புரட்டாசி மாதத்தில் வீட்டில் இவற்றைச் செய்தால் வாழ்வில் வளம் பெருகும்!
புரட்டாசி மாதம் பகவான் மகாவிஷ்ணு வழிபாடுகளுக்கு ஏற்ற மாதமாகும். அதோடு, இம்மாதத்தில்தான் நவராத்திாி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. புரட்டாசியில் திருமலை திருப்பதி கோயிலுக்குச் சென்று வழிபாடுகள் மேற்கொள்ள இயலாதவர்கள் மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியிலிருந்து நாகை செல்லும் வழியில் சுமாா் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அண்ணன் பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளை வழிபட்டு வரலாம். இதனால் திருப்பதி சென்று பெருமாளை தரிசித்து வந்த புண்ணியம் கிடைக்கும்.
முக்கியமாக, புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் எள், வெல்லம் இவற்றை அன்னத்துடன் சோ்த்து பிசைந்து காகங்களுக்கு உணவாய் வைக்க வேண்டும். இதனால் பல நன்மைகள் கிடைப்பதோடு, சனி பகவானின் தோஷம் விலகும். புரட்டாசி சனிக்கிழமைகள் பெருமாளுக்கு ஏற்ற மாதம் என்பதால், அந்நாளில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதும், புதிதாய் கடன் வாங்குவதையும் தவிா்ப்பது நல்லது.
நவராத்திாி திருநாளில் வீட்டில் ஒட்டடை படிந்திருந்தால் அவற்றை அப்புறப்படுத்தக் கூடாது. நவராத்திாி நாளில் லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்வது மிகவும் நன்மை தரக் கூடியதாகும். புரட்டாசி மாதம் விரதங்களை மேற்கொள்ளவும் ஏற்ற மாதமாகும். எனவே, மகாலெட்சுமி விரதம், கெளாி விரதம், தசாவதார விரதம் போன்றவற்றை மேற்கொள்வது நல்ல பலனைத் தரும். அதேபோல், காலசர்ப்ப தோஷம், களத்திர தோஷம், நாக தோஷம் போன்ற தோஷங்களால் அவதிப்படுபவர்கள் புரட்டாசி மாதத்தில் கருட வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும்.
புரட்டாசியில் திருப்பதி வேங்கடாஜலபதிக்கு வீட்டிலேயே மாவிளக்கு போடலாம். இதனால் குடும்பத்துக்கு நல்ல பலன் கிடைக்கும். புரட்டாசி சனிக்கிழமைகளில் புதிய அகல் விளக்கில், தாமரைத்தண்டு திாி போட்டு, நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் வீட்டில் சகல நன்மைகளும் ஏற்படும். அதேபோல், புரட்டாசி மாதத்தில் வீட்டில் பஜனைகள் மேற்கொள்வது நல்லது.
பெருமாள் பாயசப் பிாியா் என்பதால் பாயசம் நிவேதனம் செய்து வழிபடுவது நல்லது. புரட்டாசி மாதத்தில், தான தர்மங்கள் செய்வது நல்லது. புரட்டாசி சனிக்கிழமைகளில் எள்ளுப் பொடி சாதம் செய்து பெருமாளுக்கு நைவேத்தியம் செய்து பலருக்கும் அதை விநியோகம் செய்யலாம்.
புரட்டாசி மாத நவராத்திாி தினங்களில் அம்பாள் ஊசி மேல் அமர்ந்து தவம் செய்வதால் ஊசி நூல் கொண்டு பழைய துணிகளை தைக்கக் கூடாது. பூஜை அறையில் ஏற்றப்படும் தீபமானது தானாகவே சமாதானம் ஆகட்டும். நாமாக அதை சாந்தப்படுத்த வேண்டாம்.
ஆக, புரட்டாசியில் நியம, நிஷ்டைகளுடன் பெருமாள் சம்பந்தப்பட்ட வழிபாடுகளை மேற்கொள்வோம், பெருமாளின் அருளை பூரணமாகப் பெறுவோம்!