

இந்து மத கலாசாரத்திலும் தெற்காசிய கலாசாரத்திலும் காலில் விழுவது பெரியோர்களை மதிக்கக்கூடிய, அவர்களுக்கு மரியாதை செலுத்தும் கலாசாரத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. காலில் விழுவது என்பது வெறும் மரியாதையை மட்டும் காட்டும் செயலாக இல்லாமல், பெரியவர்களிடமிருந்து ஆசிகளையும் வாழ்த்துக்களையும் பெறும் அணுகுமுறையாக இருக்கிறது. அதேநேரத்தில் எல்லோர் காலிலும் முழுவதும் புண்ணியத்தை சேர்ப்பதற்கு பதில் பாவத்தை சேர்த்து விடும்.
ஆன்மிக ரீதியாக ஒருவரது உடலில் உள்ள சக்தி கால்கள் வழியாகவே வெளியேறுவதாக நம்பப்படுகிறது. ஒரு பெரியவர் அல்லது குருவின் கால்களைத் தொட்டு வணங்கும்போது அவரது ஆற்றல் மற்றும் ஞானம், கால்களின் வழியாக வெளியேறி, ஆசி பெறும் நபரின் கை வழியாக அவரது உடலுக்கு செல்கிறது. இது நம் உடலின் ஆக்ஞா சக்கரம் மற்றும் சஹஸ்ரார சக்கரம் போன்ற உயர் ஆற்றல் மையங்களைத் தூண்டுகிறது. இந்தக் காரணத்தினால்தான் ஆசீர்வாதம் வழங்கும்போது பெரியவர்கள் தங்களது இரு கைகளையும் தலையில் வைத்து ஆசீர்வாதம் வழங்குகிறார்கள். இதன் மூலம் பெரியோர்களிடம் உள்ள நேர்மறை ஆற்றல் மற்றும் ஞானம் ஆகியவை எளிதில் ஆசி பெறுபவர்களுக்கும் செல்கிறது.
ஒருவரது காலில் விழும்போது அந்த நபரின் தனிப்பட்ட குண நலன்களையும் யோசித்து விட்டு விழ வேண்டும். தீயவர்கள் காலிலும் எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களின் காலிலும் நீங்கள் விழுந்தால் புண்ணியத்திற்கு பதில் அவர்களின் பாவங்கள் உங்களிடமும் வந்து சேரக் கூடும். அதனால் ஆசிர்வாதம் வாங்கும்போது ஒருசிலரை தவிர்த்து விட வேண்டும் என்ற நீண்ட கால நம்பிக்கை உள்ளது.
1. ஆசிர்வாதம் பெறுவதற்கு நேரம், காலம், சூழ்நிலை, இடம் எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும். கோயிலுக்குள் ஏதேனும் பெரியோர்களையோ குடும்ப உறுப்பினர்களையோ சந்தித்தால் அந்த இடத்தில் ஆசீர்வாதம் வாங்குவதைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில், கோயில் என்பது இறைவனின் வீடாகும். அந்த இடத்தில் இறைவனைத் தவிர, யாரையும் வணங்கக் கூடாது. அந்த இடத்தில் மற்றவர்களின் காலில் விழுவது கடவுளுக்கு நிகராக இன்னொரு நபரை கருதுவதற்கு சமமாகும்.
2. சூரியன் மறைந்த பிறகு யாருடைய காலிலும் விழுந்து ஆசீர்வாதம் பெறக் கூடாது. இருள் நேரத்தில் நேர்மறை ஆற்றல்கள் மறைந்து, எதிர்மறை ஆற்றல்கள் உண்டாகும் நேரம் என்பதால் அப்போது ஆசிகளைப் பெறுவதைத் தவிர்த்து விட வேண்டும்.
3. ஒருசில இடங்களில், தங்களின் பாரம்பரிய முறைப்படி சிறுமிகளை தெய்வத்தின் வடிவமாகக் கருதி குறிப்பிட்ட காலம் வரை மரியாதை செலுத்துவார்கள். அந்த பெண்களைத் தவிர மற்ற திருமணமாகாத பெண்களின் காலில் எப்போதும் விழக் கூடாது. அதுபோல, வயதில் சிறிய ஆண்களின் காலிலும் விழக் கூடாது. இவ்வாறு செய்தால் ஆசி கொடுப்பவருக்கு ஆயுள் குறையும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
4. ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவரது கால்களையும் உடலையும் தொட்டு கும்பிடக் கூடாது. இவ்வாறு செய்வதால் தூங்கும் நபரின் ஆயுள் குறையும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
5. ஒருவர் கடுமையாக நோயில் இருக்கும்பொழுது அவரிடமும் ஆசிகளைப் பெறுவது தவறான விஷயமாக கருதப்படுகிறது.
6. குளிக்காமல் இருப்பவர்கள், சுத்தமில்லாமல் இருப்பவர்கள், அசுத்தமான இடங்களில் இருந்து வந்தவர்கள், பசியுடன் இருக்கும் துறவி, போதையில் இருக்கும் மனிதர், துக்கத்தில் இருக்கும் ஒருவர், கோபமாக இருப்பவர்கள், வன்மம் மிகுந்தவர்கள், பொறாமை எண்ணம் கொண்டவர்கள் ஆகியோரிடம் ஆசிர்வாதம் வாங்கினால் நல்ல பலனுக்கு பதிலாக கெடுபலனே வந்து சேரும்.
7. சோகமான நிகழ்வுகள், துக்க வீடுகள் ஆகிய இடங்களில் யாரிடமும் ஆசி பெறுவது பாவங்களை கொண்டு வந்து சேர்த்து விடும்.