதி கொடுக்க மிகவும் சிரத்தையாக ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். திவச தினத்தன்று அந்தணர்களுக்கு அளிக்க வேண்டிய உணவுக்காக செய்யப்படும் சமையல் ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தது. அப்போது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு முதியவர் இவர் வீட்டு வாசலுக்கு வந்து, "ஐயா! மிகவும் பசிக்கிறது. ஏதேனும் உண்ண தாருங்கள்!" என்று வேண்டினார். பசியால் அவர் முகம் வாடியிருப்பதைப் பார்த்த ஸ்ரீதர அய்யாவாளுக்கு மனம் பொறுக்கவில்லை. உள்ளே சென்று பார்த்தார். திவசத்தன்று அந்தணர்களுக்குப் பரிமாற வேண்டிய உணவு மட்டும்தான் இருந்தது. இதை அவர்கள் மட்டுமே உண்ண வேண்டும். இந்த விதிமுறைகள் நன்கு தெரிந்திருந்தும் ஸ்ரீதர அய்யாவாள் அந்த உணவில் சிறிதெடுத்து, பசியோடு வாசலில் நிற்கும் முதியவருக்கு தந்து விட்டார். அந்த முதியவரும் அந்த உணவை நன்றியோடு பெற்று உண்டு விட்டு சென்று விட்டார்.

இதை அறிந்த அந்தணர்கள் மிக்க கோபம் அடைந்தார்கள். "சாஸ்திரிகள் திதி கொடுக்கும் முன்பே அதற்காக தயாரித்த உணவை யாரோ ஒருவருக்கு அளித்து விட்டதால் உங்களுக்கு தோஷம் ஏற்பட்டு விட்டது. இந்த தோஷம் போக வேண்டுமானால் காசிக்கு சென்று அங்கு கங்கையில் நீராடி விட்டு வர வேண்டும்.  பின்புதான் திதி கொடுத்து முடிக்க முடியும்!" என்று சொல்லி விட்டு சென்று விட்டார்கள்.

https://tamilandvedas.com/

அய்யாவாள் அதிர்ச்சியடைந்தார். காவிரிக்கரையிலிருந்து கங்கைக்கரைக்குச் செல்ல பல மாதங்கள் ஆகுமே? ஆனால், திதி இன்றுதானே கொடுக்க வேண்டும் என்று மிகவும் மனம் வருந்தி சிவபெருமானை துதித்தார். அவர் சிரசின் மேல் இருக்கும் கங்கையை போற்றும், 'கங்காஷ்டகம்' என்னும் ஸ்லோகத்தை வாசிக்கத் தொடங்க, இவர் வீட்டுக் கிணற்றில் கங்கை சங்கமித்தது. அவரது வீட்டுக் கிணற்றிலேயே கங்கை பிரவாகமாகப் பொங்கியது. இதனால் சிறந்த சிவபக்தரான ஸ்ரீதர அய்யாவாளின் பெருமையை அந்த கிராமமே உணர்ந்து கொண்டது. ஆனால், அதேசமயம் திருவிசநல்லூர் கிராமமே வெள்ளக்காடானது. இன்னும் சற்று நேரத்தில் அந்த ஊரே மூழ்கிவிடும் நிலை ஏற்பட்டது. இந்த வெள்ளத்திலிருந்து அந்த கிராமத்தையும், ஊர் மக்களையும் காப்பாற்றிடவும் அவரையே வேண்டினர். இதையடுத்து அய்யாவாள் கங்கையை மீண்டும் துதித்து தனது வீட்டுக் கிணற்றிலேயே தங்கும்படி பிரார்த்தனை செய்தார். வெள்ளம் மெதுவாக வடிந்து ஊர் இயல்பு நிலைக்குத் திரும்பியது. இந்த அற்புதத்தைக் கண்ட அந்தணர்கள் திரும்பி வந்து தாங்களும் கங்கையில் நீராடி நல்ல முறையில் திதியை முடித்துக் கொடுத்தனர்.

ஸ்ரீ பகவந்நாம போதேந்திர சுவாமிகள், ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகள் போன்றோருடன் திருவிசநல்லூரில் ஸ்ரீதர அய்யாவாள் சாஸ்திரங்களைப் பற்றி விவாதங்கள் செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஆன்மிகக் கதை - பகவானின் நாக்கில் கீறியது யார்?
Do you want to take a holy dip in the Ganges for Karthik Amavasi?

ஸ்ரீ மகாலிங்க சுவாமிகள் மேல் அபார பிரேமை கொண்ட ஸ்ரீதர அய்யாவாள் 1720ல் தன்னுடைய 85ஆவது வயதில் ஒரு நாள் திருவிடைமருதூரில் மகாலிங்க சுவாமிகள் தரிசனத்திற்குச் சென்றபோது, அங்கே நின்று கொண்டிருந்த பக்தர்கள் முன்னிலையில் அப்படியே மகாலிங்க சுவாமிகள் கர்ப்பகிரகத்திற்குள் பிரவேசித்து அவருடன் ஐக்கியமானார் என்று சொல்லப்படுகிறது.

இன்றும் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத அமாவாசை தினத்தன்று ஸ்ரீதர அய்யாவாள் இல்லத்திலுள்ள கிணற்றில் கங்கை நீர் பிரவகித்து வருகிறது. இதை 'கங்காஷ்டக மஹோத்ஸவம்' என்று பத்து நாள் உத்ஸவமாகக் கொண்டாடி வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் அன்று அங்கே சென்று புனித கங்கை நீரில் நீராடி வருகின்றனர்.  இந்த வருடம் கார்த்திகை அமாவாசை நாளைய தினம் 12.12.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று வருகிறது. காசிக்குச் சென்று கங்கையில் நீராட முடியாதவர்கள் அன்று காவிரிக்கரையிலுள்ள திருவிசநல்லூருக்குச் சென்று ஸ்ரீதர அய்யாவாள் இல்லத்துக் கிணற்றில் புனித கங்கை நீராடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com