
கருப்பு நிறத்திற்கு அறிவியல் ரீதியாக எல்லா விதமான ஒளிகளையும் தன்னுள் ஈர்த்துக் கொள்ளும் தன்மையுண்டு. கருப்பு நிறப் பொருட்களை நாம் வைத்திருந்தால், நம்மிடம் இருக்கும் கண் திருஷ்டி போன்றவற்றை அது எடுத்துக்கொள்ளும் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பதிவில் கருப்பு நிற செல்லப்பிராணிகளை நம் வீட்டில் வளர்ப்பதால் நமக்கு கிடைக்கும் பலன்கள் பற்றிய நம்பிக்கைகளை பார்ப்போம்.
சில உயிரினங்களை நம் வீட்டில் வளர்ப்பதால், நமக்கு பாதுகாப்பும், அதனால் நல்ல பலன்களும் நமக்கு கிடைக்கிறது. நம்மை சுற்றியுள்ள போட்டி பொறாமை, கண் திருஷ்டி, நெகட்டிவ் வைப்பிரேஷன் போன்றவற்றை வீட்டில் வளர்க்கும் கருப்புநிற பிராணிகள் தன்னுள் கவர்ந்திழுத்துக் கொள்ளும் என்று சொல்லப்படுகிறது.
பெரும்பாலும் வீட்டில் வளர்த்த கருப்பு நிற பிராணிகளான ஆடு, மாடு, கோழி போன்றவற்றை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கோவிலுக்கு நேர்ந்து விடுவதை நம் முன்னோர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனராம். இதனால், அவர்கள் வீட்டில் இருந்த கண் திருஷ்டி போன்றவற்றை அது எடுத்துக்கொண்டு செல்கிறது என்பது நம்பிக்கை.
வீட்டில் வளர்க்கும் மீன்கள் சில நேரங்களில் இறந்து விடுவதைப் பார்த்திருப்போம். அவ்வாறு மீன்கள் இறந்துப் போவதற்கான காரணம், தன் எஜமானுக்கு வரவிருக்கும் ஏதோ ஒரு பெரிய ஆபத்தை அது எடுத்துக்கொண்டு உயிரைக் கொடுத்ததாக சொல்வார்கள். மீன்களில் கருப்பு நிறத்தில் மீன்கள் வளர்ப்பது மிகவும் விஷேசமாம்.
திருமணத்தடை, குழந்தையின்மை போன்ற தோஷங்கள் சிலருக்கு இருக்கும். அது நீங்குவதற்கு வீட்டில் கருப்பு நிற செல்லப்பிராணிகளை வளர்க்க வேண்டும் என்பதும் அந்த தோஷங்கள் நிவர்த்தியான பிறகு அந்த பிராணிகளை வீட்டிலே வைத்திருக்கக் கூடாது என்பதும் யாருக்காவது கண்டிப்பாக தானமாக வழங்கிவிட வேண்டும் என்பதும் வழக்கத்தில் இருந்துவருகிறது .
நம்முடைய கைகளிலும், கால்களிலும் கருப்பு கயிறு கட்டுவதற்கான முக்கிய காரணம் கண் திருஷ்டி நீங்க வேண்டும் என்பதற்காகதான். கருப்பு நிற செல்லப்பிராணிகளை வீட்டிலே வளர்ப்பதன் மூலமாக துஷ்டசக்திகள் நம்மை நெருங்க விடாமல் காக்குமாம். நம்மிடம் இருக்கும் தோஷங்களை தடுக்கவும் கருப்பு நிற உயிரினங்கள் உதவுகின்றனவாம்.
உங்கள் வீட்டிலும் கருப்பு நிறத்தில் செல்லப்பிராணிகள் வளர்க்கிறீர்களா?