பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

Difference Between Vision and Observation
Difference Between Vision and Observation
Published on

குருகுல வாசத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் சமமாகவே வில் வித்தையைக் கற்றுக் கொடுத்தார் துரோணாச்சாரியார். கௌரவர்களில் மூத்தவனான துரியோதனன் பொறாமை மட்டுமல்ல, ஆணவமும் கொண்டவன். வில் வித்தையில் தானே சிறந்தவன் என்ற மமதையும் அவனுக்குள் இருந்தது. ஆனால், வில் வித்தையில் சிறந்தவன் அர்ஜுனன்தான் என்பது துரோணாச்சாரியாருக்கு தெரியும். இந்த உண்மையை துரியோதனனுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி அதற்குரிய தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார் துரோணாச்சாரியார்.

ஒரு நாள் பெரிய மாமரத்தின் கீழே வில் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. மரத்தில் பல பழங்கள் இருந்தாலும் மரத்தின் உச்சியில் பெரிய பழம் ஒன்று தொங்குவதைக் கண்டு துரியோதனனை அருகில் அழைத்தார் துரோணாச்சாரியார். அந்தப் பழத்தை சுட்டிக்காட்டிய அவர், ‘உனது வில் ஆற்றலால் அதை அடி பார்க்கலாம்’ என்றார். அவனும் வில்லில் நாணைப் பூட்டி குறி வைத்தான்.

துரோணாச்சாரியார் கேட்டார், “துரியோதனா, மரம் தெரிகிறதா?”

“தெரிகிறது குருவே” என்றான் துரியோதனன்.

“கிளைகள் தெரிகின்றனவா?” என்றார் குரு.

“தெரிகின்றன குருவே” இது துரியோதனன்.

“பழம் தெரிகிறதா?” என்று கேட்டார் குரு.

“தெரிகிறது குருவே” என்றான் துரியோதனன்.

 “அடி பார்க்கலாம்” என்றார் குரு.

அடித்தான் துரியோதனன். பழம் விழவில்லை. ஆனால், ஐந்தாறு இலைகள் மட்டுமே விழுந்தன. துரியோதனன் தலை குனிந்தான்.

அடுத்ததாக, அர்ஜுனனிடம் இதே கேள்விகளைக் கேட்டார் துரோணாச்சாரியார்.

“நீங்கள் சொன்னது எனக்கு எதுவும் தெரியவில்லை குருவே” என்றான் அர்ஜுனன்.

“கடைசி கேள்விதான் முக்கியம். பழம் தெரிகிறதா?” எனக் கேட்டார்.

“இல்லை” என்றான் அர்ஜுனன்.

துரியோதனன் துள்ளிக் குதித்தான். ‘பழம் கூட தெரியவில்லை. இவன் எப்படி அதை அடிக்கப் போகிறான்’ என நினைத்தான்.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!
Difference Between Vision and Observation

அர்ஜுனன் எதையும் பார்க்கவில்லை. ‘பழத்தின் மீது அடித்தால் அது சிதறிவிடும். பிறகு எப்படி அதை குருவுக்கு சமர்ப்பிக்க முடியும்?’ என யோசித்து, பழத்தை தாங்கிக் கொண்டிருந்த காம்பை உற்று கவனித்து. அதன் மீது அம்பைச் செலுத்தினான். பழம் விழுந்தது. தனது உடையால் ஏந்தி பழத்தைப் பிடித்தான். அதை குருவிற்கு சமர்ப்பிக்க அவரும் மகிழ்ந்தார்.

துரியோதனன் வெட்கித் தலை குனிந்தான். துரியோதனன் பார்த்தது பார்வை. அதனாலேயே அவனுக்கு பழம் கிடைக்கவில்லை. அர்ஜுனன் பார்த்தது கவனிப்பு. அதனாலேயே அவனுக்குப் பழம் கிடைத்தது.

வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் வேடிக்கையாகப் பார்த்தால் வேடிக்கை மனிதர்களாகத்தான் நாம் ஜோடிக்கப்படுவோம். எல்லா விஷயத்தையும் கவனிக்கத் தொடங்கினால் வெற்றி பெற்ற மனிதராகத் திகழலாம். பேசும்போது ‘நாம் பார்த்தேன், கவனித்தேன்’ என்னும் சொற்களைப் பயன்படுத்துகிறோம். அதற்கு பொருள் ஒன்றுதான் என்று நாம் நினைக்கிறோம். பார்த்தல் என்பது மேலோட்டமானது. கவனித்தல் என்பது கண்ணும் கருத்தும் ஒன்றிப் பார்ப்பது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com