நம்மில் பலரும் சந்தோஷமாக இருந்தாலும், சோகமாக இருந்தாலும் முதலில் செல்லும் இடம் கோவிலாக தான் இருக்கும். என்னதான் நம் வீட்டில் பூஜை அறையில் கடவுள் படங்கள் வைத்து வழிபட்டாலும், கடவுளை அவரின் இடத்திற்கு சென்று பார்ப்பதால் ஒருவித நிம்மதி கிடைக்கிறது. கோவிலில் எப்போதும் நேர்மறையான ஆற்றல் இருக்கும். இதனால் கோவிலுக்கு செல்பவர்களின் மனநிலை நிம்மதி அடையும்.
கோவிலுக்கு செல்லும் முன்பும், சென்ற பிறகும் நாம் சில விடயங்களை செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் எதிர்மறை ஆற்றல் கிடைக்க பெற்று மீண்டும் கஷ்டங்கள் ஏற்படும்.
கோவிலுக்கு செல்லும் போது செய்ய வேண்டிய, செய்யக்கூடாத விஷயங்கள்:
கோவிலுக்கு செல்லும் முன்பும், போயிட்டு வந்த பிறகும் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.
குளிக்காமல் கோவிலுக்கு செல்லக் கூடாது.
கோவிலுக்கு செல்லும் முன் வீட்டை சுத்தமாக துடைத்து விட்டு, பூஜை அறையை சுத்தம் செய்வது நல்லது.
கோவிலுக்கு சென்று வந்த பிறகு விளக்கேற்றி வழிபடலாம்.
ஆண்கள் லுங்கி மற்றும் டி-ஷர்ட் அணிவதை தவிர்க்க வேண்டும். தலையில் தொப்பி, துணி போன்றவை போடக்கூடாது. மற்றவர்கள் கவனத்தை திசை திருப்பும் விதத்தில் உடைகளை அணிந்து செல்ல கூடாது.
கோவில் உள்ளே நுழைவதற்கு முன்பாக முதலில் கோபுர தரிசனம் செய்ய வேண்டும்.
பலரும் கோவில் வாயிற் படியை மிதிக்காமல் தாண்டி செல்வார்கள். அதற்கு காரணம் என்னவென்றால், நமக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் கோவிலின் வெளியில் விட்டு, தாண்டி போகிறோம் என்பது நம்பிக்கை. எனவே வாயிற் படியை மிதிக்காமல் செல்ல வேண்டும்.
சிவபெருமான் கோவில் என்றால் நந்திக்கும், லிங்கத்திற்கும் இடையில் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் சிவன் கோவிலில் தரிசனம் செய்த பிறகு சிறிது நேரம் அமர்ந்துவிட்டு தான் வர வேண்டும். பெருமாள் கோவிலில் அமரக்கூடாது.
கர்ப்பகிரகத்தின் உள்ளே கடவுளை அலங்கரிக்கும் போது திரையிட்டு மறைத்திருப்பார்கள். எனவே அந்த சமயத்தில் கடவுளை பார்க்கவோ, வணங்கவோ கூடாது.
ஆரத்தி காட்டும் போது இரு கைகளால் தொட்டு வணங்க வேண்டும். ஒரு கையில் போன் வைத்துக்காெண்டு அல்லது அர்சனை தட்டு வைத்துக்கொண்டு தீபத்தை தொட்டு வணங்க கூடாது.
விபூதி, குங்குமம் நெற்றியில் வைத்துக்கொண்ட பிறகு அதை கோவிலில் உள்ள தூண் போன்ற இடங்களில் வைக்க கூடாது. வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைக்க வேண்டும்.
கோவிலை அவசர அவசரமாக சுற்றி வரக்கூடாது.
கோவிலில் பெரியவர்களை கண்டால் அவர்களின் காலில் விழுந்து வணங்க கூடாது.
முக்கியமாக கோவிலில் மற்றவர்களை தொந்தரவு செய்யும் விதமாக போனில் சத்தமாக பேசக்கூடாது.
கடவுளை மறைத்து நின்று ஒருவர் வழிபட்டாலும் அவர்களை திட்டாமல் விலகி நின்று சாமி கும்பிடலாம்.
குடும்ப கதைகளை பேசுவதை தவிர்க்க வேண்டும். கோவிலில் அமர்ந்து மற்றவர்களை சபிக்கும் விதத்தில் பேசவோ, நினைக்கவோ கூடாது.
வந்த உடனே குளிக்கவோ, கால்களை நீரில் கழுவவோ கூடாது.