ஒருவர் தன் வீட்டுக்கு அருகிலுள்ள சலூன் ஒன்றுக்கு முடிதிருத்தம் செய்வதற்காக சென்றிருந்தார். அங்கிருந்த முடி திருத்துபவர் வழக்கம் போல உலக அரசியல் தொடங்கி, உள்ளூர் அரசியல் வரை பேசிக்கொண்டு தனது வேலையையும் பார்த்துக்கொண்டிருந்தார்.
சற்று நேரம் கழித்து அவர்களுடைய பேச்சு கடவுள் குறித்து திரும்பியது. அந்த முடி திருத்துபவர் சொன்னார், "கடவுள் இருக்கிறார்னு சொல்றத மட்டும் நான் நம்பமாட்டேன்" என்றார்.
அதைக்கேட்ட மற்றொருவர் வியப்போடு, "ஏன், என்ன காரணம்? எதை வைத்து இந்த முடிவுக்கு வந்தீர்கள்?" என்றார்.
"சார், நீங்க எங்கேயும் போக வேண்டாம். அதோ, எதிரில் இருக்கும் ஆதரவற்றோர் இல்லத்தையும் பக்கத்துல இருக்கிற மருத்துவமனையையும் பாருங்கள். உங்களுக்கே தெரியும் கடவுள் இல்லை என்று. கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால் ஏன் இத்தனை ஆதரவற்றக் குழந்தைகள்? ஏன் இத்தனை நோயாளிகள்? கடவுள் இருந்திருந்தால் நோயும் வலியும் இருக்கக்கூடாது அல்லவா? நீங்கள் சொல்லும் அன்பின் வடிவமான கடவுள் எதற்காக இவற்றை அனுமதிக்க வேண்டும்?" என்று படபடவென பொரிந்து தள்ளிவிட்டார் முடி திருத்தும் ஆசாமி.
அவர் பேசிய பேச்சுக்கு பதில் சொன்னால் நிச்சயம் பெரிய வாக்குவாதத்திற்கு வழி வகுக்கும் என்று கருதிய அந்த நபர் எதுவும் சொல்லாமல் ஆளுயரக் கண்ணாடியில் தன்னைச் சரிபார்த்துவிட்டு கடையை விட்டு வெளியேறும் சமயம், கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தபோது, சடை பிடித்த அழுக்கேறிய நீளமான தலைமுடியும் தாடியும் கொண்ட ஒருவர் எதிரே வருவதைப் பார்த்துவிட்டு, மீண்டும் சலூனுக்குள் நுழைந்து அந்த முடி திருத்துபவரிடம், "உங்களுக்கு ஒன்று தெரியுமா? இந்த உலகத்தில் முடி திருத்துபவர் என்று ஒருவர் கூட இல்லை" என்றார்.
உடனே அதிர்ச்சியான முடி திருத்துபவர், "எப்படி சொல்றீங்க? நான்தான் இங்கு இருக்கிறேனே. உங்களுக்காக உங்களை அழகுபடுத்துவதற்காக நான் இருக்கிறேன்" என்றார்.
"இல்லை... நீங்கள் சொல்வது பொய். அப்படி முடி திருத்துபவர் என்று ஒருவர் இருந்திருந்தால் இப்படி நீளமான முடியுடனும் மழிக்காத தாடியுடனும் இவரைப் போல ஒருவர் இந்த ஊரில் இருக்க மாட்டான்."
"முடி திருத்துபவர் நாங்கள் பலர் இருக்கிறோம். ஆனால், எங்களிடம் வராமல் ஒருவர் இருந்தால் இப்படித்தான் இருப்பார். அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்?"
"மிகச் சரியாகச் சொன்னீர்கள். அதேபோலத்தான், கடவுள் என்பவர் நமக்காக இருக்கிறார். நாம் அவரைச் சரணடையாமல், 'கடவுளே இல்லை' என்று சொன்னால் என்ன அர்த்தம்?" என்றார்.
அர்த்தம் பொதிந்த இந்தக் கேள்வியில் முடி திருத்துபவர் வாயடைத்துப் போனார்.