

தேய்பிறை அஷ்டமி என்பது ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி முடிந்து தேய்பிறை காலத்தில் வரும் அஷ்டமி திதியைக் குறிக்கிறது. கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி மகாதேவாஷ்டமி என்றும் பைரவாஷ்டமி என்றே போற்றப்படுகிறது. காரணம் இந்த நாளில்தான் பிரம்மனின் அகந்தையை அழிக்க சிவபெருமான் தன் சக்திகளில் ஒன்றாக கால பைரவரைத் தோற்றுவித்தார். இந்த நாளில் சிவபெருமானின் அம்சமான பைரவரை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மாதந்தோறும் அஷ்டமி திதி வந்தாலும் கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி திதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அந்த வகையில் நாளை தினம் வரும் அதாவது டிசம்பர் 12-ம்தேதி வெள்ளிக்கிழமை வரும் தேய்பிறை அஷ்டமி திதி உங்கள் வாழ்க்கையில் உள்ள கஷ்டம், கடன் தொல்லை அனைத்தும் தீர ஒரு அற்புதமான நாள்.
நாளை(டிசம்பர் 12-ம்தேதி) மதியம் 1.57க்கு தேய்பிறை அஷ்டமி திதி ஆரம்பிக்கிறது. மறுநாள் 13-ம்தேதி சனிக்கிழமை பிற்பகல் 2.58 மணிவரை அஷ்டமி திதி உள்ளது. இது கால பைரவரை வழிபட மிகவும் உகந்த நேரம் ஆகும்.
நாளைய தினம் அதிகாலையில் எழுந்து நீராடிய பின்னர் பூஜையறையில் பைரவருக்கு செவ்வரளி மலர் சாற்றி, தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினம் முழுவதும் உணவருந்தாமல் விரதம் இருக்கலாம்.
தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. கீழே உள்ள பைரவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்யலாம்.
பைரவர் காயத்ரி மந்திரம் :
ஓம் திகம்பாராய வித்மஹே
தீர்க்க சிஸ்னாய தீமஹி
தந்தோ பைரவ ப்ரசோதயாத்
முடியாதவர்கள் அல்லது வேறு மந்திரம் தெரியாதவர்கள் ‘ஓம் பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி பைரவரை வழிபாடு செய்யலாம்.
நாளை மாலை நேரத்தில் சிவன் கோவிலுக்கு சென்று பைரவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மலர்கள் சமர்ப்பித்து, செவ்வாழைப் பழம் நைவேத்தியம் வைத்து, தேங்காய் அல்லது பூசணிக்காயில் நெய் தீபமேற்றி மனமுறுகி வேண்டிக்கொண்டால் பைரவர் உங்களை கைவிட மாட்டார். பைரவரை வழிபடுவதால், தீய சக்திகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் தொழில் தடை நீங்குவதோடு எதிரிகள் தொல்லை இருக்காது. நம்முடைய துன்பங்கள், கஷ்டங்கள் நீங்கி, நல்லது நடக்கும் என்று நம்பப்படுகிறது.
தேய்பிறை அஷ்டமி நாட்களில் அசைவ உணவு உண்ணுவதை தவிர்ப்பது நல்லது. அதேபோல் திருமணம், புது வீடு வாங்குதல் போன்ற சுப காரியங்களை தேய்பிறை அஷ்டமியில் செய்யக்கூடாது. நான்கு பேருக்காவது உணவுப் பொட்டலம் வழங்குங்கள். நாய்களுக்கு பிஸ்கட் வழங்குங்கள்.
இந்நாளில், பைரவரை மனதார வேண்டிக்கொண்டு, அன்னதானம் செய்வது மும்மடங்கு பலன்களைக் கொடுக்கும் என்பது ஐதீகம்.
நன்மைகள் பல அருளும் ஸ்ரீபைரவ மூர்த்தியை காலபைரவாஷ்டமி நாளில் வணங்கி சகல நன்மைகளும் பெறுவோம்!